
பாபநாசம் தாலுகாவின் தென்பகுதியில், தஞ்சையிலிருந்து நாகைக்கு செல்லும் புகைவண்டிப் பாதையிலுள்ள சாலியமங்கலம் என்னும் ஊருக்கு தெற்கே உள்ளது திருபுவனம்.
இன்று சிற்றூராகக் காட்சி தரும் இவ்வூர் 12ஆம் நூற்றாண்டுகளில் சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ளது. இவ்வூரின் வடக்கே வீரசோழ வடவாறும் தெற்கே பரவை ஏரியும் உள்ளன. நாட்டுப் பாடல்களில் இவ்வூர் எண்பது வீதிகளைக் கொண்டது என்று பதிவாகியுள்ளது. கல்வெட்டில் "திரிபுவன வீரபுரம்' என்று இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.
திருபுவனம் பெருநகரமாக இருந்தபோது வீரசோழ வடவாற்றின் கரையில் சிவன் கோயிலும், ஊரின் நடுவே திருமால் கோயிலும், தெற்கே ஐயனார், பிடாரி கோயில்களும் இருந்திருக்கின்றன. இவை இன்று முழு வடிவில் காணக் கிடைக்கவில்லை. சிவன் கோயில் சிதைவுண்டு புதைந்துகிடக்கிறது. திருமால் கோட்டம் இருந்த இடம் என்பதற்கு சான்றாக திருச்சுற்று மதிற்சுவரில் சில பகுதிகளும், கருவறையின் அடித்தளமும் எஞ்சி நிற்கின்றன.
திருமால், திருமகள் விக்ரகங்கள் புதைந்து சீர் கெட்டுக் கிடந்ததைக் கண்ட ஊரார், சில ஆண்டுகளுக்கு முன்னர் அத்திருமேனிகளை எடுத்து கோயில் திருமுற்றத்திலேயே கீற்றுக் கொட்டகையிட்டு அமைத்தனர். கீற்றுக் கொட்டகை தற்போது மங்களூர் ஓடாக மாற்றம் பெற்றிருக்கிறது.
மங்களூர் ஓடு போட்ட கொட்டகைக்குள் ஒன்பதடி அளவில் நெடிதாக அரிதுயில் கொண்டுள்ள பெருமாள் திருமேனியும், நான்கடி அளவில் அமர்ந்த நிலையிலுள்ள திருமகள் திருமேனியும் சிற்பத்தால் சிறந்து உயிர்ப்புடன் விளங்குகின்றன. இச்சிதைந்த கோயிலுக்குள் கிடந்த நரசிங்கமூர்த்தி, இராமபிரான், சீதா பிராட்டியார் ஆகிய தெய்வத் திருமேனிகளுடன், நம்மாழ்வார், இராமானுஜர், இரண்டு சேனை முதல்வர்கள் ஆகியோருடைய படிமங்களும் ஒரு சேர எடுக்கப்பட்டு மூலவருடனேயே வைக்கப்பட்டுள்ளனர். கொட்டகைக்குள் இறைவன் குடியிருக்கும் நிலை மாறி திருபுவனம் புதிய பொலிவு பெற வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.
மேலும் தகவலுக்கு 99408 27384.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.