எல்லாம் தரும் எடமணல் ஈசர்!

தல யாத்திரையை மேற்கொண்டிருந்தார் சுந்தரர். அப்போது கோடைகாலம். கடுமையான வெயில். எங்கும் வெப்பத்தினால் புழுக்கம். நாக்கு வறண்டு தண்ணீர் தாகமும் பசி வேட்கையும் மிகுந்திருந்தது. இதனால் சோர்வுற்று மனம் வரு
எல்லாம் தரும் எடமணல் ஈசர்!
Updated on
2 min read

தல யாத்திரையை மேற்கொண்டிருந்தார் சுந்தரர். அப்போது கோடைகாலம். கடுமையான வெயில். எங்கும் வெப்பத்தினால் புழுக்கம். நாக்கு வறண்டு தண்ணீர் தாகமும் பசி வேட்கையும் மிகுந்திருந்தது. இதனால் சோர்வுற்று மனம் வருந்திய சுந்தரர், சிவபெருமான் திருவருளை நினைந்து அடியார்கள் சூழநடந்து வருகிறார். மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். தம்பிரானாகிய இறைவரின் தோழர் அல்லவா சுந்தரர்! அவரது தவிப்பையும் பசிக்கொடுமையின் வேதனையையும் கண்டு மனம் குழைந்த பெருமான், அவரது துயரை மாற்றத் திருவருள் செய்தார். நடந்துவரும் வழியில் வெயிலின் சூட்டை அடியோடு மாற்றும் வகையில் குளிர்ச்சியைத் தரும் குளம் போன்று அழகான கோடைப்பந்தலை அமைத்தார். சீலம் மிகுந்த அந்தணர் வடிவம் கொண்டு, தோழராகிய சுந்தரர் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் பெருமான்.

மாசிலா மறையவரைக் கண்ட சுந்தரர் ""சிவாய நம'' என்று கூறி தம் அடியார் கூட்டத்துடன் அவரருகில் சென்றார். அவரிடம் பேரன்புடன் பேசி பந்தலின் கீழ் அமர்ந்தார். ""தாங்கள் பெரிதும் பசியோடு இருக்கின்றீர்; இங்கே நல்ல சுவையுடன் பல வகை சித்ரான்னங்கள் உள்ளன; அவற்றை திருப்தியுடன் உண்டு ஏலக்காய் பொடி வாசம் மிகுந்த குளிர்ந்த தண்ணீரைப் பருகி இளைப்பாருங்கள்'' என்று அன்புடன் கூறினார் அப்பெருமகனார். ருசி மிகுந்த கட்டு சாதங்களை விருப்பத்துடன் உண்டனர் சுந்தரரும் மற்ற அடியார்களும். வாசனை மிகுந்த தண்ணீரையும் சுவைத்துக் குடித்துத் தாகம் நீங்கி இன்புற்றனர்.

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா? அதுவும் கோடைக்காலம் வேறு. பசியுடன் பல காத தூரம் நடந்துவந்து, சுவையான அமுதும் உண்ட பின், அனைவரும் தங்களை அறியாது ஓய்வெடுத்துக் கொண்டனர். களைப்பு நீங்க சற்று கண் அயர்ந்தனர். அவ்வளவுதான்! வேதியராக வந்து உணவு அளித்த வேத முதல்வன் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டார். நிழல் கொடுத்த பந்தலையும் காணவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எதுவும் தெரியாததுபோல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை. மூத்த பிள்ளையார்தான். அவருடைய பெயரும் கட்டமுது விநாயகர் என்பதுதான். அவர் வசிக்கும் இடம்தான் எடமணல்.

சுந்தரரும் தொண்டர்களும் கண்விழித்துப் பார்த்தபோது வேதியரையும் காணவில்லை; வெயிலுக்குப் போட்ட பந்தலையும் காணவில்லை. இறைவன் திருவருளை எண்ணி வியந்து,

""பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்''

""ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்'' என்று பாடினார் சுந்தரர்.

