நவதிருப்பதி தரிசனம்

தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுமே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றன.
Published on
Updated on
2 min read

தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுமே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவைகுண்டம், திருவரகுணமங்கை (நத்தம்), திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகியவை அந்தத் திருப்பதிகள்.

திருவைகுண்டம்: திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது திருவைகுண்டம். மூலவரின் திருநாமம் வைகுந்தநாதன். நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். கிழக்கு பார்த்த திருமுக மண்டலம். மூலவருடன் தாயார் கிடையாது. உற்ஸவர் திருநாமம் கள்ளபிரான். தாயாரின் திருநாமம் வைகுண்டவல்லி, பூதேவி தனி சந்நிதியில் அருள்புரிகிறார்.

திருவரகுணமங்கை (நத்தம்): ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கிழக்கே உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் விஜயாசன பெருமாள். ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார். தாயார் வரகுணவல்லி, வரகுண மங்கை ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.

திருப்புளிங்குடி: திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் காய்சினவேந்தன். உற்ஸவர் திருநாமம் எம்இடர்களைவான். தாயார் மலர்மகள், திருமகள் என்று அழைக்கப்படுகிறார். உற்ஸவத் தாயாரின் திருநாமம் புளிங்குடிவல்லி.

பெருங்குளம்: திருப்புளிங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் இந்தத் தலம் உள்ளது. மூலவரின் திருநாமம் வேங்கடவானன். உற்ஸவர் மாயக்கூத்தன். தாயார் அலர்மேலு மங்கை, குளந்தை வல்லி என்று திருநாமங்களோடு அழைக்கப்படுகிறார்.

திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி): பெருங்குளத்திலிருந்து கிழக்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வழியாக மேற்கு நோக்கி 4 கி.மீ. தொலைவு பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம். இருகோயில்களும் அருகருகே அமைந்துள்ளன. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன்கோயில் உள்ளது.

தெற்கு கோயில்: மூலவர் திருநாமம் தேவர்பிரான். தாயார் - உபதாயார்களுக்கு தனி சந்நிதி இல்லை.

வடக்கு கோயில்: மூலவர் திருநாமம் அரவிந்தலோசனன். உற்சவர் செந்தாமரைக் கண்ணன். தாயாரின் திருநாமம் கருத்தடங்கண்ணி.

தென்திருப்பேரை: தாமிரபரணிக்கரையின் தென்கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது. மூலவர் திருநாமம் மகரநெடுங்குழைக்காதன். உற்ஸவர் நிகரில் முகில் வண்ணன். தாயாரின் திருநாமம் குழைக்காத நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியார்.

திருக்கோளூர்: தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ. வந்து தெற்கே போகும் ஒரு கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். மதுரகவி ஆழ்வாரின் அவதார தலம் இது. மூலவரின் திருநாமம் வைத்தமாநிதிப் பெருமாள். தாயாரின் திருநாமம் குமுதவல்லி.

ஆழ்வார்திருநகரி : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது ஆழ்வார்திருநகரி. மூலவரின் திருநாமம் ஆதிநாதன். பொலிந்து நின்ற பிரான். தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. இந்தத் திருப்பதிகள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com