

வறியார்க்கொன்று ஈவதே ஈகை' என்று குறள் கூறுகிறது. ஒன்றைச் செய்வோரது பெருமையையே உலகத்தார் சிறந்தது எனப் போற்றுவர். அதுபோல் ""மெய்ந்நெறி வகையில் மிகச் சிறியேனாகிய எனக்கு அருள் புரிந்த உனது பெருமையினும் சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை'' என்கிறது இந்தப் பாடல். 9ஆம் திருமுறையில் வரும் திருப்பூவணம் தலம் குறித்த பதிகத்தில் வரும் ஒரு பாடல் இது. கருவூர்த் தேவர் இயற்றியது.
""திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண்டிங்ஙன்
சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணம் கோயில் கொண்டாயே''
திருப்பூவணத்தில் கோவில் கொண்ட இறைவனைப் பாடும் கருவூர்த் தேவர், தலத்தின் வர்ணனையையும் சேர்த்தே இந்தப் பாடலில் வைக்கின்றார்.
இவ்வுலகினை ஆண்டுகொண்டு அருள் புரியும் இறைவன் நமக்கும் திருவருள் புரிந்தான். சிறியனாகிய அடியேனுக்கும் இனியது காட்டிப் பேரருள் புரிந்தான். என்றும் ஆனந்தம் தரும் நின் பெருமையினைக் காட்டிலும் இந்த உலகில் பெரிது ஏதும் உண்டோ! மருது, அரசு, கோங்கு, அகில் ஆகிய மரங்களைச் சாடி, மலையில் வளரும் வளம் மிகு பொருள்களான கஸ்தூரி, குங்குமம் முதலியன கவர்ந்து கடல் போலும் அலை மோதும் வையை பாயும் ஆவண வீதியாகிய கடைத்தெருவைக் கொண்டிலங்கும் பூவணம் கோயில் கொண்டவனே, ஈசனே'' என்று பாடுகிறார்.
இன்பந் தரும் பொருள் இது என்று அறிவித்து, ஆனந்தத்தைத் தர நினைந்தார் ஈசன் என்பது கருவூர்த் தேவரின் கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.