ஒளி பிறந்தது

அன்னை கன்னி மரியாள் தூய ஆவியால் கருவுற்று ஒன்பது மாதங்கள் ஆயின.
ஒளி பிறந்தது
Updated on
2 min read

அன்னை கன்னி மரியாள் தூய ஆவியால் கருவுற்று ஒன்பது மாதங்கள் ஆயின. அப்போது கலிலியோவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லேகம் என்ற ஊருக்கு தூய சூசையப்பருடன் அன்னை மரியாளும் பயணம் மேற்கொண்டனர். உரோமை வல்லரசின் பரப்பையும் பெருமையையும் அறிந்துகொள்ள விரும்பிய பேரரசன் அகுஸ்துஸ் சீசர், தன் ஆட்சி அதிகாரத்திலுள்ள குடி மக்களின் கணக்கு வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தான். சூசை மரியாள்கூட பூர்வீகம் பெத்லகேம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசனின் ஆணைக்கு இணங்கவே பேறு காலம் நெருங்கிய வேளையிலும் தங்களது பயணத்தைத் தள்ளிப்போடவில்லை. குறிப்பாக பெத்லகேமில் தான் வாக்களிக்கப்பட்ட மீட்பர் எனும் மெசியா பிறப்பார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

இறைவனது மீட்புத் திட்டம் நிறைவேற உலக மாந்தர் அனைவரும் பாவங்களிலிருந்து விடுபட வேண்டியே பற்பல ஆண்டுகளாக மறை நூலறிஞர்கள், {ஞான நூலாசிரியர்கள், இறைவாக்கினர்கள், வழியாக ஆண்டவர் எச்சரித்தும் வந்தார். அந்த மாபெரும் இறை திட்டத்தை நிறைவேற்றவே ஆண்டவரின் அன்பையும்,அருளையும்,நம்பிக்கையையும் சுமந்தவராக அன்னை மரியாளும் சூசையப்பரும் பெத்லகேம் நோக்கிப் புறப்பட்டனர். காடு, மேடு, பள்ளம் என்று கரடுமுரடான பாதையே அவர்களின் பயணத்தின் வழி. கழுதையே அவர்களின் பயணத்தின் வாகனம். நான்கைந்து நாள் வேதனைக்குப் பின் பெத்லகேமை அடைந்தார்கள்.

அதே வேளை பல ஊர்களிலிருந்தும் மக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வந்திருந்ததால் பெத்லகேம் மக்கள் கூட்டத்தால் திணறியது. எத்தருணத்திலும் பேறு காலத்தின் நேரம் வரலாமென்ற நோக்கில் தூய சூசையப்பரும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சரியான இடம் வேண்டி பலரிடமும் கேட்டுக்கொண்டே சென்றார். சத்திரங்களிலும், தனியார் வீடுகளிலும் கேட்டபோது அவரை பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினர். அன்னை மரியாள் மிகப் பொறுமையாக வீதியில் இறைவனை சுமந்த பேழையாக கழுதையின் மீதமர்ந்து சென்றார். நேரம் செல்லச் செல்ல மிகவும் சோர்ந்து காணப்பட்டார். ஒவ்வொரு சாவடியும், வீடுகளும் மக்களால் நிரம்பி வழிந்தது. எங்கும் இடமில்லை என்ற பதிலே அவர்களுக்குக் கிடைத்தது.

தன் வயிற்றில் சூல் கொண்டுள்ள தெய்வக் குழந்தையாகிய இறைமகன் இயேசு எந்நேரத்திலும் பிறக்கலாம் என்ற எண்ணம் அன்னை கன்னி மரிக்கு மிகுதியாகவே இருந்தது. அவரைக் கண்ட கணவர் சூசையப்பரின் நிலையோ சொல்லி மாளாது. மெல்ல மெல்ல பகல் பொழுதும் சாய்ந்துகொண்டே சென்றது. இருள் கவ்விய வேளையில் ஊருக்கு வெளியே வந்திருந்தனர். அங்கே ஒரு குன்றில் குகை போன்ற குடிசை ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. அவ்விடம் ஆடு,மாடுகளை அடைக்கவும், சில வேளைகளில் இடையர்கள் இளைப்பாறும் இடமாகவும் இருந்தது. அங்கே இருந்த ஒரு சில ஆடு,மாடுகளை ஒதுக்குப்புறமாக கட்டி வைத்தார் சூசையப்பர்.

இருளைப் போக்க சிறிய விளக்கின் துணை கொண்டு அவ்விடத்தை தூய்மை செய்தார். எல்லாம் இறைவனின் "திருவுளச் செயல்' என்ற எண்ணம் கொண்ட அந்தப் புனித பெற்றோர் எதையும் இறைவனுக்காக, உலக மாந்தர் மீட்புக்காக ஏற்றுக்கொள்ள மனதளவில் ஒத்தேயிருந்தார்கள். குடிசையாக இருந்தாலும், ஏழ்மையாக இருந்தாலும், கடினப் பொழுதாக இருந்தாலும் மீட்பராம் இயேசுவுக்காக என்பதை புரிந்து அங்கே தங்கினார்கள்.

கடவுளின் திருமகன், பல யுகங்களாக, எதிர்பார்க்கப்படுபவர். மெசியா எனும் மீட்பர் தொடக்கத்தில் கடவுளால் வாக்களிக்கப்பட்டவர். இந்த இடத்தில்தான் பிறந்து உலகில் தோன்ற வேண்டும் என்று இருந்தது. மக்கள் படும் துன்பங்களில், வேதனைகளில், இன்னல்களில் தானும் பங்கு பெறும் முகமாகவே தொடக்கத்திலேயே துன்பத்தின் சிலுவையை தன் சிறிய தோள்களில் தாங்கிக்கொள்ள மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

ஆம்! அவர்கள் தங்கிய ஒரு சில மணி நேரங்களுக்கெல்லாம் (நள்ளிரவு) அன்னை கன்னி மரியாள் இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்து அங்கு சீர் செய்யப்பட்ட வைக்கோல் பொதியின் மீது கிடத்தினார்.

சாதாரண மரியாள் அப்போது இறைவனின் அன்னையாக மாறினார். அவரின் கணவரும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான சூசையப்பர் புனிதராக உயர்ந்தார். உலகை மீட்க வந்த ஒளி உலகின் ஏதோ ஒரு மூலையில் குகையில் குடிசையில் ஆடு, மாடுகளுக்கிடையே ஒளிர்ந்தது. (லூக் 2:1-7/மத் 1:18-25).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com