அந்த விசுவாசிகள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்'' என்று திருக்குர்ஆனின் 23-1வது வசனம் கூறும் உறுதியான வெற்றி பெற்ற அந்த விசுவாசிகள் யார்?
இக்கேள்விக்குரிய விடையை அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. ""எவர்கள் தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (23-2)''
தொழுகையை வழக்கமான நிகழ்வாக தொழுதோம் என்று தொழாமல் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்ற உள்ளுணர்வோடு தொழுபவர்.
"எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)''
தொழுகைக்குரிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.
"எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)''
எதற்கும் உதவாத வீண் பேச்சு பயனற்ற செயல்களைச் செய்து வீண் பொழுது போக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கமுடன் செயல்படுபவர்கள்.
"'எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)''
கடமையாக்கப்பட்ட ஏழை வரியாம் ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து இணக்கமான சமுதாய சமத்துவத்திற்கு வழி வகுப்பவர்கள்.
"எவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-5)'' இழுக்குண்டாக்கும் இழி செயல்களைச் செய்யாது ஒழுக்கம் பேணி உடலின் எந்த அங்கமும் பங்கப்படும் பாவ காரியங்களில் பங்கு கொள்ளாது காத்துக் கொள்பவர்கள். கண்களால் தீயதைப் பார்ப்பது காதுகளால் தீயதைக் கேட்பது, பிற உறுப்புகளைத் தீயதைத் தீண்டாது பாதுகாப்பவர்கள்.
23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.
23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.
"எவர்கள் தங்களின் அமானிதங்களையும் உறுதி மொழிகளையும் பேணுகிறார்களோ அவர்கள் (23-8)'. பிறர் அவரிடம் ஒப்படைக்கும் பொருட்களைப் பொறுப்புடன் பாதுகாத்துக் கொடுத்தவர், கேட்கும்பொழுது கொடுத்தபடி திரும்பக் கொடுப்பவர். ஒருவரிடம் வாக்குறுதி செய்ததை உண்மையாக, உறுதியாக நிறைவேற்றுபவர்கள். அவ்வாறே அல்லாஹ்விற்கு இணை வைக்காது வணங்கும் ஈமானின் ஒப்பந்தத்தை தவறாது நடைமுறைப்படுத்துபவர்கள்.
"அவர்கள்தான் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
(23-10)''
முன்னர் கூறப்பட்டவற்றை முறையாக செய்தவர்கள் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உறுதியளிப்பதோடு ""அவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை சொந்தமாக்கிக்கொண்டு அதில் நிரந்தரமாக இருப்பார்கள்'' என்று 23-11வது வசனம் அவர்கள் அங்கே நிரந்தரமாய் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்துகிறது. மேலும் "'எவருடைய (நன்மைகளில்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் (23-102)'' என்று உலகில் வாழும் காலத்தில் நன்மையைச் செய்தவர்களே அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் என்று மீண்டும் நன்மை செய்யும் நற்பலனைப் போதிக்கிறது.
'எனக்கு பத்து ஆபத்துகள் அருளப்பட்டன. அவற்றின்படி நடப்பவர் சுவர்க்கம் புகுவார்'' என்று எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி மேற்குறிப்பிட்ட பத்து ஆயத்துகளை ஓதிக் காட்டியதை இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் எடுத்துரைத்து எல்லோரும் ஏற்று நடக்க அறிவுறுத்தினார்கள்.
நாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.