நம்பிக்கை!

ஆங்கிலத்தில் Faith, Belief, Confidence இவற்றுக்கெல்லாம் நம்பிக்கை என்ற வார்த்தையால் பொருள் சொல்வார்கள். ஆனால் இவற்றுக்கிடையே வேறுபாடு உண்டு.
Published on

ஆங்கிலத்தில் Faith, Belief, Confidence இவற்றுக்கெல்லாம் நம்பிக்கை என்ற வார்த்தையால் பொருள் சொல்வார்கள். ஆனால் இவற்றுக்கிடையே வேறுபாடு உண்டு.

ஃபெயித், ஜீவன் முழுவதையும் பற்றிய ஓர் உணர்ச்சி. பிலீஃப், மனத்தைப் பொறுத்தது. கான்பிடன்ஸ், என்பது ஒரு மனிதன் பேரிலோ இறைவன் பேரிலோ வைக்கும் நம்பிக்கை அல்லது தனது நாட்டத்தின் அல்லது முயற்சியின் பலனைப் பற்றிய நிச்சயமான ஒன்று. குருட்டு நம்பிக்கை என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம்.

இத்தொடர் உண்மையில் பொருளற்றது. நிரூபிக்கப்படும் வரை ஒன்றை நம்பமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர் போலும். ஆனால், நிரூபணத்துக்குப் பின்னர் ஏற்றுக் கொள்கின்ற முடிவுக்குப் பெயர் நம்பிக்கை கிடையாது. அது அறிவு. அல்லது மன அபிப்ராயம். நம்பிக்கை என்பது ஒருவன் நிரூபணத்துக்கு முன்னால், அல்லது ஒன்றை அறிவதற்கு முன்னால் கொண்டிருப்பது. அறிவைப் பெறுவதற்கு அல்லது அனுபவம் பெறுவதற்கு அது உதவுகிறது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம் கிடையாது. ஆனால், எனக்கு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நான் இறை அனுபவம் பெற முடியும்.

சைத்திய நம்பிக்கை, மன நம்பிக்கை, பிராண நம்பிக்கை, உடல் நம்பிக்கை என வேறுபாடுகள் உண்டு. மன நம்பிக்கை என்பது சந்தேகத்தை முறியடித்து உண்மையான ஞானத்திற்குத் திறக்க உதவுகிறது. பிராண நம்பிக்கை பகைத் தாக்குதல்கள் வராமல் தடுக்கிறது. அல்லது அவற்றைத் தோல்வி அடையச் செய்து, உண்மையான ஆன்மிக இச்சா சக்திக்கும் செயலுக்கும் திறக்க உதவுகிறது. உடலின் நம்பிக்கை என்பது உடலின் இருள், சட மந்தம், துன்பம் இவற்றுக்கிடையே உறுதி தளராது இருக்கச் செய்து, உண்மையான உணர்வின் அடித்தளத்துக்குத் திறக்க உதவுகிறது.

சைத்திய நம்பிக்கை நேரடியான இறைவனது ஸ்பரிசத்துக்குத் திறந்து ஐக்கியமும் சரணாகதியும் ஏற்பட உதவுகிறது. செயல் சக்தி கொண்ட நம்பிக்கை என்பது குறித்து உங்களுக்கு சந்தேகம் வரலாம். நம்பிக்கை தமோகுணம் கூடினதாகவும், பயன் தராததாகவும் இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக, "ஸ்ரீஅன்னையே எல்லாவற்றையும் செய்வார் என நான் நம்புகிறேன். எனவே நான் எதையும் செய்ய மாட்டேன். அவர் விரும்பிய போது என்னை திவ்ய மாற்றம் செய்வார்' என்று நம்பினால் இதற்குப் பெயர் செயல் சக்தி கொண்ட நம்பிக்கை இல்லை. செயலற்ற மந்த நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com