பாங்கான பங்கீடு!

பங்கிடல் பரவலாக நடைபெறும் பாங்கான செயல். பங்கிடுபவர் பாங்குடையவராக இருந்தால்தான் பங்கீடும் தீங்கற்ற பாங்குடையதாக அமையும்.
Updated on
2 min read

பங்கிடல் பரவலாக நடைபெறும் பாங்கான செயல். பங்கிடுபவர் பாங்குடையவராக இருந்தால்தான் பங்கீடும் தீங்கற்ற பாங்குடையதாக அமையும். தொகுதி, பகுதி, மிகுதியைத் தகுதி அடிப்படையில் விகுதிப்படி பங்கிடுவதில் ஏற்படும் சங்கடங்கள், சண்டைகள், விண்டுரைக்கும் நொண்டிச் சாக்குகள், தெண்டனிட்டு மண்டியிடும் மனப்பாங்குகளைத் தினமும் பார்க்கிறோம். புத்தி சாதுர்யமாக மெத்த மகிழ பங்கிட்ட பண்டைய நிகழ்ச்சி ஒன்றை ஒப்பிட்டு பார்ப்போம்.

"மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக்கூறினால் நீதமாக தீர்ப்பளிக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்'' என்று கூறும் 4:58 வது குர்ஆனின் வசனப்படி நியாயமாக பங்கிட்டு கொடுப்பதும் நீதி வழங்குதல் போன்றதே.

சில பிரச்னைகள் சிக்கலாக இருக்கும். மிக்க கவனமாய் கருத்தூன்றி கணித்து திருத்தமாய் தீர்மானித்துப் பொருத்தமாய் தீர்ப்பு செய்ய வேண்டும். மருத்துவர் உடலைக் கவனித்து மருத்துவம் செய்வது போல பங்கீடு செய்பவர் பகுத்தறிவைப் பயன்படுத்தி பரிகாரம் சரியாக அமைய பங்கீடு செய்ய வேண்டும்.

நான்காம் கலீபா அலி(ரலி) அவர்களிடம் ஒரு வித்தியாசமான வினோத பங்கீடு பிரச்னை வந்தது. மூவர் 17 ஒட்டகங்களுடன் வந்தனர். அந்த 17 ஒட்டகங்களில் இரண்டிலொரு பங்கு முதல் பங்காளிக்கும், மூன்றில் ஒரு பங்கு இரண்டாமவருக்கும், ஒன்பதில் ஒரு பங்கு மூன்றாவது கூட்டாளிக்கும் பிரித்துத் தர மூவரும் வேண்டினர். அவர்கள் ஒட்டகங்களை அறுத்துக் கூறு போட்டுப் பங்கிடுவதை விரும்பவில்லை. அம் மூவரும் ஒவ்வொருவருக்கும் முழு ஒட்டகங்களே வேண்டும் என்று கோரினர்.

கலீபாவின் அவையில் இருந்தோர் மூளையை முடுக்கிவிட்டு மூலையில் கிடந்த குச்சிகளை எடுத்து பாலை மணலில் நடந்தவாறு கணக்குப் போட்டனர். அலி(ரலி) அவர்கள் அரசின் பொறுப்பிலிருந்த ஒட்டகங்களில் ஒன்றைக் கொண்டு வந்து 17 ஒட்டகங்களுடன் சேர்த்து நிறுத்தினார்கள்.

வரிசையில் நின்ற 18 ஒட்டகங்களில் முதல் பங்காளிக்கு இரண்டில் ஒரு பங்கு 9 ஒட்டகங்களை வழங்கினார்கள். இரண்டாமவருக்கு மூன்றில் ஒரு பங்கு 6 ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். மூன்றாமவர் ஒன்பதில் ஒரு பங்கு 2 ஒட்டகங்களை ஓட்டிச் செல்ல பணிக்கப்பட்டார். மீதமிருந்த ஒரு அரசு ஒட்டகம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு தீர்ப்பளிக்கும் திறமையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் வழக்கொன்றில் வழுவற விசாரித்து பழுதற தீர்ப்பு வழங்கி பாராட்டப்பட்டவர் அலி(ரலி) அவர்கள்.

பிரதிவாதியின் மாடுமுட்டி, வாதியின் கழுதை செத்துவிட்டது என்பதே வழக்கு. பிராணிகள் முட்டி மோதி திராணியற்ற கழுதை செத்ததற்கு மாட்டுக்குச் சாட்டையடி கொடுக்கவா முடியும் என்றார் ஒருவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அலி(ரலி) அவர்களை விசாரித்து விசனமில்லாமல் இசைவான தீர்ப்பு வழங்கப் பணித்தார்கள்.

வாதி, பிரதிவாதி இருவரிடமும் மாடும் கழுதையும் கட்டப்பட்டிருந்தனவா? என்று கேட்டார்கள் அலி(ரலி) அவர்கள். கழுதைக் கட்டப்பட்டிருந்தது; மாடு கட்டப்படவில்லை; என்பதை இருவரும் ஒத்துக் கொண்டனர். மாடு முட்டித்தள்ளும் பொழுது ஓடித் தப்பிக்க முடியாமல் கழுதைக் கட்டப்பட்டிருந்தது. மேய்ந்துக் கொண்டிருந்த மாடு மாய்ந்து போகும் வண்ணம் கழுதையை முட்டித் தள்ளியபொழுது மாட்டின் சொந்தக்காரரான பிரதிவாதி சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. பிரதிவாதி மாட்டை விரட்டி கழுதையின் விபரீத சாவைத் தடுக்கத் தவறிவிட்டார். எனவே மாட்டுக்குச் சொந்தக்காரரான பிரதிவாதிக்கு ஒரு கழுதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் அலி(ரலி) அவர்கள்.

அப்பொழுது அத்தீர்ப்பை ஒப்புக் கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மொழிந்த இரு பொன்மொழிகளை முறையே புரைதா (ரலி) அவர்களும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களும் அறிவிப்பது அபூதாவூத் நூலில் குறிப்பிடப்படுகிறது:

"உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு செய்பவர் சுவனம் செல்வர்!''

"நீதிபதி ஆராய்ந்து அறிந்து உண்மையை உணர்ந்து தீர்ப்பு செய்தால் இருமடங்கு நன்மை உண்டு!''

இன்று இவ்வாறான நல்ல தீர்ப்புகளால் நம் நாட்டில் நல்லன நடப்பதை நாம் காண்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com