ஆடையில் அழகு!

உடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது.
Updated on
1 min read

உடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஆடைகள் அணிவது பற்றி அருமறைக் குர்ஆன் கூறுவதையும் அதன்படி ஒழுகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் நாமும் பின்பற்றுவோம்.

"ஆதாமுடைய மக்களே! உங்களின் மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம்'' என்று திருமறைக் குர்ஆனின் 7-26 வசனம் கூறுகிறது. ஆடைகள் ஆண்களின் ஆண்மையையும் பெண்களின் பெண்மைத் தன்மையையும் நன்னயமாய்க் காட்டும். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உடைகளை ஆண்கள் அணிவதையும் ஆண்களுக்குரிய ஆடைகளைப் பெண்கள் அணிவதையும் சபித்ததாக அபூஹீரைரா (ரலி) அவர்கள் சாற்றுவதை அபூதாவூதில் காணலாம்.

பகட்டும் படாடோபமும் பாவத்திற்கு அழைத்துச் செல்பவை. எளிமை என்ற பெயரில் ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் ஆடம்பரமான ஆடை அணிவதையும் மோசமான உடை உடுத்துவதையும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் உரைப்பது ரஜீனில் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் தலைப்பாகை கட்டினர். தலைப்பாகை அணிவதால் இரக்க இயல்பு அதிகமாகும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அபுல் மலீஹ் (ரலி) அவர்கள் கூறியது அபூதாவூதில் குறிப்பிடப்படுகிறது.

மணிக்கட்டுவரை நீண்ட கையுடைய சட்டையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிந்ததை அஸ்மா பின்து எஜீதுப்னுஸ் கைனி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. இக்காலத்திலும் முழுக்கை சட்டை அணிவது மதிப்பிற்குரியதாய் உள்ளது.

கீழாடையை கணுக்கால் முட்டிகளுக்குக் கீழ் தொங்க விடக்கூடாது என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் இயம்பியதும் அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தொங்க விடுவது தற்பெருமைக்குரியது. தரையைத் தொடும் ஆடைகள் தரையில் உள்ள குப்பை அசுத்தங்களில் தோய்ந்து நோய்க்குக் காரணமாகின்றன.

"பெண்கள் தங்களின் ஆடை அலங்காரங்களை அந்நிய ஆண்களின் கண்களில் படும்படி வெளிப்படுத்த வேண்டாம். பூமியில் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்'' என்று அல்குர்ஆன் 24-34வது வசனம் கூறுகிறது. தரையைத் தட்டி நடப்பது பிறரின் கவனத்தைக் கவரும். ஆடை, அலங்காரங்களும் பிறரின் கண்களுக்கு கவர்ச்சியாகும். கவர்ச்சி வீழ்ச்சியில் விழ வைக்கும்.

"முதுமையடைந்து நடமாட முடியாது உட்கார்ந்தே இருக்கும் கிழவிகள் மேலாடைகளைத் தளர்த்தி இருப்பது தவறில்லை; எனினும் தளர்த்தலைத் தவிர்ப்பது அவர்களுக்கும் நன்று'' என்று நவில்கிறது குர்ஆனின் 24-60வது வசனம். இறைமறைக் குர்ஆன் இயம்பும் முறையில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஆடை அணிந்து அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com