நேர்மையான பாதை

இறைமகன் இயேசு மிகுந்த ஆர்வத்தோடு தமது சொந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார்.
நேர்மையான பாதை
Updated on
1 min read

இறைமகன் இயேசு மிகுந்த ஆர்வத்தோடு தமது சொந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தன் ஊரை, தன் உறவினர்களை, தன்னோடு சிறு வயதில் விளையாடி இன்று வளர்ந்த தம் நண்பர்களைக் காணவும்,  அவர்களுக்காக, அவர்களின் வாழ்க்கைக்காக குறிப்பாக அவ்வூர் மக்களை விண்ணரசிற்கு தகுதியுள்ளவர்களாக ஆக்கவும் வந்திருந்தார். அதனால், ஓய்வு நாளில் தம் வழக்கப்படி அவ்வூர் கோயிலில்  (தொழுகைக் கூடத்தில்) அவர்களை நல்வழிப்படுத்த கற்பிக்கத் தொடங்கினார்.

தொடக்கத்தில் வியந்த மக்கள் இயேசுவின் ஞானத்தை நேரடியாக கண்டுணர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் இறை வார்த்தையை செவிமடுக்க மறுத்தவர்களாய், காது மந்தமானவர்களாய்ப்  போனார்கள். ஆனால், இயேசுவை சிறு வயதிலிருந்தே நன்றாக அறிந்திருந்ததால் அவரின் போதனைகளைவிட அவரைப் பற்றிய அலசல்களில் ஈடுபட்டனர். இயேசு சாதாரண ஏழை தச்சராகிய  சூசையப்பரின் மகன்தானே என்று தொழிலைக் குறி வைத்து ஏசினார்கள். அவரை எள்ளி நகையாடினார்கள். அவரை நையாண்டி செய்து ஊளையிட்டார்கள்.

இறுதியாக இயேசு சிலரை குணமாக்குவதையும், அவர்கள் நலமடைவதையும் கண்டார்கள். அதோடு அவர் எலியா, எலிசா போன்ற இறைவாக்கினர்களை அவருக்கு இணையாகப் பேசுவதைப் பொறுத்துக்  கொள்ள இயலாதவர்களாய், பொறுமை இழந்தவர்களாய் மாறிப் போனார்கள். தொழுகைக் கூடத்தில் இருந்த அனைவரும் சீற்றம் கொண்டு அவரை அடிக்க ஓடினார்கள். அவர்கள் எழுந்து அவரை ஊருக்கு  வெளியே துரத்தி அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்று விட முயன்றார்கள். இழுத்துச் சென்றார்கள். அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, ""சொந்த ஊரிலும் தம்  வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்று கூறிவிட்டு சொந்த ஊர் மக்களின் நம்பிக்கையின்மையை நினைத்துக் கவலையுற்றவராய் அங்கிருந்து நடந்து அவர்களைக் கடந்து  போய்விட்டார் (மாற்கு 6:1-6; லூக் 4:16-30).

மேற்கண்ட வேதனையான நிகழ்ச்சியை நாம் காணுகின்றபோது கடவுள் மனிதர்களின் அக வாழ்வை, அவர்களின் உள்ளத்தை காணுகின்றார். ஆனால் அவர் படைத்த மனிதன் மட்டும்  தன்னலமற்றவர்களின் புற வாழ்க்கையை உற்று நோக்குகின்றான். வெளிவேடக்காரர்கள் தன்னை ஏமாற்றுவதை அறியாமல் அவர்கள் பின் செல்கின்றான் என்பது விளங்குகிறது. அதனால்தான் இறைமகன்  மெசியாவை, நம் பாவங்களைப் போக்க வந்தவரை ஏளனப்படுத்தினார்கள்.

இறைமகன் இயேசு, ""என் பின்னே வாருங்கள் (மத் 4:19)'' ""மனம் மாறுங்கள் (மத் 4:17)'' என்று கூறி அவரின் பின்னே நம்மையும் அழைக்கின்றார். ஏனெனில் தூய பவுலடியார் கூறுவதைப் போல, ""தளர்ந்து  போன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள். அப்போது ஊமையாய் போன கால்மூட்டு பிசகாமல்  குணமடையும் (எபி 12:12-13)'' என்று கூறி நம்மை உலகின் ஒளியாகிய இறை இயேசுவின் வழியில், நேர்மையான பாதையில் நடக்கப் பயிற்சியளிக்கிறார். நாமும் அவ்வாறே சென்று ஆண்டவனை மகிழச்  செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com