தாய்க்கு முதலிடம்

தாய் மண், தாய் நாடு, தாய் மொழி, தாயின் மணிக்கொடி என்னும் சொற்றொடர்கள் தாயின் சிறப்பைக் கூறுகின்றன.
தாய்க்கு முதலிடம்
Updated on
1 min read

தாய் மண், தாய் நாடு, தாய் மொழி, தாயின் மணிக்கொடி என்னும் சொற்றொடர்கள் தாயின் சிறப்பைக் கூறுகின்றன. பிறக்கும் குழந்தைகளை சிறக்கச் செய்பவள் தாய். அந்தக் குழந்தை சான்றோன் எனப் போற்றப்படும்போது பேரின்பம் அடைகிறாள்.

ஒருநாள் இரு குழந்தைகளுடன் ஒரு பெண் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் யாசித்தாள். வீட்டிலிருந்து மூன்று பேரீச்சம் பழங்களை எடுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் அந்தத் தாயிடம் கொடுத்தார்கள். அந்தத் தாய் இரு பழங்களை முதலில் ஆளுக்கொன்றாக இரு குழந்தைகளுக்கும் கொடுத்தாள். மீதமுள்ள ஒரு பழத்தை அவளின் வாயில் போட்டாள். பழங்களைத் தின்று முடித்த குழந்தைகள் தாயின் வாயை நோக்கின. வாயிலிருந்து அந்தப் பழத்தை எடுத்த தாய், அதை இரண்டாகப் பிரித்து இரு குழந்தைகளுக்கும் கொடுத்தாள். இந்தக் காட்சியைக் கண்டு கண்ணீர் விட்டார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.

திருக்குர்ஆனில் பெற்றோருக்கு நன்றி செலுத்தும் வசனங்களில் தாய்க்கு முதலிடம் தந்திருப்பது இத்தகைய தாயன்பினால்தான்.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது என்று கட்டளையிட்ட அல்லாஹ், தாய் - தந்தைக்கு நன்றி செலுத்துமாறு திருக்குர்ஆனின் 17-23வது வசனத்தில் கட்டளையிடுகிறான்.

திருக்குர்ஆனின் 17-24வது வசனம், குழந்தையாயிருந்த பொழுது தாய் - தந்தையர் அன்பாக வளர்த்து பரிபாலித்தவாறு தாய்- தந்தையர்கள் மீது அன்பும், அருளும் புரியுமாறு இறைவனை இறைஞ்ச இயம்புகிறது.

மேலும் குர்ஆனின் 46-15வது வசனம் தாயின் கர்ப்பகால, பாலூட்டும் கால சிரமங்களைச் சொல்கிறது. "மனிதன் தன் தாய் - தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு உபதேசம் செய்தோம். அவனின் தாய் சிரமத்துடனேயே கர்ப்பத்தில் சுமந்து பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமுற்றதிலிருந்து குழந்தை பால் குடிப்பதை மறக்கும் வரை முப்பது மாதங்கள் மிக்க சிரமத்துடன் செல்கிறது''.

தாயின் அரவணைப்பில், ஆதரவில் வளரும் குழந்தைகளே நல்லவர்களாய் வல்லவர்களாய் வாகை சூடி வாழ்வாங்கு வாழ்கின்றனர்.

மணமுறிவு ஏற்பட்டு குழந்தையைத் தாயும், தந்தையும் உரிமை கோரிய பொழுது மறுமணம் புரியாதவரை குழந்தையை தாயே வளர்க்க வேண்டும் என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை தெரிவிப்பவர் அம்ருப்னு ஹீஜப் (நூல் - அபூதாவூத்).

இது போன்ற இன்னொரு வழக்கில் குழந்தையே தாயின் கையைப் பிடித்துக்கொண்டு தாயுடன் சென்றதை செப்புகிறார் அபூஹீரைரா (ரலி) அவர்கள் (நூல் - ஸýனன்).

நீதி போதனைகளை ஓதி ஓய்ந்திடாது ஒழுங்காய் கடைபிடித்து குழந்தைகளை தாயே வளர்த்து ஞாலம் போற்றும் சரித்திர நாயகர்களாக உருவாக்க வேண்டும்.

பெருமைக்குரியவராய் உருவானவர்கள், தங்களை உருவாக்கிய தாய்- தந்தையரை முதுமையில் முதியோர் இல்லத்தில் விட்டு சிறுமைப்படுத்தாது பொறுப்புடன் பேணிப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com