
திருவிடைமருதூரில் எழுந்தருளும் மகாலிங்கப் பெருமானை குரு பகவான் வழிபட்டார். அப்போது, ""உனது பாவங்கள் தீர திருலோக்கி ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரேசரை வழிபட வேண்டும்'' என இறைவன் பணித்தார். அதன்படியே குருபகவான் திருலோக்கி வந்து வழிபட்டார். அவருக்கு ரிஷப வாகனத்தில் தேவியாருடன் ஆலிங்கன மூர்த்தியாக தோன்றி காட்சியளித்தார் இறைவன்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிந்து போன மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுக்குமாறு இறைவனை வழிபட்டு தவமிருந்தாள் ரதி. அவளது தவத்துக்கு இரங்கிய இறைவன் இந்தத் தலத்தில்தான் மன்மதனை உயிர்ப்பித்தார் என்பது தல வரலாறு.
இப்படிப்பட்ட பெருமை மிகுந்த திருலோக்கி, தஞ்சை மாவட்டம், திருவிடை
மருதூர் வட்டத்தில் உள்ளது.
ராசராச சோழனின் மனைவியருள் ஒருவரான திரைலோக்கிய மாதேவியாரின் பெயரில் "திரைலோக்கிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம்' என்று அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் மருவி திருலோக்கி என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் அகிலாண்டேசுவரி சமேத சுந்தரேசப் பெருமான் அருள்புரிகிறார். இவரை கருவூர்த்தேவர் எனும் சித்தர் பதினோரு திருவிசைப்பாக்களால் போற்றிப் பாடியுள்ளார். அவை ஒவ்வொன்றிலும் "திரைலோக்கிய சுந்தரனே' என்று குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பக்கங்களிலும் தேரோடும் வீதிகளைக் கொண்டு திகழும் திருலோக்கியின் நடுவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கி மொட்டை கோபுரத்துடன் கூடிய கோயில் நுழைவாயிலை அடுத்து வெளவால் நந்தி மண்டபம் உள்ளது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் 36 தூண்களைக் கொண்ட மண்டபம். இதன் வலப்புறம் அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி.
அடுத்துள்ள மண்டபத்தின் மேற்குப் பகுதியின் வடக்கில் ரதியும் மன்மதனும் அணைத்தெழுந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். தெற்குப் புறம் ரிஷபாருடர், பார்வதி தேவியாருடன் ஆலிங்கன மூர்த்தியாக குரு பகவானுக்கு காட்சியளிப்பதை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவரின் மூலஸ்தானம் உள்ளது. அங்கு சிவலிங்கமான இறைவன் வீற்றிருக்கிறார். தெற்குப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதியும், மேற்குப் பிராகாரத்தில் நால்வர் சிலைகளும், விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகளும் கஜலட்சுமி சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தின் தென்புறம் சண்டேசுவரர் சந்நிதி மற்றும் துர்க்கையம்மன் சந்நிதியும் கோஷ்டத்தில் பிரம்மா சந்நிதியும்
அமைந்துள்ளன.
இத்தலத்தில் நடராஜர், சிவகாமி சமேதராக இடது காலைத் தூக்கி அருள்புரிகிறார். அவருக்குக் கிழக்கில் பைரவர், சனிபகவான், சூரிய சந்திரர் சந்நிதிகள் உள்ளன.
பிரிந்தவர் இணைவர்: இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுந்தரேசப் பெருமானை தரிசித்தால் தடைபட்ட திருமணம் நடப்பதுடன் மக்கள் பேறு கிடைக்கும் என்பதும், பிரிந்த தம்பதியர் இணைந்து வாழ்வார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. குருவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அகிலாண்டேசுவரி சமேத சுந்தரப் பெருமான் ஆலயத்தில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன.
அமைவிடம்: திருப்பனந்தாளுக்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருலோக்கி. குடந்தையிலிருந்து 38, மயிலாடுதுறையிலிருந்து 40 ஆகிய எண்களைக் கொண்ட நகரப் பேருந்துகள் மூலம் இவ்வூரை அடையலாம்.
மேலும் தகவலுக்கு 94437 14384.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.