
அண்ணலார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மெக்காவை விட்டு மதினாவுக்கு பயணம் செல்லத் தொடங்கியதிலிருந்து ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்படுகின்றது. ஹிஜ்ரி 1434ஆம் ஆண்டு, இன்று (16.11.2012)பிறக்கின்றது.
இம்மாதத்தின் 10ஆம் நாள் (25.11.12) சிறப்புகுரிய நாள். இதனை "ஆஷீரா' தினம் என்று கூறுவர். அண்ணலார் முஹம்மது(ஸல்) அவர்களின் திருப்பெயரர் இமாம் ஹுசைன்(ரலி) அவர்கள் இஸ்லாமிய மக்களாட்சியை நிலை பெறச் செய்வதற்காக "கர்பலா' எனும் செருக்களத்தில் எஜீதுடன் மோதி, உயிர் நீத்த நாளாக இதே பத்தாம் நாள் நினைவு கூரப்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், "முஹர்ரம்' பத்தாம் நாள் பல சிறப்புறு நிகழ்வுகள் நடந்த தினமாகும்.
முதல் மனிதரும் முதல் இறைத்தூதரும் ஆன நபி ஆதம்(அலை) அவர்கள் சுவனத் தோட்டத்தில் உலவியபோது, இறைவனின் ஆணைக்கு அடிபணியாதபோது இப்புவியில் அவரும் அவர்தம் மனைவியும் இறங்கச் செய்தனர். அதன் பின் உண்மையை உணர்ந்து நபியவர்கள் அழுது புலம்பி இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரினார். அவர்தம் இறைஞ்சுதலை ஏற்று மன்னிப்பு வழங்கியதும் இதே பத்தாம் நாள்தான்.
இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்கள், அவர் காலத்து மக்களிடையே ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக, சத்திய சன்மார்க்கப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.
அம்மக்களோ அதனை ஏற்க மறுத்ததோடு அல்லாமல் எதிர்ப்பு தெரிவித்துக் குழப்பம் தெரிவித்தனர். அக்கிரமம் செய்த மக்களை அழித்தொழிப்பதற்காக உண்டாக்கிய மாபெரும் வெள்ளத்திலிருந்து இறைத் தூதரைக் காப்பாற்றும் பொருட்டு அவர்கள் ஏறியிருந்த மரக்கலம் "ஜுதி' என்னும் மலையில் வந்து நின்றதும் இதே நாளில்தான்.
இந்த நாளில்தான் இறைத்தூதர் யூனுஸ் (அலை) அவர்களின் குற்றத்தை மன்னித்து இறைவன் மீன் வயிற்றிலிருந்து அவர்களை விடுவித்தான். முன்னதாக யூனுஸ் (அலை) அவர்களின் குற்றங்களுக்காக மீன் ஒன்று அவர்களை விழுங்கியிருந்தது என்பது வரலாறு.
இறைத்தூதர் மூஸô(அலை) அவர்கள் ஓரிறைப் பிரச்சாரம் புரிந்த அந்நாளில், கொடிய மன்னனான "பிர்ஒளன்' ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொடுங்கோலாட்சி புரிந்து வந்தான். மூஸô (அலை) அவர்களும் அவரைப் பின் பற்றிய மக்களும் அம்மன்னனின் இரும்புப் பிடியிலிருந்து விடுபட்டு,நலமே "நைல்' நதியைக் கடந்து சென்றனர்.அப்போது பின் தொடர்ந்து வந்த மன்னனும், படைகளும் "நைல்' நதியில் மூழ்கடிக்கப்பட்டதும் இதே நாளில்தான்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூரர் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தின் தலை மகனாக இருந்த காலம் அது! "இஸ்லாத்தின் தந்தை' எனவும் அன்று தொட்டு இன்று வரை போற்றப்பட்டு வரு
கிறார்.
"நம்ரூத்' என்னும் கொடுங்கோலன் நபி அவர்களின் ஓரிரைக் கொள்கையை முற்றாக அழித்தொழிக்க எண்ணி, நெருப்புக் கிடங்கை உருவாக்கி, அதில் தூதரவர்களைத் தூக்கி எறிந்தான். என்னே அற்புதம்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு குளிர் சோலையாக மாறியது. அந்த நாளும் இதே முஹர்ரம் பத்தாம் நாள்தான்.
இன்று "முஹர்ரம் பண்டிகை' என்று கூறிக்கொண்டு ஒரு சில இடங்களில் நடக்கும் அனாச்சாரங்களுக்கு இஸ்லாத்தில் இம்மியளவிலும் இடமில்லை.
மேற்கூறிய இறைத்தூதர்கள் ஆதம்
(அலை), நூஹ்(அலை), யூனுஸ்
(அலை), மூஸா (அலை), இப்ராஹும் (அலை) ஆகியோரின் வியப்பூட்டும் நிகழ்வுகள் நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன என்பதைத்தான் நாம் இன்று கண்ணுற வேண்டும்.
இறை நம்பிக்கையுடன் கூடிய இறையச்சத்தை நாம் ஒவ்வொருவரும் இதயத்தில் பதிந்து, இறை ஆணையையும் நபி வழியையும் நம் இரு கண்களாகக் கொண்டு சத்திய நெறியில் சளைக்காமல் வாழ்ந்து சிறக்க வேண்டும்.
""இம்மை கானல் நீர்; மறுமையே நிரந்தர வாழ்விடமாகும்'' என்பதை உறுதியுடன் ஏற்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம்மீது பொழியட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.