புரட்டாசியில் சிறக்கும் மேலத்திருப்பதி

பன்னிரு ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்படாமலும், 108 திவ்ய தேசங்களிலும் சேர்க்கப்படாமலும் உள்ள மிகமிக அற்புதமான ஸ்தலங்கள் ஏராளமானவை நம் நாட்டில் உண்டு.
Updated on
2 min read

பன்னிரு ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்படாமலும், 108 திவ்ய தேசங்களிலும் சேர்க்கப்படாமலும் உள்ள மிகமிக அற்புதமான ஸ்தலங்கள் ஏராளமானவை நம் நாட்டில் உண்டு.

அவற்றுள் மேலத்திருப்பதி, ஊஞ்சல்வனம் என்றெல்லாம் வழங்கப்படும் மொண்டிபாளையம் அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் ஒன்று. வைணவத் திருத்தலங்களுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளைக் கொண்ட திருத்தலம் இது.

திருமால் தனக்கே உரிய அர்ச்சாவதார வடிவமாக, சங்கு சக்கரதாரியாக, முழு உருவத்தில் இல்லாமல், சிவபெருமானுக்கு உரிய "லிங்க' ரூபத்தில் சுயம்புவாக இந்தக் கோயிலில் எழுந்தருளி சேவை சாதிப்பது தனிச் சிறப்பு.

மூலவரான வெங்கடேசப் பெருமாள் ஏக தள விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கியபடி சுயம்புவாக சாளக்கிராம மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராகவும் கூம்பு வடிவில் சுயம்பு லிங்கம் போல் காட்சி தருவது வேறு எந்த வைணவத் திருத்தலங்களிலும் காண முடியாத சிறப்பு. ஆலயத்தின் கருவறையில் லிங்க வடிவில் அமைந்துள்ள மூர்த்தியின் மேற்பகுதியில், வெங்கடேசப் பெருமாளின் திருவுருவம் புடைப்புச் சிற்பமாக பித்தளைத் தகட்டில் தங்கமுலாம் பூசப்பட்டு ஒளி வீசுகிறது.

உள்பிராகாரத்தில் அலமேலு மங்கை தாயார் சந்நிதி இருக்கிறது. தாயார் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார். சுற்றுப் பிராகாரத்துள் ஆண்டாளுக்கு தனி சந்நிதி உள்ளது.

மேலும் ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்ள், வேணுகோபாலர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும், தசாவதார நாயகர்களின் திரு உருவங்களும் பிராகாரத்திலேயே அமைந்துள்ளன. பரமபத வாசலில் மறுபக்கத்தில் வைகுண்ட நாராயண மூர்த்தி லட்சுமியுடன் காட்சியளிக்கிறார். அருகில் பள்ளியறை மற்றும் சனீஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

இவ்வாலயத்தில் தினமும் மூன்று கால பூஜை பாஞ்சராத்ர முறைப்படி நடைபெறுகிறது. தை மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம், கொடி ஏறிய எட்டாம் நாள் புனர்பூசத்தில் தேர்த்திருவிழா, மூன்றாம் நாள் இக்கோயில் தீர்த்தமான புண்ணிய புஷ்கரணியில் தெப்ப உற்ஸவம் ஆகியவை நடைபெறுகிறது. உற்ஸவ காலத்தில் அனுமந்த வாகனத்தில் உறியடி உற்ஸவத்தன்றும், குதிரை வாகனத்தில் விஜய தசமியன்றும் பெருமாள் திருவீதியுலா வருகிறார்.

பில்லி சூனியத்தால் வருந்துபவர்களும், நோய் நொடிகளால் அவதிப்படுபவர்களும் விரதம் மேற்கொண்டு இத்தலத்தில் வழிபடுகின்றனர். இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு வெள்ளெருக்கம் பூ மொட்டு, வேப்பங்கொழுந்து, எலுமிச்சை சாறு, துளசி, ஊஞ்சற்கரி, சுவாமி மெழுகு ஆகியவற்றால் ஆன பிரசாதத்தை வழங்குகிறார்கள்.

இத்திருத்தலத்தில் புரட்டாசி திருவிழா 6 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசிக்கு முன் ஒரு சனிக்கிழமையும், பின் ஒரு சனிக்கிழமையும் ஆக 6 சனிக்கிழமைகள் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது. மேலும் இங்கு வரும் சேவார்த்திகள் நடத்தும் கருட சேவை விசேஷமானது.

உற்ஸவர் கருடன் மீதமர்ந்து காட்சியளித்தபடி நான்கு வீதிகளையும் சுற்றி வருவார். இத்திருவீதி உலாவை "மெரவணை' என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை சமாராதனைகள் இங்கு மிகவும் பிரசித்தமானவை. அன்று பக்தர்களும் தங்களுக்கு உகந்தவாறு அன்னதானம் செய்து மகிழ்கிறார்கள்.

அமைவிடம்: கோயம்புத்தூர் - சத்தியமங்கலம் பாதையில் பசூர் என்ற ஊரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும், திருப்பூரிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மொண்டிபாளையம் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com