நன்மைகள் பொங்கும்!

திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களுள் குறிப்பிடத்தக்கது திருக்கொள்ளிக்காடு.
நன்மைகள் பொங்கும்!
Updated on
1 min read

திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களுள் குறிப்பிடத்தக்கது திருக்கொள்ளிக்காடு. மூலவர் திருநாமம் அக்னீஸ்வரர். மிருதுபாதநாயகி என்கிற மெல்லடியாள் என்ற திருநாமத்தோடு அம்பாள் அருள்புரிகிறாள். வன்னிமரம் தல விருட்சமாகத் திகழ்கிறது.

ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை சனிப்பிரவேசம் நடைபெறும். அவை மங்கு சனி, பொங்கு சனி, குங்கு சனி, அந்திம சனி என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் பொங்கு சனி காலத்தில் ஒருவருக்கு லாபகரமான பலன்களே நடைபெறும் என்பது ஜோதிட விதி. இத்தலத்தில் ஸ்ரீபொங்கு சனீஸ்வரர் அருள்புரிகிறார்.

இவரை வழிபட அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமி சந்நிதிக்கு அருகில் சனிபகவான் சந்நிதி அமைந்திருப்பது சிறப்பு. மற்ற சிவாலயங்களைப் போல் அல்லாமல் இக்கோயிலில் நவகிரகங்கள் "ப' வரிசையில் அமைந்திருப்பதும் விசேஷம். 

1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கோயிலாக இருந்த கோயிலை மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். கோயிலில் சோழர் காலத்திய கல்வெட்டுகள் 13 உள்ளன. சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இத்தலம் மிக முக்கியத்துவம் பெற்று திகழ்ந்திருக்கிறது.

திரிபுவன சக்கரவரத்தி  இந்த ஆலயத்தில் தரிசனம் செய்து சனி தோஷம் நிவர்த்தியாகி தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றதாக வரலாறு.     இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் தற்போது திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 5-8.

அமைவிடம்: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் நால்ரோடு. அங்கிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் திருக்கொள்ளிக்காடு. மன்னார்குடி - விக்ரபாண்டியம் பேருந்து வழித்தடத்தில் மன்னார்குடியிலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் திருக்கொள்ளிக்காடு சென்றடையலாம்.

தகவலுக்கு:  94436 62489

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com