இனிப் பாவம் செய்யாதீர்...!

மண்ணுலகின் நீதி என்பது உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுடைய நீதியாக, அக்காலம் தொட்டு இன்றுவரை தொடர்கின்றது.
இனிப் பாவம் செய்யாதீர்...!
Updated on
2 min read

மண்ணுலகின் நீதி என்பது உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுடைய நீதியாக, அக்காலம் தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. மனிதனின் நீதியும் தீர்ப்பும் உலகு சார்ந்ததாக,  சாட்சியங்களின் அடிப்படையிலும், வாதாடுகின்றவர்களின் திறனின் அடிப்படையிலும் அமைந்துவிடுகின்றது. மாறாக இறைவன் வழங்குகின்ற நீதியும், தீர்ப்பும், அன்பு, இரக்கம், பரிவு, மன்னித்தல் போன்ற

உயரிய பண்புகளால் நிறைந்தது. இறை மகன், இயேசு சந்தித்த குற்றவாளிக்கு அவர் எவ்வாறு தீர்ப்பு கூறினார் எனக் காண்போம்... (யோவான் 8:1-11).

யூத மதச் சட்டத்தை மறைநூல்களை, அதன் உள்ளார்ந்த உண்மைகளைக் கரைத்துக் குடித்த மறை நூலறிஞர்களும், அவர்களோடு எப்போதும் நிழல்போல் செயல்படுகின்ற பரிசேயர்களும் பாலியலில்  ஈடுபட்ட ஒரு பெண்ணை கையும், மெய்யுமாகப் பிடித்து அவ்வூர் நடுவரிடம் கூட்டிக் கொண்டு செல்லாமல் இயேசுவிடம் இழுத்து வந்தார்கள். ஏனெனில் அப்பெண்ணைப் பகடைக் காயாக வைத்து  இயேசுவை சீண்டிப் பார்க்க, சிக்கலில் மாட்டி விட்டு, குறிப்பாக இதன் மூலமாக அவரை குற்றவாளியாக்கி மக்களிடமிருந்து பிரித்து விடுவதுமே அவர்களது உள் நோக்கம்.

எனவே அவரை சோதிக்கும் நோக்கோடு ""பாலியலில் ஈடுபட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை, நீர் என்ன சொல்கிறீர்? என்று  அவரை மடக்கும் விதமாக மோசே சட்டத்தைத் துணைக்கு அழைத்து அவரை லாகவமாக சிக்க வைத்ததாக நினைத்துக் கொண்டனர்.

சுற்றியுள்ள மக்கள் கூட்டமும், தங்களுக்குள்ளே சங்கேத மொழிகளிலும், தனிந்த குரலிலும் பேசிக் கொண்டனர். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என ஏக்கமாகவும், எதிர்பார்ப்போரும் இருந்தனர்.

குற்றம் சுமத்தப்பட்டு பிடிபட்ட பெண்ணோ, தன்னோடிருந்த அந்த ஆளை மட்டும் தெரித்து ஓடச் சொல்லிவிட்டு தன்னை மட்டும் அழைத்து வந்து அருள்நாதர் இயேசுவிடம் கபட நாடகம்  ஆடுகின்றார்களே பாவிகள் என்று அவர்களின் நயவஞ்சகத்தை நினைத்துக் கொண்டாள். மேலும் கூனிக்குறுகி கைகளை பிசைந்தவாறு சற்று நடுக்கத்தோடும், கண்களில் திரண்ட நீரோடும் காணப்பட்டாள்.

இயேசுவோ எல்லாவற்றையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த போதிலும் எதுவும் பேசாமல் தரையிலுள்ள மண்ணில் தனது விரலால் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் விடாது  நச்சரித்துக் கொண்டேயிருந்தனர். மீண்டும்... மீண்டும்... என்ன சொல்கிறீர் என்று நையாண்டி கலந்த தொணியில் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.

குனிந்திருந்த இயேசு நிமிர்ந்து... பரிசேயர்களும், மறைநூலறிஞர்களும், மற்றும் அங்கு கூடியிருந்த அனைவருமே எதிர்பார்த்திராத, இதுவரை உலகம் கேள்விப்பட்டிராத, எந்த நடுவரும் வழங்காத ஒரு  தீர்ப்பை வழங்கினார்.

"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்'' -- என்று கூறிவிட்டு குனிந்து, தொடர்ந்து தரையில் மீண்டுமாக எழுதத் தொடங்கினார்.

அக்கூட்டம் வெட்கித் தலைகுனிந்தவாறு, வாயடைத்து நின்றது. குற்ற உணர்வு தங்கள் நெஞ்சைத் துளைக்க... போகலாமா? வேண்டாமா? என்ற நிலையில்... அங்கிருந்த முதியோர் முதல் அனைவரும்  மெல்ல மெல்ல கலைந்து... நடைப்பிணங்களாகச் சென்றுவிட்டனர். இறுதியாக, இயேசுவும், அப்பெண்ணும் மட்டுமே அங்கிருந்தனர்.

செய்வதறியாத அப்பெண்ணை நோக்கி... "அம்மா அவர்கள் எங்கே? நீர் குற்றவாளியென்று எவரும் தீர்ப்பிடவில்லையா? என்று பரிவோடு கேட்டார். அப்போது தான் தன் கண்களைத் திறந்து பார்த்த வேளை  மொத்தக் கூட்டமும் கலைந்து போயிருந்ததையும் இயேசு மட்டும் அங்கு அமர்ந்திருப்பதையும் கண்டாள்.

அவள் மறுமொழியாக இயேசுவிடம் "இல்லை ஐயா' என்று கூற இயேசு அவளிடம் ""நானும் தீர்ப்பளிக்கவில்லை, நீர் போகலாம் இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.

இரக்கம் மிகுந்த ஆண்டவரின் தீர்ப்பு, அன்பு கலந்தது... அதனால்தான் பரிவு கொண்ட இயேசு ""இனிப் பாவம் செய்யாதீர்'' எனக் கூறினார்.

மனந்திருந்தியராய் வாழ வாய்ப்புக் கொடுக்கின்றார். நாமும் உலகப் போக்கின்படி வாழ முற்படாமல் இறை இயேசுவின் வழிச் செல்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com