
சிவபெருமானின் உபதேசப்படி மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனால் முருகன் அவதாரம் நிகழ்ந்தது. மலை மகளாம் பார்வதி தேவி, அலை மகளாம் திருமகளைப் போற்றி, விரதம் மேற்கொண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள். நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளைப் பெறவும், அனைத்துச் செல்வங்களும் பெற்று குடும்பம் செழிக்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும் மேற்கொள்ளும் வழிபாடே வரலட்சுமி விரதம்.
கஜலட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி, தானிய லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, ஆதிலட்சுமி, வித்யா லட்சுமி என அஷ்ட லட்சுமிகளையும் நெஞ்சிலே நினைத்து, அவர்களின் பிரவேசம் குடும்பத்தில் நிகழ்ந்திட மகளிர் நோற்கும் அற்புதமான விரதம்.
இந்த விரதம் மேற்கொண்டு பலன் பெற்ற சாருமதி, சித்ரநேமி என்ற கந்தர்வன் ஆகியோரின் வரலாறு சுவாரஸ்யமானது.
மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் நகரில் பிறந்து வாழ்ந்து வந்தாள் சாருமதி. கற்பில் சிறந்தவள். தன் கணவன், மாமனார், மாமியாருக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள். தன் கணவன் உஞ்ச விருத்தி மேற்கொண்டு பெற்ற அரிசியை அடிசிலாக்கி வறுமையிலும் பெருமையான வாழ்க்கையை நடத்தி வந்தாள். எத்தகைய வறுமையிலும் இறைவனை வணங்கிடத் தவறியதில்லை. அவளுக்கு அருள்புரிய நினைத்த மகாலட்சுமி, சாருமதியின் கனவில் தோன்றினாள். ""உனது சிறப்பான பக்தி எனது நெஞ்சை நெகிழ வைத்தது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்'' என்றாள். அதன்படி சாருமதி மேற்கொண்ட விரதமே வரலட்சுமி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.
கயிலாயத்தில் ஒருநாள் சிவபெருமானும், உமாதேவியும் "சொக்கட்டான்' என்ற பகடை விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். "விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்' என்றார் சிவன். ஆனால் உமாதேவியோ, ""இல்லையில்லை. சொக்கட்டான் விளையாட்டில் வென்றவள் நானே'' என்றாள். அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம், "நீதான் யார் வெற்றி பெற்றது என்று கூற வேண்டும்' என்று சிவபெருமான் சொல்ல, அவனோ, "சிவபெருமான்தான் வெற்றி பெற்றது' என்றான். சித்ரநேமி பொய்யான தீர்ப்பு கூறியதாக எண்ணிக் கோபமடைந்த உமாதேவி, "நீ பெருநோய்க்கு ஆளாவாய்' என்று சாபமிட்டாள். தன்னை மன்னிக்குமாறு சித்ரநேமி வேண்ட, "கற்புக்கரசிகள் வரலட்சுமி விரத பூஜை செய்வதை நீ பார்க்கும்போது, உன் பெருநோய் நீங்கும்' என்றாள். அதன்படி சித்ரநேமியும் அந்த விரதத்தைக் கண்டு நோய் நீங்கப் பெற்றான். எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ள நோய்நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.