
தஞ்சை அருகில் அமைந்துள்ளது வல்லம் ஏகௌரியம்மன் ஆலயம். 2500 ஆண்டுகள் வரலாற்றுப் பழைமை உடைய ஆலயம் இது. சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்துக் காளியாகவும் விளங்குபவள் ஏகௌரி.
வல்லப சோழன் காலத்தில் வழிபடப்பட்டு, கரிகாற் சோழ மன்னனால் கரிகாற் சோழ மாகாளி என்றும், பராந்தக சோழனால் வல்லத்துப் பட்டாரகி என்றும், இராஜ ராஜ சோழனால் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என்றும் அழைக்கப்பட்டு வந்தவள். சோழ மன்னர்கள் அரசு சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், வெற்றி வாகை சூட போர்க்களம் செல்லும் போதும் இந்த தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம்.
தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஏகௌரியம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். தீராத நோய் அல்லது திடீர் விபத்து என்று பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்ட கணவன்மார்களுக்காக வேண்டிக்கொண்டு இவளிடம் மடிப்பிச்சை கேட்டு திரளான பெண்கள் வருகிறார்கள். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திருநாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பம்சம். இங்கே நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து சந்தோஷம் நிலைக்கும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், கிரகக் கோளாறுகளால் துன்பம் அடைபவர்களும் இந்த அற்புத ஹோமங்களில் பங்குகொண்டு பலன் பெறுகிறார்கள்.
ராகுவும் கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், களத்ர தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த ஏகௌரி அம்மன் ஆலயத்துடன் இணைந்த அருள்மிகு முத்துக்கண் மாரியம்மன் ஆலயம், அருள்மிகு பழனியாண்டவர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களிலும் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
செப்: 16 அன்று காலை 6 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் பழனியாண்டவர் ஆலயத்திலும், காலை 7 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திலும், காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அருள்மிகு ஏகௌரியம்மன் ஆலயத்திலும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தகவலுக்கு: 98437 36037
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.