ஆறுதலும் தேறுதலும்!

அன்பின் அடையாளமாகச் சிலுவையை, வழிவழியாக கிறிஸ்தவர்கள் வணங்கி வந்துள்ளனர்.
ஆறுதலும் தேறுதலும்!
Updated on
1 min read

அன்பின் அடையாளமாகச் சிலுவையை, வழிவழியாக கிறிஸ்தவர்கள் வணங்கி வந்துள்ளனர். 13-ஆம் நூறறாண்டில் வாழ்ந்த புனிதர் பிரான்சிஸ். இயேசுவின் திருப்பாடுகளை விவிலியத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, சிலுவைப்பாதை பக்தியை வழி நடத்தினார்.

இயேசுவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பிடுவது முதல் நிலையிலும், அவரது உடல் அடக்கம் 14-ஆம் நிலையிலும் தியானிக்கப்படுகிறது. சித்திரம் அல்லது சிலை வடிவில் 14 நிலைகளும் கத்தோலிக்க ஆலயங்களில் இடம் வகிக்கின்றன.

சிலுவை சுமந்து செல்லும் பாதையில் மௌனம் கொண்டிருந்தாலும், ஓர் இடத்தில் மட்டும் இயேசு பேசுகிறார். உட்பொருள் பொதிந்த அந்த இடம் 8-ஆம் நிலையில் எடுத்துரைக்கப் படுகின்றது.

நற்கனிகளைப் பொழிகின்ற பசுமையான மரம் போன்று, ஆதரவாக விளங்கிய இயேசுவை வீழ்த்துவதற்கு, மூர்க்கர்கள் அவரை இழுத்துச் செல்கின்றனர் என்பதறிந்து பெண்கள் பெருந்திரளாக அழுது புலம்பியபடி அவரருகே வந்தனர்.

கொடிய வேதனையிலும் "யெருசலம் மகளிரே!" என்று அழைத்த இயேசு, தனக்காக அழ வேண்டாம் என்று கூறி, அவர்களுக்காகவும் அவர்களது பிள்ளைகளுக்காகவும் அழும்படி அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து,"மலடிகள், பால் கொடாதோர், பேறு பெற்றோர்" என்று எச்சரித்த இயேசு, அவ்வேளையில் தம் இழிநிலையை உணரும் மக்கள், தம்மையே அழித்துக்கொள்ள முனைவர் என்று கூறி பெண்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

மக்களிடையே மூன்றாண்டுகள் வாழ்ந்த காலத்திலும் ஆறுதலும் தேறுதலும் நிரம்பிய இத்தகைய வார்த்தைகளை மொழிந்துள்ளார்.

குழந்தைகளை தொட்டு ஆசிர்வதிக்கும்படி தாய்மார்கள் தம் மழலைகளுடன் வந்த நேரத்தில் களைப்புற்றிருந்தாலும், "இறையாட்சி குழந்தைகளுக்கு உரியதே!" என்று மகிழ்ந்தார்.

சிறுவர்களைப் பாவத்திற்குத் தூண்டுபவர்களை, "ஆழ்கடலில் அமிழ்த்திடுக!" என்று வெகுண்டு முழக்கமிட்டார்.

இயேசுவை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்குவதற்கு சூழ்ச்சி மிகுந்த மறைநூல் அறிஞர்கள், மற்ற ஆண்கள் சிலரின் துணையுடன் விலைமகள் ஒருவரை இயேசுவுக்கு முன்பாக நிறுத்தினர். பாவம் இல்லாதவர் முதற்கல்லை அவள் மேல் எறியட்டும் என்று கூறிய இயேசு, அப்பெண்ணை விடுவித்து, அவள் நல்வாழ்வு வாழ வாழ்த்தி அனுப்பினார்.

மதவாதிகளுக்கு மாறுபட்டு ஆண் ஆதிக்கத்தை எதிர்ப்பவராக, பெண்களின், தாய்மார்களின் பங்களிப்பைப் போற்றுபவராக இயேசு செயல்பட்டுள்ளார்.

மரித்த மூன்றாம் நாளில் உயிர் பெற்றிருந்த இயேசு, மகதலேநா என்ற பெண்ணுக்கு காட்சியளித்து முதல் நற்செய்தியாளராக அவரை அனுப்பினார்.

இடறல்கள் விளைவிப்போரிடமிருந்து இளம் தலை முறையை விழிப்புடன் பாது காத்திடவும், இளையோருக்கு நல்வழிகாட்டியாக விளங்கிடவும் இறை அருள் நம்மை வழிநடத்தட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com