"ஈ'யும் இழிந்ததன்று!

இறைவன் படைப்புகளைப் புரிந்துகொள்வது எளிதல்ல. ஆனால் ஞானிகள் அவற்றைப் புரிந்துகொண்ட சம்பவங்கள் உண்டு.
Updated on
1 min read

இறைவன் படைப்புகளைப் புரிந்துகொள்வது எளிதல்ல. ஆனால் ஞானிகள் அவற்றைப் புரிந்துகொண்ட சம்பவங்கள் உண்டு.

"கொசு அல்லது அதைவிட அற்பமான எதையும் உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்'' என்ற குர்ஆனின் 2.26வது வசனத்திலிருந்து அற்ப படைப்புகளிலும் அர்த்தம் உள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருமுறை கலீபா மாமூன் இஸ்லாமிய சட்ட மேதை இமாம் ஷாபீயி (ரஹ்) அவர்களிடம் ""இறைவன் ஈயை ஏன் படைத்தான்? என்று கேட்டார்.

"அரசரைத் தாழ்வுபடுத்தவே அரசருக்கெல்லாம் அரசனான பேருலகைப் படைத்து காக்கும் பேரரசன் அல்லாஹ் அற்ப ஈயைப் படைத்தான்'' என்று பதிலுரைத்தார் ஷாபீயி இமாம் அவர்கள்.

"என் கன்னத்தில் விரட்ட விரட்ட ஒரு ஈ திரும்ப திரும்ப வந்தமர்ந்தது. அதனால்தான் கேட்டேன்'' என்று கேள்வி கேட்டதன் காரணத்தைக் கூறினார் கலீபா.

"உங்களைப் பாதுகாக்கும் பதினாயிரக் கணக்கான வாள் வீரர்களும் பல்லாயிரம் ஈட்டி பிடித்த தளபதிகளும் தொட முடியாத கன்னத்தில் தொட்டு விளையாடும் ஈயை இறைவன் படைத்தது நம் தாழ்வை நாம் உணர்ந்து அல்லாஹ்வை அடிபணிந்து வணங்க வேண்டும் என்பதை நினைவூட்டத்தான்'' என்ற இமாம் ஷாபியி (ரஹ்) அவர்களின் பதிலைக் கேட்ட அரசர் அல்லாஹ்வின் படைப்புகளில் ஈயும் இழிந்தன்று என்பதையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு ஆளும் அரசனும் அஞ்சி தாழ்ந்து வணங்க வேண்டும் என்பதையும் உணர்ந்தார்.

"அல்லாஹ்விற்கு இணை வைக்கப்படுபவைகளால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவற்றிலிருந்து எதையேனும் எடுத்துக் கொண்டாலும் அந்த ஈயிடமிருந்து அது எடுத்ததை விடுவிக்க முடியாது'' என்ற திருமறை குர்ஆனின் 22-73 வது வசனத்தை விளங்கி வீணான செயல்களை விடுத்து இறை கட்டளைகளை நிறைவேற்றி முறையாக வாழ வேண்டும்; முரண்பாடு கூடாது.

இறைவன் படைப்பில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி ஏளனம் செய்யாது, தன்னைத் தானே மேம்படுத்தாது மனிதனை மனிதனாய் மதிப்போம். மனித நேயம் பேணி மாண்புற வாழ்வோம். ஈடிணையற்ற இறைவன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com