விளையும் பயிர்...

புஹ்லூல் என்ற பெரியவர் ஒருநாள் பஸராவின் தெருவில் செல்லும்பொழுது குழந்தைகள் குதூகலமாய் விளையாடுவதைக் கண்டார்.
Updated on
1 min read

புஹ்லூல் என்ற பெரியவர் ஒருநாள் பஸராவின் தெருவில் செல்லும்பொழுது குழந்தைகள் குதூகலமாய் விளையாடுவதைக் கண்டார். களங்கமும் கவலையும் இல்லாத குழந்தைகளின் களிப்பில் மகிழ்ந்தார். ஒரு சிறுவன் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு அழுது கொண்டிருந்தான்.

புஹ்லூல் அச்சிறுவனை அணுகி, "'நீ ஏன் அழுகிறாய்? நீயும் அவர்களுடன் சேர்ந்து விளையாட பாதாம் கொட்டை வாங்கித் தருகிறேன்'' என்றார்.

சிறுவன்: அறிவில் குறைந்தவரே! நாம் விளையாடுவதற்காகவா படைக்கப்பட்டோம்?

புஹ்லூல்: உனக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். இந்த அறிவை நீ எங்கிருந்து பெற்றாய்?

சிறுவன்: ""உங்களை வீணாகப் படைக்கவில்லை. நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்கப்பட மாட்டீர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?'' என்ற குர்ஆனின் 23-115வது ஆயத்திலிருந்து அறிந்துகொண்டேன்.

புஹ்லூல்: நீ அறிந்த விளக்கத்தை நானும் அறியலாமா?

சிறுவன்: இவ்வுலகம் விரைந்து செல்கிறது. உயிர் வாழ்வோருக்கும் உலகம் நிரந்தரமல்ல. ஆபத்தும் மரணமும் ஒன்றையொன்று முந்த முயல்கின்றன. சொற்ப கால அற்ப வாழ்க்கையில் மறுமையின் நிலையான வாழ்விற்கு உரியதைத் தேடிக்கொள்.

புஹ்லூல்: பாவக்கறை படியாத சிறுவனே! உனக்கு அந்த அவா எழுந்ததேன்?

சிறுவன்: என் தாயார் பெரிய விறகுகளில் நெருப்பு மூட்ட சிறிய விறகை முதலில் பற்ற வைப்பார்கள். நான் நரகின் சிறிய விறகாகிவிடக் கூடாது என்று பயப்படுகிறேன்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப அந்தச் சிறுவன் நபிகளின் பேரர் இமாம் ஹுசைன்(ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவன். இதையறிந்து "குலவித்தை கல்லாமற் பாகம்படும்' என்று வியந்தார் புஹ்லூல். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தென்று நன்மை செய்து வாழ நல்லறிவுபெற்றார். நாமும் அவ்வாறே நடந்து அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com