

சிவகங்கையில் இருந்து காளையார் கோயில் செல்லும் பாதையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாட்டரசன் கோட்டை. இவ்வூரில்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமது இறுதிக் காலத்தைக் கழித்தார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்பு மிக்க ஊரில்தான் கண்ணுடைய நாயகி அம்மனாகிய கண்ணாத்தாள் அருள் புரிகிறாள்.
இத்தலத்து அம்பாள் இங்கு வடக்கு முகமாய் அமர்ந்துள்ளதால் "வடக்கு வாய் செல்வி' என்ற திருநாமமும் ஏற்பட்டது. கண்ணுடைய நாயகிக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை "களியாட்டத் திருவிழா' என்ற பெயரில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் கடும் விரதமிருந்து இந்த அன்னையை வழிபடுவார்கள்.
இந்த அம்பாளுக்கு வைகாசி மாதம், பத்து நாள்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. எட்டாம் நாள் திருவிழாவில் அதாவது விசாக நட்சத்திரம், பௌர்ணமி நாளன்று அம்பிகை அற்புதமான அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வருவாள்.
அப்பொழுது அம்பாள், நகரத்தார் பெண்டிர், மணவிழாவின்போது மங்கள அணியாக அணியும் "கழுத்திரு' என்ற தங்க ஆபரணத்தை அணிந்து உலா வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இதற்கு அடுத்த நாள் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
பத்து நாள் திருவிழாவில் அம்மனுக்கு உடை அலங்காரம், காப்பு, சங்கு, ராஜாங்க அலங்காரம், இலக்குமி அலங்காரம், காளிங்க நர்த்தனம், அம்பாள் தண்ணீர் எடுத்தல், ஞானப்பால் கொடுத்தல், பல்லக்கில் அனந்த சயனம், களியாட்டக் கண்ணாத்தாள் வெள்ளி ரத வேட்டை, தர்பார் திருத்தேரில் நின்ற உலா போன்ற சிறப்பான பல வகை பூஜை வழிபாடுகள் அம்மனுக்கு செய்யப்படுகின்றன.
பத்தாம் நாள் திருவிழாவில் முளைப்பாரி, பால் குடம் - காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல் போன்ற பிரார்த்தனைகளையும் பக்தர்கள் நிறைவேற்றுகிறார்கள்.
இத்தலம் ஒரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து இக்கோயிலில் தங்கியிருந்து தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.