பாவங்களை அகற்றும் ஹஜ்

ஹிஜ்ரி ஆண்டின் 12வது இறுதி மாதமான துல்ஹஜ் 7.10.2013ல் பிறக்கிறது. இம்மாதத்தில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.
பாவங்களை அகற்றும் ஹஜ்
Updated on
1 min read

ஹிஜ்ரி ஆண்டின் 12வது இறுதி மாதமான துல்ஹஜ் 7.10.2013ல் பிறக்கிறது. இம்மாதத்தில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். முதல் மூன்று கடமைகளான ஈமான், தொழுகை,நோன்பு எல்லா இஸ்லாமியர்களுக்கும் கட்டாய கடமைகள், நான்காம் கடமை ஜகாத், பொருளுடைய செல்வர்களுக்குரியது. ஐந்தாம் கடமையான ஹஜ், உடல் நலம், பொருள் வளம், பயண வசதி, பெண்களாயின் தக்க துணையும் உடையவர்களுக்கே கடமை.

திருக்குர்ஆனின் 3-96வது வசனம் ""இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்காக மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக மக்காவில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியம் உள்ளதாகவும் உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும இருக்கிறது'' என்றும், 3-97வது வசனம், ""அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. இப்ராஹீம் தொழுகைக்கு நின்ற இடமும் இருக்கிறது. அதில் நுழைபவர் பாதுகாப்பு பெற்று அச்சமற்றவராகிறார். ஆகவே எவர் பயணம் செய்ய சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகையவர்கள் மீது அல்லாஹ்விற்காக அங்கே சென்று அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும்'' என்றும் கூறுகிறது.

திருக்குர் ஆனில் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முந்தைய நபிமார்களின் வரலாறுகள் கூறப்படுகின்றன. அவற்றில் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் கிரியைகள் ஹஜ்ஜில் உண்டு. இதையே, "நேரான வழியில் சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணை வைத்து வணங்குபவராக இருக்கவில்லை'' என்று குர் ஆனின் 3-95வது வசனம் அறிவிக்கிறது.

ஹஜ் என்ற சொல்லுக்கு "நோக்கம் வைத்தல்' என்ற பொருள் உண்டு. அல்லாஹ் ஆணையை நிறைவேற்றி அவனின் அருளைப் பெறும் நல்ல நோக்கத்தோடு செய்வதே ஹஜ்.

"மனிதர்களே! உங்கள் மீது ஹஜ் கடமையாக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்'' என்று இறைத்தூதர் இயம்பியது முஸ்லிம் நூலில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பாக உள்ளது.

ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் தூய்மை பெறுவதைத் தூதர் நபி (ஸல்) அவர்கள், "இரும்பு, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் துருவையும் மாசையும் நெருப்பு அகற்றி சுத்தப்படுத்துவது போல ஹஜ்ஜும் உம்ராவும் வறுமையையும் பாவங்களையும் அகற்றி விடுகின்றன'' என்று எடுத்துரைத்தார்கள். அறிவிப்பவர் - இப்னு மஸ் ஊது(ரலி). நூல் -நஸயீ,திர்மிதீ.

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் ஈருலக வாழ்விற்கும் துஆ செய்தால் நிறைவேறும் என்பதை இறைமறை குர் ஆனின் 2-201வது வசனம், ""ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் இம்மை - மறுமை இரு வாழ்வுக்கும் இறைஞ்ச வேண்டும். அவர்கள் ஈருலகத்திலும் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறுகிறது. அனைவரும் தூய ஹஜ்ஜை நேயமுடன் நிறைவேற்றி ஈருலகிலும் இறையருள் பெற்று வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com