ஹரம் பின் ஹய்யான் என்ற பெரியாரிடம் பல மாணவர்கள் கல்வி பயின்றனர். அவரின் இறுதி வேளையில் அவரின் மாணவர்கள் ""எங்களுக்கு வஸிய்யத் (மரண சாசனம்) செய்யுங்கள்'' என்று வேண்டினர்.
அப்பெரியவர், ""வஸிய்யத் என்பது பொருள் பங்கீடு பற்றி அந்திம காலத்தில் அறிவிப்பது. என்னிடம் பங்கீடு செய்வதற்கு பொருள் எதுவும் இல்லை. எனினும் குர்ஆனில் சூரத்துந் நஹ்ல் அத்யாயத்தின் இறுதி மூன்று வசனங்களை உறுதியாய்க் கடைபிடிக்குமாறு வஸிய்யத் செய்கிறேன்'' என்று கூறினார்.
மதீனாவில் இறக்கப்பட்ட இம்மூன்று வசனங்களும் அருளப்பட்ட வரலாற்றை ஆய்ந்தால் அவ்வசனங்களில் பொதிந்துள்ள பொருளின் ஆழத்தை அறியலாம்.
உஹத் போரில் மதீனாவைச் சேர்ந்த 64, மக்காவைச் சேர்ந்த 6 இஸ்லாமிய வீரர்களை எதிரிகள் சித்ரவதை செய்து கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் முஹம்மது(ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹழ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களும் ஒருவர். இக்கொடுமையைக் கண்டு கொதித்த இஸ்லாமியர்கள் பழிவாங்க துடித்தனர். அப்பொழுது அருளப்பட்டதே அல்குர்ஆனின் 16வது அத்யாயத்தில் 126,127,128-வது வசனங்கள்.
""உங்களுக்கு வேதனை செய்தவர்களை நீங்கள் வேதனை செய்து பழிவாங்குவதாக இருந்தால் நீங்கள் எப்படி வேதனை செய்யப்பட்டீர்களோ அந்த அளவு போன்றே வேதனை செய்யுங்கள். ஆயினும் நீங்கள் பொறுமையுடனிருந்து விட்டாலோ அதுவே பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்தது''.
""நபியே நீரும் பொறுமையுடனிரும். உம்முடைய பொறுமையானது அல்லாஹ்வைக் கொண்டல்லாமல் இல்லை. அவர்கள் மீது நீர் கவலைப்படாதீர். அவர்கள் சூழ்ச்சி செய்கிறது பற்றி நீர் மன நெருக்கடிக்கும் ஆளாகிவிடாதீர்''.
""நிச்சயமாக எவர்கள் பய பக்தி உடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுடனும் எவர்கள் நன்மை செய்கின்றனரோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கின்றான்''.
ஆகியவையே அந்த வசனங்கள்.""கொலையிற் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனோடு நேர்'' என்ற குறள் கொலையாளிகளையும் கொடியவர்களையும் தண்டிப்பதை நியாயப்படுத்துகிறது. அக்காலத்தில் பழி வாங்குதலும் ஒரு தண்டனையே. பழிவாங்குவதிலும் ஒரு நீதி வேண்டும். ஒருவர் எந்த அளவு வேதனை செய்யப்பட்டாரோ அதே அளவு வேதனை செய்தவரை வேதனை செய்ய வேண்டும். கூடுதலாக வேதனை செய்வது குற்றமாகும். எனவேதான் மூன்று வசனங்களில் முதல் வசனம் அளவை நிர்ணயிக்கிறது. அவ்வாறு அளந்து பழி வாங்குவது மனிதனால் இயலாதது; முடியாதது.
பாதிக்கப்பட்டதும் எழும் பழி வாங்கும் உணர்வைப் பக்குவமாய் அடக்க பழிவாங்குவதற்கு அளவைக் காட்டி அவ்வளவைக் கூட்டுவது குற்றமென்றுரைத்து சற்று நிதானிக்க வைத்து, உற்ற முறையில் குற்றம் கடியாது பழி வாங்கலை விடுத்து பொறுமையைக் கடைபிடிப்பது சிறந்ததென்று பொறுமையை போதிக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்குத் துன்பம் விளைவித்ததாக எவரையும் பழி வாங்கியதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பது முஸ்லீம் நூலில் காணப்படுகிறது.
எனவே நாமும் இன்னா செய்தாரை ஒறுக்காது அவர் நாண நன்னயம் செய்து நல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.