குழந்தைகளின் உடல் உபாதைகள் நீங்கும் சேலம் ஸ்ரீசுகவனேஸ்வரர் திருக்கோயில்

பிரம்மனிடம் இருந்து படைப்பின் ரகசியத்தை அறிய ஆவல் கொண்டனர் முனிவர்கள் சிலர். பிரம்ம தேவன் படைக்கும்
குழந்தைகளின் உடல் உபாதைகள் நீங்கும் சேலம் ஸ்ரீசுகவனேஸ்வரர் திருக்கோயில்
Updated on
2 min read

பிரம்மனிடம் இருந்து படைப்பின் ரகசியத்தை அறிய ஆவல் கொண்டனர் முனிவர்கள் சிலர். பிரம்ம தேவன் படைக்கும் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத் திகழும் காரணத்தை அறிய சுகர் என்ற முனிவரும் எண்ணம் கொண்டு பிரம்மனை அணுகினார். அவர்களுக்கு பிரம்மா தன் படைப்பு ரகசியத்தைச் சொன்னார். அதைக் கேட்ட சுக முனிவர், சரஸ்வதியிடம் சென்று அவற்றைச் சொல்லி விட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மதேவன், சுக முனிவரை கிளியாகப் பிறக்கும் படி சாபம் இட்டார். வருந்திய சுக முனிவர் சாப விமோசனம் கேட்கவே, சிவபெருமானை தியானம் செய்து சாப விமோசனம் பெறலாம் என்றார்.

அதன்படி, வனப் பகுதிக்கு கிளியாகப் பறந்து வந்த முனிவர், மற்ற கிளிகளுடன் சேர்ந்து சுயம்புவாக ஒரு புற்றில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்துக்கு பூஜைகளைச் செய்யத் தொடங்கினார். ஒருநாள் வேடன் ஒருவன் அந்தப் பகுதிக்கு வந்தான். கிளிகளை விரட்டினான். அவை புற்றில் பதுங்கின. கோபம் கொண்ட வேடன், வாளால் அவற்றை வெட்டத் தொடங்கினான். கிளிகள் பல மடிந்தன. அப்போது, கிளி வடிவில் இருந்த சுக ரிஷியும் தனது இறக்கைகளால் லிங்கத் திருமேனியின் மேல் விரித்துக் காத்தது. இருப்பினும் தன் வாளால் அதையும் வெட்டி வீழ்த்தினான் வேடன். அப்போது சுயம்புமூர்த்தியின் திருமேனியில் இருந்தும் ரத்தம் பீறிட்டது. இதனால், பயந்த வேடன், தான் இறைக்குற்றம் செய்துவிட்டதாக வருந்தினான். அதே வாளால் தன்னையும் வெட்டிகொண்டு மாய்ந்துபோனான் வேடன். அவர்களுக்கு அருள் புரிந்தார் ஈசன். கிளியுருவில் இருந்த சுக முனிவர் சிவபெருமான் திருவடி அடைந்தார். சுக ரிஷிக்கு அருள் புரிந்ததால், பெருமானுக்கு சுக வனேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

சேலம் மாநகரின் மிக முக்கியத் திருத்தலம் இது. நகரின் மையப் பகுதியில் உள்ளதால் கோயிலை அடைவது எளிது.

சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் பெருமான். ஸ்வர்ணாம்பிகை, மரகதவல்லி, பச்சைவல்லி என அம்பிகைக்கு திருநாமம். பாதிரி மரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. இங்கே மூலவரின் லிங்கத் திருமேனி ஒரு புறமாகச் சாய்ந்து காட்சியளிக்கிறது. லிங்கத்தின் உச்சியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. இங்கே சாப விமோசனத்துக்காக பெருமானை பூஜித்த சுக முனிவர் அழகிய கிளி முகம் கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். அவரின் மூலவர், உற்ஸவ திருமேனிகளும் உள்ளன.

இந்தத் தலத்தில் வழக்கமான நவக்கிரகங்களில் இருந்து, ராகு, செவ்வாய் இருவரும் இடம் மாறியுள்ளனர். இங்கே நவகிரக வழிபாடு மேற்கொள்வதால்,  நல்ல வரன் அமையும். நல்ல வேலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் உள்ள விகடச் சக்கர விநாயகருக்கு மாலை, தேங்காய்ப் பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்டம் எனப்படும் உடல் உபாதைகள் நீங்கும். மேலும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியத்துக்காக இங்கே பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். நல்ல வேலை கிடைக்கவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.

தேவர்கள் சிவ பெருமானை அரச மர வடிவில் வழிபட்டது, சேரமானுக்கும் ஆதிசேஷனுக்கும் பெருமான் தாண்டவ தரிசனம் தந்தது, ஒளவையார் வளர்ப்புப் பெண் ஒருவருக்கு திருமணம் செய்வித்தது முதலிய திருவிளையாடல் பெருமைகள் இந்தத் தல புராணத்தில் காணப்படுகின்றன.

இத்தலத்தில் திகழும் முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் வைத்துப் பாடியுள்ளார்.

சந்நிதி தரிசன நேரம்: காலை 6 -12 வரை, மாலை 4-9 வரை.

தகவலுக்கு: 0427-2450954

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com