சிறப்பான மாதம்!

பகலில் உணவு துறந்து இரவில் உறக்கம் மறந்து உலக வாழ்வின் இறுக்கத்தில் இருந்து விலகி இறைவனின் நெருக்கத்தைப் பெறும் நிறைவான மாதமே ரமலான்.
சிறப்பான மாதம்!
Updated on
1 min read

பகலில் உணவு துறந்து இரவில் உறக்கம் மறந்து உலக வாழ்வின் இறுக்கத்தில் இருந்து விலகி இறைவனின் நெருக்கத்தைப் பெறும் நிறைவான மாதமே ரமலான்.

"ரமல்' என்ற அரபி சொல்லுக்கு எரிப்பது என்று பொருள். தீமைகளை, பாவங்களை விட்டு விலகி செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடி பரிசுத்தம் ஆகி நன்மைகளுக்கு, நற்செயல்களுக்குப் பொற்புடை இறைவனின் நற்கிருபையைப் பெறும் நல்ல மாதமே

ரமலான்.

ரமலானில் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமை. உலகம் படைக்கப்பட்டதிலிருந்து ஆதி நபி ஆதம் ஹவ்வா வழியே மக்கள் சமுதாயம் உருவானதிலிருந்து ஒவ்வொரு இறைத்தூதரைப் பின்பற்றிய ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக்கப்பட்டதை,

"நம்பிக்கையுடையோரே! உங்களின் முன்னோர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று திருக்குர்ஆன் (2-183) வசனம் கூறுகிறது.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமையாகும். நோன்பு நோற்போர் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு உணவு உண்ணுவதையும் நீர் பருகுவதையும் நிறுத்த வேண்டும். சூரியன் மறைந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு நோன்பு திறக்க வேண்டும். ஒரு நாளில் 14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும்.

"நோன்பிருப்போர் பொய், புறம், கெட்ட பேச்சுகள் பேசக் கூடாது. அறிவீனமான பழிவரும் பாவச்செயல்களில் ஈடுபடக் கூடாது. சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்'' என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் புகன்றது புகாரியில் குறிப்பிடப்படுகிறது.

நாற்பது நாட்கள் நோன்பு நோற்றபின் மூசா நபிக்கு ஸினாய் மலையில் தவ்ராத் வேதம் வழங்கப்பட்டது. ஈசா நபி காடுகளில் வாழ்ந்தபொழுது நாற்பது நாட்கள் நோன்பு நோற்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு இன்ஜில் வேதம் வழங்கப்பட்டது.

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் ஹிரா குகையில் நோன்பு நோற்று தனித்திருந்து வணங்கியபொழுது மாதங்களில் சிறந்த ரமலான் மாதத்தின் ஓரிரவில் திருக்குர்ஆனின் திருவசனம் முதலில் இறக்கப்பட்டது. இவ்விரவில் இறைவனை வணங்குவது ஆயிரம் மாதங்கள் வணங்குவதை விட மேலானது. இவ்விரவிற்கு "லைலத்துல் கத்ர்'' என்று பெயர். ரமலானின் கடைசி பத்து இரவுகளில் ஓரிரவாகும்.

இத்தகைய சிறப்புடைய மாதத்தில் சிறப்புக்குரிய செயல்களையே செய்ய வேண்டும். ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மஸ்ஜிதில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இஃதிகாஃப் என்று பெயர். இஃதிகாஃப் இருப்போருக்கு இறைவன் இணையற்ற பலன்களைத் தருகிறான். ஆண்டில் 11 மாதங்கள் பசியறியாது புசித்தோர் பசியின் கொடுமையை அறிந்து ஏழைகளுக்கு வாரி வழங்க நோன்பு வழி காட்டுகிறது.

அதனாலேயே ரமலான் மாதத்தில் ஜகாத் என்னும் ஏழை வரி கணக்கிடப்பட்டு இல்லாதோருக்கு வழங்கப்படுகிறது. நாமும் நோன்பு நோற்று ஜகாத் வழங்கி வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com