பாண்டியன் பூஜித்த அம்மன்!தமிழ் வளர்த்த நகர் மட்டுமல்ல, திருக்கோயில்கள் நிறைந்த நகராகவும் மதுரை திகழ்கிறது. வைகையாற்றின் வடபுறத்தில், செல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரியது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலாகத் திகழ்கிறது இவ்வாலயம்.
மதுரையை ஆண்ட சோழாந்தகன் என்ற மன்னன் வேட்டையாடச் சென்ற இடத்தில் களைப்படைந்து தூங்கிப்போனான். அவனைத் தேடி வந்த மந்திரிகள் உறக்கத்திலிருந்து எழுப்பி உணவு உண்ணுமாறு கூறினர். ஆனால், "சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யாமல் உணவு உண்ண மாட்டேன்' என்று மறுத்தான் மன்னன். இதையடுத்து அழகிய லிங்கத்தை அமைத்த மந்திரிகள் அதை சுயம்புலிங்கம் எனக் கூறினர். ஆனால், அது செயற்கை லிங்கம் என்பதை தாமதமாகவே அறிந்த மன்னன் சிவ விரதம் கறைபட்டுவிட்டதாகக் கருதி உயிர்விடத் துணிந்தான். அப்போது "குரவங்கமழ் குழலாளுடன் எமை நிறுவிப் பூசிக்க' என
அசரீரி கேட்டது. இதையடுத்து அவ்விடத்தில் கோயிலும், நகரமும் நிறுவி மன்னன் வழிபட்டான். அதுவே திருவாப்புடையார் ஆலயம்.
செல்வத்துக்கு அதிபதியாகும் ஆசையில் அகத்தியரின் ஆலோசனைப்படி இத்திருக்கோயிலில் கடுந்தவம் புரிந்தான் புண்ணியசேனன். அவனுடைய தவத்தை மெச்சிய திருவாப்புடையார், புண்ணியசேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனால் அகங்காரம் கொண்ட புண்ணிய சேனன் தவறுகள் செய்யத் தொடங்கினான். எனவே புண்ணியசேனனின் கண்ணை திருவாப்புடையார் பறித்தார். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினான் புண்ணியசேனன். அவனை மன்னித்த ஆப்புடையார், அவனைக் "குபேரன்' என அழைத்து வாழ்வு தந்தார். எனவே இத்தலம் குபேரன் தோன்றிய தலமாகும். மேலும் இந்திரன், சந்திரசயணன் ஆகியோர் வழிபட்ட தலமாகவும் உள்ளது. இங்கே அம்பாளின் திருநாமம் குரவங்கமழ் குழலம்மை. இத்திருத்தலத்தில் எழுந்தருளும் ரிடபேசுவரருக்கு பல சிறப்புகள் உண்டு.
இத்திருக்கோயில் கிழக்கு - மேற்காக அமைந்துள்ளது. கிழக்கிலிருந்து திருக்கோயிலுக்குள் நுழைந்ததும் நந்திமண்டபம் உள்ளது. இதில் 36 அடி உயர கொடிமரம், பலிபீடம், நந்திகேசுவரர் சிலை ஆகியவை உள்ளன. நந்திகேசுவரர் முன்பு உள்ள அஸ்திரதேவர் திருவுருவம் வேறு எங்குமில்லாத சிறப்பு. இம்மண்டபத்தின் வலப்புறம் தெற்கு நோக்கி நடராஜர் சந்நிதி உள்ளது. நடராஜருக்கு கீழே காரைக்கால் அம்மையார் சிலை இருப்பது சிறப்பு. நந்திமண்டபத்துக்கு அடுத்து பட்டாபிஷேகம் நடக்கும் நான்கு கால் பீடம் உள்ளது. அடுத்து மகா மண்டபம். இதில் இடது புறம் நால்வர் திருவுருவங்கள் உள்ளன. மற்ற கோயில்களில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற வரிசையில் இருப்பர். ஆனால் இங்கோ சம்பந்தருக்குத்தான் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
சுவாமி சந்நிதியின் சுற்றுப்புறத்தில் தட்சிணாமூர்த்தி, பின்பகுதியில் லிங்கோத்பவர், பிச்சாடணர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சுவாமிக்கு இடது புறம் அம்பாள் எழுந்தருள்கிறார். நந்தி, சுவாமியைப் பார்த்தவாறு உள்ளது சிறப்பு. பக்தர்கள் காதில் கூறும் குறைகளை சுவாமியிடம் கூறி நிறைவேற்றும் வகையில் நந்தியின் அமைப்பு உள்ளதாக வரலாறு. சுற்றுப் பிராகாரத்தில் வள்ளி - தெய்வானை சமேதராக ஆறுமுகன் அருள்கிறார்.
செவ்வாய்க் கிழமை செவ்வரளியுடன், சிவப்பு துவரை வைத்து சண்முகரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அம்பாள் சந்நிதி, சுவாமி சந்நிதி அருகே நவகிரகங்கள் உள்ளன. இங்கு சந்திரனுக்கு சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. ஆகவே இது தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது. அம்பாள் சந்நிதிக்கு உள்ளே இருக்கும் பள்ளியறையில் இரவு நடைபெறும் பூஜையில் பங்கேற்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை. இத்திருக்கோயிலில் சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம், பிரதோஷ விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தகைய பெருமை வாய்ந்த இவ்வாலயத்தில் திருப்பணிகள் நிறைவுற்று ஜூலை 14 அன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. குபேரனுக்கு அருள்புரிந்த திருவாப்புடையாரை வணங்கினால் நமக்கும் குறைவில்லா செல்வம் கிடைக்குமன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.