பலன்தரும் பரிகாரத் தலம்

தட்சனின் வேள்வி பற்றிய செய்தி உலகெங்கும் எதிரொலித்தது. எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான் தட்சன்.
Updated on
2 min read

சூரியனுக்கு தோஷம் நீங்கிய தலம்: ஸ்ரீபரிதியப்பர் திருக்கோயில்

தட்சனின் வேள்வி பற்றிய செய்தி உலகெங்கும் எதிரொலித்தது. எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான் தட்சன். ஆனால், முக்கியமாக அவிர்பாகம் அளிக்க வேண்டிய சிவபெருமானுக்கு அனுப்பாமல் நிந்தனை செய்தான். தன் மாப்பிள்ளை ஆயினும் பர்வதராஜன் அழைப்பு அனுப்பாததால், தன்னை அவமதித்ததாக உணர்ந்தார் சிவபெருமான். இதனால் வேள்வியில் கலந்துகொண்ட மற்ற தேவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டான். அவ்வாறு பரிதியாகிய சூரியன் வழிபட்டு தனது தோஷத்தை போக்கிக்கொண்ட தலமே பரிதியப்பர் ஆலயமாக உருப்பெற்றது.
 கால வெள்ளத்தில் மண்ணில் புதையுண்ட லிங்கப் பெருமான், பின்னாளில் சிபிச் சக்ரவர்த்தியால் வெளிக் கொணரப்பட்டு, மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டார். ஆலயமும் அழகுற எழுந்தது. இந்தத் தலத்தில் பரிதியாகிய சூரியனின் பெயரைக் கொண்டே பெருமான் அழைக்கப்படுகிறார்.
 திருப்பரிதி நியமம் என்றும் பரிதியப்பர்கோவில் என்றும் வழங்கப்படும் இந்தத் தலத்தின் இறைவனுக்கு பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பிகை மங்களநாயகியாகவும் மங்களாம்பிகையாகவும் வழிபடப்படுகிறார்.
 பஞ்ச பாஸ்கரத் தலம் எனப்படும் ஐந்து சூரியத் தலங்களில் இதுவும் ஒன்று என்பது இந்தத் தலத்தின் சிறப்பு. பங்குனி மாத மத்தியில் நான்கு நாள்கள் சூரியனின் கதிர்கள் லிங்கத் திருமேனியில் விழுகின்றன. அவ்வாறு சூரியன் வழிபாடு நடத்துவதாகக் கூறுகிறார்கள். இந்தத் தலத்தில் மார்கண்டேயர் அருவ வடிவில் நாள்தோறும் சிவபூஜை
 செய்கிறாராம்.
 கிழக்கு நோக்கிய ஆலயம், இரண்டு கோபுரங்களுடன் திகழ்கிறது. ராஜகோபுரம் 5 நிலைகளுடனும் அடுத்த கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. உள்ளே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றதும் வெளிப் பிராகாரத்தில் வசந்த மண்டபம் அருகே அம்பாள் சந்நிதி. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள் பிராகாரம் சென்றால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகள் மற்றும் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.
 இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாதி. மூலவர் பரிதியப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம், அடுத்து மூலவரை நோக்கியபடி சூரியன்.
 மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்பு சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதை நாம் தரிசிக்கலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது. அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் அருள்பவள்.
 பிதுர் தோஷத்துக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. ஜாதக ரீதியாக பிதுர் தோஷம் இருந்தால், இங்கே பரிகாரம் செய்யப்படுகிறது.
 திருஞான சம்பந்தரால் 3-ம் திருமுறையில் பதிகம் பாடப்பெற்ற தலம்.
 ""விண்கொண்ட தூமதி சூடிநீடு
 விரிபுன் சடைதாழப்
 பெண்கொண்ட மார்பில்வெண் ணீறு பூசிப் பேணார் பலிதேர்ந்து
 கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
 பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே''.
 இருப்பிடம்: தஞ்சாவூர் - ஒரத்தநாடு சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ள மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கி.மீ, தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம். ஓரத்தநாடுக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவு.
 சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12 மாலை 3- 8.30 வரை

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com