

ஆண்டுதோறும் நவம்பர் 2-ஐ அனைத்து ஆத்மாக்கள் திருநாளாக (கல்லறை பண்டிகை) உலக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு முந்தைய நாள் (நவம்பர் 1) அனைத்து புனிதர்களின் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லறைத் திருநாளன்று அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும், இறந்தவர்களின் பெயரால் இறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தம் செய்து அலங்கரித்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவார்கள்.
இம்மண்ணக வாழ்வை நிறைவுள்ளதாக்கிச் சென்ற புனிதர்களானாலும், சாதாரண மனிதர்களானாலும், யாரும் துணையில்லாமல் அனாதைகளாய் இறந்து எவரும் நினையாத ஆத்மாக்களுக்காகவும் வருடத்தில் வருகின்ற இந்த நாளில் இறந்த அனைவரையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
"ஆண்டவர் மனிதரை மண்ணில் படைத்தார். மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார் (சீராக் 17:1-2)'' என்ற ஞானமொழி நம்மை சிந்திக்க வைக்கின்றது. ஏனெனில் இம்மண்ணக வாழ்வானது நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடையாகக் கொடுத்த ஒரு வாய்ப்பு. இந்தப் பொன்னான வாய்ப்பை நாம் நேரிய வழிகளில், அறப் பணிகளில் ஈடுபடுகின்றபோது நமக்கும் மறுமை வாழ்வாம் விண்ணகம் நிச்சயம் உண்டு. ""காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கிவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்(மாற்கு 1:15)'' என்று இறைமகன் இயேசு தனது பணிவாழ்வின் தொடக்கத்தில் கூறினார். ஏனெனில் நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும் இளைப்பாற்றி அடைவார்கள்.
மேலும் தூய பவுலடியார் "'தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடாதீர்கள் (உரோ 13:14)'' என்று உரோமை மக்களுக்கு மட்டுமல்ல. நம்மை நோக்கியும் அன்போடு எச்சரிக்கின்றார்.
மேலும் 'இவ்வுலகில் வாழும்போது பிறருக்கு நன்மைகள் செய்த நீங்கள் விண்ணுலகில் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்(மத் 25:34)'' என்று இறை இயேசுவும், நாம் செய்யும் அனைத்து நன்மைகளினால் விண்ணக வாழ்வின் கதவு திறக்கும் என்று உறுதி அளிக்கின்றார்.
தூய ஜான் கிறிஸ்சோஸ்தோம் "'இறந்தவர்கள் நரக நெருப்பிலிருந்தாலும், உத்திரிக்கிற நிலையில் இருந்தாலும், நம் செயல்களினால், காணிக்கைகளினால் அவர்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியினால், இறந்தவர்களின் பாவங்கள் மன்னிப்புப் பெற வாய்ப்பு உள்ளது'' என்று கூறி நாம் அவர்களுக்காக செபிக்க அழைப்பு விடுக்கின்றார்.
ஏனெனில் "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே! என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார் (யோவான் 11:25)''.
எனவே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கும் இயேசு உடல் இறப்பின் மீது வெற்றிகொண்டு அதை முடிவில்லா வாழ்வின் நுழைவாயிலாகச் செய்திருக்கின்றார். உயிர்த்தெழுந்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு இறந்தவர்களுக்காக மன்றாடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.