ஆண்டவரை அறிவோம்

நேர்மையுடையோரை, உண்மையாக செயல்படுபவர்களை, நற்செயல்களை விரைந்து செயலாற்றுபவர்களை இன்றைய நாளில் மட்டுமல்ல, என்றைக்குமே நாம் காண்பது அரிதாகத்தான் போய்விட்டது.
ஆண்டவரை அறிவோம்
Updated on
1 min read

நேர்மையுடையோரை, உண்மையாக செயல்படுபவர்களை, நற்செயல்களை விரைந்து செயலாற்றுபவர்களை இன்றைய நாளில் மட்டுமல்ல, என்றைக்குமே நாம் காண்பது அரிதாகத்தான் போய்விட்டது. ஏனெனில் இயலாமை, வாய்மையற்ற தன்மை உலகில் மேலோங்கிவிட்டதோ என்ற ஐயம் எழாமலில்லை. அடுத்தவர்களுக்கு உதவக் கூடிய எண்ணமில்லாமல், நாம் ஏன் செய்ய வேண்டும்? பிறர் பார்த்துக்கொள்வார்கள் என்று தட்டிக் கழிக்கும் மனோநிலை உள்ளவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முற்பட வேண்டும். "நாம்தான்' நற்செயல்கள் புரிய வேண்டும் என்ற உறுதியான எண்ணமே இன்றைய சமூகத்திற்குத் தேவைப்படுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இறை இயேசுவின் சீடர்களாய் இருந்தவர்களில் முன்னணி சீடர்கள் பனிரெண்டு பேருமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்பட்டார்கள். குறிப்பாக, இயேசுவை தெரியாதென மறுதலித்த சீமோன் பேதுரு, நம்ப மறுத்த தோமா எனும் தோமையார், காட்டிக் கொடுத்த யூதாஸ், பதவிகளுக்கு ஆசைப்பட்ட செபதேயுவின் மகன்களான யாக்கோபு, யோவான் என்று தத்தமது குணங்களின் மூலமாக தங்களையும் இயேசுவையும் அறியாதிருந்தார்கள். வேறு சில சீடர்கள் இயேசுவுக்கு எதிரானவர்களோடு சேர்ந்தும், அவரை விட்டு விலகியும் போய்விட்டனர். ஆனால் அந்திரேயோ என்பவர் மட்டும் இயேசுவை கண்ட அடுத்த நொடியே அவரை தன் குருவாக ஏற்று பின் தொடர்ந்தார். அவர், வாய்மையாளராக, நற்செயல்களை பிறருக்காக விரைந்து செயலாற்றுபவராக விளங்கினார். நம்பிக்கை குன்றாதவரான அந்திரேயாவைப் பற்றி மூன்று இடங்களில் மட்டும் மிகக் குறைவாக விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மிக நிறைவான பங்கை ஆற்றி இயேசுவின் சீடர்களுக்கு முன்னோடியாகக் காட்சியளிக்கின்றார். சீமோன் பேதுருவின் தம்பியே அந்திரேயா என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமுழுக்கு யோவானுடன் அந்திரேயாவும், மற்றொரு சீடரும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வழியே இயேசு வருவதைக் கண்ட யோவான், ""இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி'' என்று கூறுகின்றார். உடனே தாயைக் கண்ட சேயாக இயேசுவோடு செல்கிறார். அவர் இருப்பிடத்தை ஆவலோடு சென்று பார்க்கிறார். அவரோடு உரையாடுகிறார், இனி எல்லாம் இயேசுவே என்று முடிவு செய்கின்றார். தாம் கண்டதை, கேட்டதை, இயேசுவை குருவாக ஏற்றுக்கொண்டதை தன் அண்ணன் பேதுருவிடம் பகிர்ந்து கொள்கின்றார். ""நாங்கள் மெசியாவைக் கண்டோம் (யோவான் 1:40)'' என்று அறிக்கையிட்டு அவரையும் இயேசுவிடம் அழைத்து வந்து சீடராக்கி மகிழ்ந்தார்.

கல்வியறிவு அற்றவராக, மீனவராக தம் வாழ்க்கையை துவங்கியே அந்திரேயா இயேசுவை யார் என்று கண்டு கொண்டது போல், பிறரை இயேசுவிடம் அழைத்து வந்தது போல், நாமும் செயல்படுவோம்.... ஆண்டவரை அறிவோம். அவர் ஆசீரைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com