சேண்பாக்கம் செல்வ விநாயகர்

பெங்களூர் - வேலூர் பிரதான சாலையில், வேலூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் சேண்பாக்கம் என்ற இடத்தை அடையலாம்.
சேண்பாக்கம் செல்வ விநாயகர்
Updated on
1 min read

பெங்களூர் - வேலூர் பிரதான சாலையில், வேலூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் சேண்பாக்கம் என்ற இடத்தை அடையலாம்.

இத்திருக்கோயில் கட்டப்பட்டு சுமார் இருநூறு வருடங்கள் ஆகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர அமைச்சரான துக்கோஜிராவ் தமது பரிவாரங்களோடு இவ்வூர் வழியாகச் செல்லுகையில் அவர் சென்ற ரதம் தவறுதலாக விநாயகர் பெருமான் மீது ஏறிவிட்டது. அதைக் கண்ட அமைச்சர் மிகுந்த அச்சம் கொண்டு, மனம் பதறினார். உடனே பயணத்தைத் தொடராமல் நிறுத்திவிட்டார். அன்றிரவு சேண்பாக்கத்திலேயே தங்கி தன் தவறுக்காக மிகவும் வருந்தி, விநாயகப் பெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.

அன்றிரவு அமைச்சர் துக்கோஜிராவ் கனவில் விநாயகப் பெருமான் தோன்றி, திறந்த வெளியிலேயே தன்னை வைத்து சுற்றிலும் தனக்குக் கோயில் கட்டுமாறு ஆணையிட்டார். தெருவில் இருந்த விநாயகப் பெருமான் திருககோயில் கொண்டார். இவ்வாலயத்து இறைவன் உருவம் ஏதுமில்லாத ஏகாதச சுயம்பு விநாயகர். இவருக்கென்று தனியே கருவறை இல்லை. இப்பெருமானைச் சுற்றியே கட்டடம் உருவாக்கியிருக்கிறார்கள். இறைவனின் விருப்பப்படி திறந்த வெளியில் அமர்ந்தபடியே அருள்பாலிக்கிறார். திருநாமம் செல்வ விநாயகர்.

இவ்வாலயத்தில் பால விநாயகர், நடன விநாயகர், கற்பக விநாயகர், ஓம்கார விநாயகர், சிந்தாமணி விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்தி - புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று பல விநாயக பெருமான்கள் எழிலார்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்கள். வெங்கடாசலபதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், சுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்ர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

ஆவணி மாதம் இத்திருத்தலத்தில் வருடாந்திர பிரம்மோற்ஸவ விழா மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com