பசியின் கொடுமையால் உயிர்க்குக் கேடு நேர்ந்துவிட்டால் சிவபெருமான் உரிய நேரத்தில் அடியவரைக் காக்கவில்லை; அதனால் ஆருரன் வாழ்வு முடிந்தது என்ற பழி வராமல் இறைவன் அவருடைய பசிப்பிணியகற்றி ஆட்கொண்டார்.

தமது பசிப்பிணி நீக்கி அருளிய திருக்குருகாவூர் வெள்ளாடை ஈசனை மனமாறப் பாடி இன்புற்றார். இத்தலம் எடமணல் அருகில் உள்ளது. திருக்குருகாவூர் என்பது ஊரின் பெயர். வெள்ளாடை என்றால் பரமாகாசம் - அது கோயிலின் பெயர்.

சீர்காழியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எடமணல் கிராமம். இறைவன் சுந்தரருக்கு உணவளிக்கப் பந்தல் அமைத்து எழுந்தருளிய இடம் ""சித்திரப் பந்தலடி'' என்ற பெயரில் அருகில் உள்ளது. அடியார்கள் அனைவரும் வரிசையாக பந்தியில் அமர்ந்து உணவு உண்ட இடத்தை பந்திக்கிராமம் அல்லது வரிசைப் பத்து என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

""எல்லோருக்கும் கட்டமுது பற்றுமா? (போதுமா?'') என்று மறையவரிடம் கேட்ட சுந்தரர்க்கு "பற்றும்' என்று பெருமான் பதில் அளித்தாராம். அவ்விடம் தற்போது "பத்தம்' என்று அழைக்கப்படுகிறது. எனவே வரிசை பத்து சுற்றியுள்ள பல கிராமங்கள் சுந்தரருக்கு கட்டமுது அளித்த வரலாற்றுச் செய்திகளுடன் தொடர்புடையதாக இன்றும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

எடமணல் கட்டமுது விநாயகர் கோயிலிருந்து திருக்குருகாவூர் வரை உள்ள வரிசைப்பத்து என்ற பகுதியில் பத்து லிங்கங்கள் வரிசையாக இருந்தனவாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மணலில் புதையுண்டு விட்டனவாம். அதில் ஓதவனேச்வரர் என்ற பெயருடைய லிங்கப் பெருமானுக்கு கோயில் கட்டி திருப்பணி செய்துள்ளார்கள்.

எடமணல் ஊரைச் சேர்ந்த பெரியோர் சிலர் 1983ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடம் மகாசுவாமிகளை தரிசித்தனர். அப்போது வரிசைப் பத்து சிவ லிங்கங்களைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னாராம் சுவாமிகள். அவை மார்க்கண்டேய முனிவரும் ராமலெட்சுமணரும் பூஜித்த சிறப்புடையது என்றும் தெரிவித்தாராம். புதையுண்ட மற்றொரு லிங்கத்தை வெளிக்கொண்டு வந்ததைக் கேட்டு, ""இந்த சிவலிங்கத் திருமேனிக்கு காசிவிச்வநாதர் என்ற பெயர் என்றும் விசாலாட்சியம்மனோடு கோயில் கட்டுமாறும் பணித்தாராம். கட்டமுது விநாயகர் கோயிலை ஒட்டியே இத்திருப்பணி செய்யுமாறும், இத்திருக்கோயில் பிற்காலத்தில் மிகவும் விசேஷமாக விளங்கும் எனவும் ஆசியளித்தாராம்.

அவ்வகையில் விசாலாட்சி சமேத காசி விச்வநாதர் திருக்கோயிலை அமைக்கும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டமுது விநாயகர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சந்நிதியும் உள்ளது. இங்கே ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று கட்டமுது வழங்கும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

காசிவிச்வநாதர் திருக்கோயில் வளாகத்தில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமண்யர், கஜலட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர், அஷ்டபுஜகாளி, நவகிரகங்கள், சண்டிகேச்வரர் ஆகிய அனைத்து சந்நிதிகளும் அமைக்க முடிவு செய்து, வருகிற மே 31ஆம் நாள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாம் தரும் எடமணல் ஈசரை வழிபட்டு நாமும் நன்மை அடைவோம்.

மேலும் தகவலுக்கு 24474631 மற்றும் 99520 18904.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com