பலன்தரும் பரிகாரத் தலம்: குளத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா!

கொட்டாரக்கரை பகுதியை ஆட்சி செய்த மன்னர்... நகர்வலம் போவது போல் அவரது அரசு அமைந்த காட்டுப் பகுதியில் வனவலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பணியாளர்கள் சிலரும் வந்தார்கள்.

கொட்டாரக்கரை பகுதியை ஆட்சி செய்த மன்னர்... நகர்வலம் போவது போல் அவரது அரசு அமைந்த காட்டுப் பகுதியில் வனவலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பணியாளர்கள் சிலரும் வந்தார்கள். பல இடங்களிலும் சுற்றிவிட்டு, அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கல்லடையாற்றின் கரையில் கூடாரத்தைப் போட்டார்கள். சுற்றிய களைப்பு. அடுத்து அனைவருக்கும் உணவு ஆக்க வேண்டுமே! சுற்று முற்றும் கற்களைத் தேடினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பு செய்து, மரங்களை வெட்டி தீ மூட்டி... என்னவெல்லாம் ஆக வேண்டும்...! அப்போது அங்கே அடுப்புக்கு வைக்கும் வகையில் கற்களைக் கண்டார் ஒருவர். அதில் ஒன்று சற்றே அளவில் பெரிதாகத் தெரிந்தது. வேறு கற்களைத் தேடியும் கிடைத்தபாடில்லை. ஒருவர் யோசனை ஒன்று சொன்னார். ஏன் இதையே உடைத்து மூன்றாவது கல்லை தயார் செய்யக் கூடாது.

அந்த யோசனைப் படி, பெரிய கல்லை அங்கே வைத்து, அதனினும் பெரிய கல்லைக் கொண்டு அதனை உடைத்தார்கள். அவர்கள் உடைக்க நினைத்த கல் உடைபடவில்லை; மாறாக எதனைப் பெரிய கல்லாகக் கருதி எடுத்து உடைபட வேண்டிய கல்லின் மீது போட்டார்களோ அந்த உருவம் எட்டு துண்டுகளாக உடைந்து சிதறியது. அது மட்டுமல்ல... உடைந்த கற்களில் இருந்து ரத்தம் சிதறித் தெறித்தது.

பணியாளர்கள் பயந்து போனார்கள். பதறியபடி மன்னனிடம் ஓடோடி வந்து முறையிட்டார்கள். மன்னருக்கும் அச்சம் அதிகரித்தது. அடர்ந்த காட்டுப் பகுதி. வேறு என்ன செய்வது? உடனே மன்னரின் ஆஸ்தான தேவ ப்ரச்னம் பார்க்கும் ஜோதிடர் வரவழைக்கப்பட்டார். ப்ரச்னம் பார்க்கப்பட்டது. அவர் சொன்ன விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

அந்தக் கல்... பரசுராம úக்ஷத்ரம் என்று போற்றப்படும் மண்ணில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஐயப்பனின் விக்ரஹம் என்பது கேட்டதுமே மன்னன் உள்பட அனைவரும் பதறிப் போனார்கள். இதற்குப் பரிகாரம் என்ன? ப்ரச்னம் பார்த்த நம்பூதிரி சொன்னார்... "இங்கே நம் மரபுப் படி ஐயப்பனுக்கு ஆலயத்தை எழுப்பி, புனருத்தாரணம் செய்ய வேண்டும்'. அதன்படி, குழந்தை வடிவாக ஐயப்பனுக்கு அங்கே கோவில் எழுப்பப்பட்டது. ஸ்ரீஐயப்பன் அங்கே பாலகனாக மீண்டும் கோயில்கொண்டார்.

ஐயப்ப சுவாமி பாலகனாக அங்கே குடிகொண்டாலும், எட்டுத் துண்டுகளாக உடைந்து சிதறிய மூல விக்கிரஹத்தின் கற்களும் கருவறையில் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை பூஜை நேரங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு பின்னர் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன. குளத்துப்புழையில் கோயிலை ஒட்டி அமைதியாக கல்லடையாறு ஓடிக் கொண்டிருக்கிறது. அழகான மலை ஆறு. இந்த ஆற்றில் ஓர் அதிசயம் இங்குள்ள மீன்கள். இந்த மீன்களுக்கும் ஒரு புராணக் கதை உண்டு.

