தென்மாவட்டங்களை இணைக்கும் முத்தாரம்மன் "தசரா'

செந்திலாண்டவன் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் மாநகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி சாலையில் அமைந்துள்ளது...
தென்மாவட்டங்களை இணைக்கும் முத்தாரம்மன் "தசரா'
Published on
Updated on
2 min read

செந்திலாண்டவன் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் மாநகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி சாலையில் அமைந்துள்ளது கடற்கரை நகரமான குலசேகரன்பட்டினம். இங்கே ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் ஆலயம் உள்ளது. அம்மையும் அப்பனும் ஒரு சேர, ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ள தலம் இது.

தன் திருமேனியை தானே தேர்ந்தெடுத்தாள்: திருக்கோயிலில் உள்ள மூர்த்திகளுக்கு பெரிய அளவில் எவ்வாறு சிலை வடிக்கலாம் என பக்தர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சகர் கனவில் அம்பாள் தோன்றி, ""கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள மைலாடி என்னும் ஊருக்குச் செல்'' என்று கூறி மறைந்தாள். அதேநேரத்தில் மைலாடியில் சிற்பங்களை வடிக்கும் சுப்பையா ஆசாரி என்பவரின் கனவில் அம்பாள், சுவாமியுடன் தோன்றி, ""எங்களை உற்று நோக்கு. இவ்வடிவத்தை ஒரே பீடத்தில், தென் திசையில் உள்ள ஆண்,பெண் பாறையில் வடித்து, குலசையிலிருந்து வரும் பக்தரிடம் கொடு'' எனக் கூறினாளாம். அதன்படி சிலை வடிவமைக்கப்பட்டு, குலசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தற்போது வணங்கப்பட்டு வருகிறது. இறைவனும், இறைவியும் தம் திருமேனியை தாமே தேர்ந்தெடுத்த சிறப்பு மிக்கது இவ்வாலயம்.

இத்திருக்கோவில் மூன்று மண்டபங்களை கொண்டது. கர்ப்பகிரகத்தில் சுயம்பு மூர்த்தியோடு, சுவாமி, அம்பாள் உள்ளனர். அம்பாள் வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையில், திருத்தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, கழுத்தில் தாலி, மூக்கில் புல்லாக்கும், மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனியோடு விளங்குகின்றாள். மேலும் அன்னையின் நான்கு திருக்கரங்களில் வலப்புற மேல் திருக்கையில் உடுக்கையும்,

கீழ்த்திருக்கையில் திரிசூலமும், இடது புறம் மேல் திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக்கொப்பரையும் தாங்கியிருக்கிறாள்.

சுவாமி, இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையில், இரு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். வலது திருக்கையில் செங்கோலும், இடது திருக்கையில் திருநீற்றுக் கொப்பரையும் தாங்கியுள்ளார்.

பெயர்க்காரணம்: பாண்டிய மன்னர்கள் முத்துக்களை மாலையாக தொடுத்து அன்னைக்கு சூடி மகிழ்ந்ததாலும் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவர். முத்து கண்டவர்களை இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்டச் செய்வார்கள். அவ்வாறு செய்யும்போது அம்மை நோய் குறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அம்பாள் முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் முத்துஆற்றுஅம்மன் - முத்தா(ற்ற)ரம்மன் என அழைக்கப்படுவதாகவும் கூறுவர். மன்னன் கையிலுள்ள செங்கோல் அவனது விருப்பு, வெறுப்பற்ற ஆட்சியை குறிக்கும். அது போல் சுவாமி ஞானமூர்த்தீசுவரர் செங்கோலுடன் விருப்பு, வெறுப்பின்றி உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப அருள்பாலிக்கின்றார்.

தசரா: புரட்டாசியில் நடைபெறும் தசரா விழா மிகவும் முக்கியமான ஒன்று. நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக நடைபெறுகிறது. இந்த தசரா விழா தென்மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கோலாகலமான திருவிழாவாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இத்திருவிழாவுக்காக பக்தர்கள் காப்பு கட்டி 41 நாள்கள் விரதமிருந்து அன்னையின் பல அவதாரங்களை வேடமாக அணிந்து, காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், மாவிளக்கு பூஜை, அங்கபிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் - அம்பு குத்துதல், அன்னதானம் செய்தல் போன்ற பல நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

அவ்வகையில் இந்த வருடம் கடந்த அக்.5 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கியத் திருவிழாவான மகிஷாசுரசம்ஹாரம் வருகிற திங்கள்கிழமை (அக்.14-ஆம் தேதி) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com