

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி. 1200 வருடங்களுக்கு முன் ஸ்ரீஆதிசங்கரரால் பாரதத் திருநாட்டின் நான்கு பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பீடங்களுள், தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் முதன்மையானது.
ஸ்ரீஆதிசங்கரரையே முதல் குருவாகக் கொண்டு துவங்கிய ஸ்ரீசாரதா பீடத்தின் குரு பரம்பரை அவருக்குப் பிறகும் இணையற்ற ஜீவன்முக்தர்களால் அலங்கரிக்கப்பட்டு வாழையடி வாழையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
சக்தியின் அம்சமான ஸ்ரீசாரதாம்பாள் சிருங்கேரியின் பிரதான வழிபாட்டு தெய்வமாக விளங்குகிறாள். தங்கக் கலசங்களோடும், மணி கிரீடத்தோடும், வண்ண வண்ண ஆடை அணிமணிகள் பூண்டும், கோடி சூரியப் பிரகாசத்தோடு அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீசாரதா தேவியைப் பார்த்தாலே ஒரு புத்தொளி ஏற்படுகிறது.
இங்கே ஆண்டு முழுவதும் பல திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் ரதோற்ஸவங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.
ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தின் பிரதான திருவிழா "நவராத்திரி' விழா. புரட்டாசி மாதத்தில், பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்ள நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சிருங்கேரிக்கு வருகிறார்கள். அனைத்து நவராத்திரி நாட்களிலும் அன்னை சாரதாம்பாள் விதவிதமான அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அளிக்கும் தரிசனத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
இருப்பிடம்: மங்களூரில் இருந்து 110 கி.மீ., உடுப்பியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் சிருங்கேரி உள்ளது. பல நகரங்களிலிருந்தும் நேரடி பஸ் வசதி உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.