மச்சக் கன்னி என்பவள். புராண காலத்தில் இங்கே வனப் பகுதியில் இருந்தாளாம். இங்கே குளத்துப்புழையில் பாலகனாக அழகு மிளிரக் காட்சி தந்த ஐயப்பனின் மீது மையல் கொண்டாள் மச்சக் கன்னி. ஐயப்பனைத் திருமணம் செய்ய எண்ணினாள். அவரிடம் வந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பிடிவாதம் பிடித்தாள்.

ஆனால் ஐயப்பனோ திடவிரதராக இருந்தார். இயலாது என மறுத்தார். பின்னர் வேறு வழியின்றி, அவரை தரிசனம் செய்துகொண்டு அந்தப் பகுதியிலேயே இருக்கும்படி அருள்புரிய வேண்டினாள்.

அந்த வேண்டுகோளை ஏற்ற ஐயப்பசுவாமி, மச்சக்கன்னியை தன் தலம் இருக்கும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருள்புரிந்தார். அதன்படி, மச்சக் கன்னியும் அவளது தோழியரும் மீன்களாக மாறி, இந்தக் கல்லடையாற்றில் திகழ்கிறார்களாம்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கே ஆற்றின் பாலத்தில் இருந்துகொண்டு மீன்களுக்கு பொரி வாங்கிப் போடுவதைக் காணலாம். மீன்களுக்கு உணவு இட்டால், தீராத தோல் நோய் தீரும் என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.

இங்கே இன்னுமோர் அதிசயம், ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவு மீன்கள் இங்கே உண்டு. அடிக்கடி தோன்றும் வெள்ளத்தாலும் இந்த மீன்கள் அடித்துச் செல்லப்படவில்லை. எவ்வளவு வெள்ளம் வந்தாலும், மீன்கள் இந்த இடத்தை விட்டுச் செல்வதுமில்லை.

குளத்துப்புழை கோயில் கேரள கட்டுமான அமைப்பை ஒட்டி, அதே அழகுடன் திகழ்கிறது. அழகு மிகுந்த மர வேலைப்பாடு. நடுவே கோயில் கருவறை. சுற்றிலும் சதுர வடிவில் மரக் கூரை வேயப்பட்ட பிராகாரம். இந்தப் பிராகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் விக்ரஹம் உள்ளது. இந்த அம்மன் சக்தி வாய்ந்தவராகக் கருதப் படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், இந்த அம்மனுக்கு தொட்டில் கட்டி வழிபாடு நடத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

பிராகார வலம் வரும்போது, தனியே ஒரு பாதை திரும்பும். அங்கே சற்று தொலைவில் நாகராஜா விக்ரஹம் அமைந்துள்ளது. அது திறந்த வெளிக் கோயிலாகத் திகழ்கிறது. வலப்புறம் புற்று உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள், இங்கே வந்து, நாகராஜாவை வழிபட்டால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சந்நிதிகள்: யட்சியம்மன், நாகாராஜா சந்நிதி தவிர, இங்கே கோவிலைச் சுற்றி விநாயகர், மாம்பழத்துறை அம்மன், பூதத்தார் போன்ற தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகத்திகழ்கிறது இந்தக் கோயில். இங்கே பாலசாஸ்தாவாக ஐயப்பன் குழந்தை வடிவத்தில் காட்சி தருகிறார், எனவே, அவரது விக்ரஹம் அளவில் சிறியதாக அழகு மிளிரக் காட்சி தருகிறது. சிறுவர்கள், தங்களின் கல்வி, உடல் திறன், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்திலும் நற்பலன் பெற இங்குள்ள பாலசாஸ்தாவை வந்து வணங்கிச் செல்ல வேண்டும்.

இங்கே ஐயப்பன் சந்நிதிக்கு உரிய வழக்கமான உற்ஸவங்கள் களை கட்டுகின்றன. குறிப்பாக, விஜய தசமி மற்றும், குறிப்பிட்ட நாட்களில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் அருமையாக நடக்கிறது.

இருப்பிடம்: தமிழகத்தின் எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு. செங்கோட்டை - திருவனந்தபுரம் சாலையில் கோயில் உள்ளது. பஸ் போக்குவரத்து வசதி அதிகம் உண்டு. இந்தப் பாதை வழியாக சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை ஆகிய ஐயப்பனின் தலங்களை தரிசித்து விட்டு பின்னர் பந்தளம், சபரி மலை செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com