ஐயாறே ஐயாறே!

மானுடர்கள் காண்பற்கரியது'' என்னும் திருக்கயிலாயத்தை அப்பர் பெருமான் இறைவன் அருளால் கண்டுமகிழ்ந்த பெருஞ்சிறப்புடைய தலம், "பூலோக கயிலாயம்' என்று வழங்கப்படும் திருவையாறு.
ஐயாறே ஐயாறே!
Updated on
3 min read

மானுடர்கள் காண்பற்கரியது'' என்னும் திருக்கயிலாயத்தை அப்பர் பெருமான் இறைவன் அருளால் கண்டுமகிழ்ந்த பெருஞ்சிறப்புடைய தலம், "பூலோக கயிலாயம்' என்று வழங்கப்படும் திருவையாறு.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாகவும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 51வது தலமாகவும் திகழ்கிறது. திருவையாறு, ஐயாறு, பஞ்சநதம், ஜீவன்முத்திபுரம், காவிரிக்கோட்டம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பஞ்சநதம் என்று வட மொழியில் கூறப்பெறும் திருவையாறு திருத்தலத்தின் புராணப் பெருமையினைப் "பஞ்சநதமான்மியம்' என்னும் வடமொழி நூல் உரைக்கின்றனது.

திருவையாறு - பெயர்க்காரணம்: சிவாலயங்களில் கருவறையை நோக்கி எழுந்தருளியுள்ள ரிஷப தேவரை நந்திகேசுவரர் என்று அழைப்பர். ஆனால் இப்பதியில் எழுந்தருளியிருக்கும் நந்திகேசுவரர் சைவ முதல் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியால் உபதேசம் செய்யப்பட்டவர். கயிலையில் சிவ கணங்களுக்குத் தலைவராகவும், முதல் திருவாயில் இருந்து காக்கும் உரிமையைப் பெற்றவராகவும் இருப்பவர். சைவ ஆசாரியருள் முதல் குருவாகத் திகழ்பவர். மகப்பேறு வேண்டி சிலாத முனிவர் என்பவர் இத்தலத்து இறைவனாம் ஐயாறப்பனை பூஜிக்க யாக பூமியில் பெட்டகத்திலிருந்து தோன்றியவர்.

செப்பேசன் என்ற பெயருடன் வளர்ந்து வந்த இவர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்களாகிய சகல கலைகளிலும் வல்லுனரானார். 16 வயது வரைதான் ஆயுள் என்ற நியதியுடன் தோன்றிய அவர், அதன் பொருட்டு வருத்தமுற்றார். ஐயாறப்பனை நோக்கி ஆலயத்தில் உள்ள அயனரி தீர்த்தத்தில் கடுந்தவத்தை மேற்கொண்டார். செப்பேசரின் உறுதியான அன்புக்கு இறைவன் காட்சி கொடுத்து, வேண்டிய வரங்களையும், நிலைத்த பதினாறு பேறுகளையும் கொடுத்து அருளினார். மேலும் கடுந்தவத்தால் எலும்புருவாக இருந்த செப்பேசர் நலமாகும் பொருட்டு கங்கை நீர், பரமன் கமண்டல நீர், அம்மையின் கொங்கையின் பால், மேகத்தின் நீர், நந்தியின் வாய்நுரை நீர் ஆகிய ஐந்து நீரினால் அபிஷேகம் செய்வித்தார். அந்த ஐந்து நீரும் காவிரியில் கலந்தவுடன் திரு+ஐ+ஆறு = திருவையாறானதாக புராணங்கள் கூறும்.

இத்தலத்தின் அருகில் ஓடும் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளை சம்பந்தப்படுத்தியும் "திருவையாறு' எனப் பெயர் பெற்றதாக கூறப்படுவது உண்டு. திருநந்திதேவர் அவதரித்த இடம் திருவையாற்றில் "அந்தணக்குறிச்சி' என்ற பெயரிலும், அவர் திருமணம் நடதேறிய தலம் "திருமழபாடி' என்றும் அழைக்கப்படுகிறது. திருவையாற்றில் நடத்தப்படும் சப்தஸ்தான பெருவிழா நந்தியெம்பெருமானுக்காகவே நடத்தப்படும் விழாவாகும்.

ஐயாறப்பர்! : இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு ஐயாறப்பர், செம்பொற்சோதியார் என தேவாரத்திலும், பஞ்சநதீஸ்வரர், பஞ்சாபகேசர், பிரணதார்த்திஹரர், செப்பேசர், திருசூலி எனப் புராணங்களிலும், ஐயாறுடைய அடிகள், திருவையாற்று மகாதேவ பண்டாரகர் எனக் கல்வெட்டுகளிலும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.

திருமாலின் அம்சம்! : இத்தலத்து இறைவிக்கு தர்மாம்பிகை, தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி எனவும், திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார், உலகுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டுகளில் நாமம் கூறப்படுகிறது.

""அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே'' என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கிற்கு இணங்க,{இத்தேவி திருமாலின் அம்சமாக வழிபடப்படுகிறாள். அதை நிரூபிப்பதுபோல் வெள்ளிக் கிழமை தோறும் மகாலட்சுமி தாயார் தன் கணவரை வழிபட எழுந்தருளும் காட்சி நடைபெறுகிறது.

வில்லேந்திய வீரராக விளங்கும் முருகப் பெருமானும், திருவடியில் ஆமையை மிதித்திருக்கும் ஸ்ரீஅரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியும், வீரவடிவம் காட்டும் ஆட்கொண்டாரும் இவ்வாலயத்தில் கண்டு வழிபட வேண்டிய அற்புத மூர்த்தங்கள்.

பாடல் பெற்ற தலம்!: தேவர்களாலும், முனிசிரேஷ்டர்களாலும், சித்தர்களாலும் பூஜிக்கப்பட்ட இத்தலத்தினை ஞானசம்பந்தர் 5 பதிகங்களாலும், அப்பர் 12 பதிகங்களாலும், சுந்தரர் 1 பதிகத்தாலும் போற்றிப் பாடியுள்ளனர். மேலும் மாணிக்கவாசகர், திருமூலர், தெய்வச் சேக்கிழார், பட்டினத்தார் ஆகியோரும் போற்றியுள்ளனர். இத்தலத்து அம்மையப்பனை திருவையாற்றில் வாழ்ந்த தியாக பிரும்மம் தனது கீர்த்தனைகளில் போற்றிப் பாடியுள்ளார்.

ஏழுமுறை எதிரொலிக்கும்!: ஐந்து திருச்சுற்றுக்களோடும், எழுநிலைக் கோபுரங்களோடும் எண்ணற்ற சிற்பங்களோடும் திகழும் இவ்வாலயத்தின் திருச்சுற்றில் தட்சிணகைலாயம் என்ற தனிக்கோயிலும், சோழ குலப் பெருமாட்டியால் கட்டப்பெற்ற உத்திர கைலாசம் என்னும் ஓலோக மாதே வீச்சரமும் சிறப்புற்று விளங்குகின்றன. இவ்வாலயத்தில் உள்ள சப்த ஒலி பிராகாரம் (ஒருமுறை "ஐயாறா' என்று அழைத்தால் ஏழுமுறை எதிரொலிக்கும்) முக்கியத்துவம் வாய்ந்தது.

காசியில் முக்திமண்டபமும், நாகையில் காரணோ மண்டபமும், திருவையாற்றில் செப்பேசர் மண்டபமும் சிறப்பாகப் பேசப்படுவன. இந்த செப்பேசர் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் செப்பேசராக இருந்து ஜெபம் செய்தார். எனவே இங்கு ஜெபம் செய்தால் ஒரு கோடியுருவாகப் பயனளிக்கும் எனப் புராணம் கூறுகிறது. தியாக பிரம்மம் இம்மண்டபத்திலிருந்துதான் ""நாத தனுமனிசம் சங்கரம்'' எனத் தொடங்கும் கீர்த்தனையை அருளிச் செய்தார்.

""ஐயாறே ஐயாறே' என்பீராகில் அல்லல் தீர்ந்த மருலகம் ஆளலாமே'' எனப் பெரியோர்கள் போற்றும் இத்திருத்தலத்தை தரிசித்தவர்களுக்கு எம பயம் நீங்கும். கயிலாயம் கண்ட தரிசன பலன் கிடைக்கும்.

ஆனால் வயதான பின் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இப்பொழுதே அவன் திருநாமத்தை சொல்ல வேண்டும் என்கிறார் ஐயடிகள் காடவர் கோமா.

""குந்தி நடந்து குனிந்தொரு கைகோலூன்றி

நொந்திருமி நுரைத்தேறி - வந்துந்தி

ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை''.

இத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின் பரிபாலனத்திற்கு உட்பட்ட தேவஸ்தானங்களுள் ஒன்றாகும். தற்சமயம் தருமபுர ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இவ்வாலயத்தை பரிபாலனம் செய்து வருகிறார்கள். தற்போது இத்திருக்கோயிலில் பெரிய அளவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன.

வருகிற பிப்.7ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்று நடத்தும் சதுர்வேத பாராயணம் பிப்ரவரி 3 முதல் 7 வரை யாகசாலை பூஜைகளின்போது நடைபெறுகிறது. மேலும் திருமுறைப் பாராயணம், திருமுறை மாநாடு போன்றவையும் நடைபெற இருக்கின்றன.

""ஐயாறே ஐயாறே'' என்று உச்சரித்து வழிபட்டால் அருளை வாரி வழங்குவார் ஐயாறப்பர்.

மேலும் தகவலுக்கு: 94431 50332/ 94439 75933.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com