வீரனுக்கு மரியாதை!

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹுராவில் எல்லைப் படையின் தலைமையை ஏற்று எல்லையைக் காத்து நின்ற ஸஅத்(ரலி) அவர்களுக்கும் அப்படையினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து சமாதானத்திற்கும் ஒத்து வராது ஒருத்திட முனைந்த ஈரானியர்களை முறியடிக்க நடந்ததே காதிஸிய்யா போர்.
Updated on
1 min read

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹுராவில் எல்லைப் படையின் தலைமையை ஏற்று எல்லையைக் காத்து நின்ற ஸஅத்(ரலி) அவர்களுக்கும் அப்படையினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து சமாதானத்திற்கும் ஒத்து வராது ஒருத்திட முனைந்த ஈரானியர்களை முறியடிக்க நடந்ததே காதிஸிய்யா போர்.

லட்சக்கணக்கான ஈரானிய வீரர்களை சில ஆயிரம் இஸ்லாமிய வீரர்கள் எதிர்த்துப் போரிட்டனர். தளபதி ஸஅத்(ரலி) அவர்கள் ஒவ்வொரு நாளும் போர் அறிக்கை அனுப்புவார்கள். கலீபா உமர்(ரலி) அவர்களும் அடுத்த நடவடிக்கை ஆயத்தங்கள் குறித்து ஆலோசனை பதில் அனுப்புவார்கள்.

போரின் நான்காம் நாள் காலை கலீபா உமர் (ரலி) அவர்கள் கவலையோடு மதீனாவிலிருந்து வெகு தொலைவிற்கு வந்து காத்திருந்தார்கள். ஒரு வீரர் ஒட்டகத்தில் அமர்ந்து வேகமாக வருவது தெரிந்ததும் ஓடோடிச் சென்று, அவருக்கு சலாம் கூறி ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து, ""அவர் எங்கிருந்து வருகிறார்?'' என்று விசாரித்தார்கள்.

காதிஸிய்யாவிலிருந்து வருவதை அறிந்ததும் ஒட்டகத்தை விரட்டி ஓட்டும் அவ்வீரரின் ஒட்டகத்தோடு ஓடியவாறே கொண்டு வந்த செய்தி என்ன என்று கேட்டு வெற்றிச் செய்தி என்பதையறிந்ததும் நிறுத்தாது வேகமாக ஓட்டும் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்தவாறே அல்லாஹ்விற்கு நன்றி நவின்றார்கள். "இஸ்லாமியர்கள் எப்படிப் போரிட்டார்கள்? எப்படி வென்றார்கள்? எதிரிகள் என்ன ஆனார்கள்'' என்று அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள்.

ஒட்டகத்தின் வீரரும் வெற்றிச் செய்தியை விரைந்து கலீபாவிற்கு அறிவிக்கும் ஆர்வத்தில் ஒட்டகத்தை நிறுத்தாது, வேகத்தைக் குறைக்காது சாகசங்களை சொல்லிக் கொண்டேயிருந்தார். களைப்புறாது கலீபாவும் ஒட்டகத்தோடு ஓடினார்கள்.

மதீனா எல்லையை எட்டியதும், ஒருவர் அமீருல் முஃமினீன் என்றழைத்து கலீபாவிற்கு சலாம் சொன்னார். ஒட்டகத்தோடு ஓடி வருபவர் கலீபா என்றறிந்து கலீபாவின் கைகளைத் தொட்டு ஒட்டகத்தை நிறுத்த முயன்ற வீரரைத் தொடர்ந்து ஒட்டகத்தை ஓட்டுமாறு கூறி, கயிற்றைப் பிடித்துக்கொண்டு மதீனாவின் பள்ளிவாசல் வரை ஓடினார்கள் கலீபா உமர் (ரலி).

மதீனாவின் மஸ்ஜிதில் கலீபாவைப் போல கலங்கி நின்ற மக்கள் முன்னிலையில் தளபதி ஸஅத்(ரலி) அவர்கள் அனுப்பிய கடிதத்தைப் பெற்று விரிவான மடலை வரிவரியாகப் படித்து விளக்கினார்கள். இறந்த இஸ்லாமிய வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். வீரனின் தீரத்தைப் பாராட்டி பரிசுகள் தருவதை விட வீரனை நேரில் மதித்து கலீபா உமர் (ரலி) அவர்கள் மரியாதை செய்தது மகத்தானது.

சத்திய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உத்தம தோழர் உமர் (ரலி) அவர்களின் வழியில் நாமும் நமது தேசத்தைக் காப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com