முற்காலத்தில் ஒருவருக்கொருவர் அவர்களுக்கிடையே நடக்க வேண்டிய கொடுக்கல், வாங்கல், கொடுப்பினை, எடுப்பினை எல்லாவற்றிற்கும் வாய்மொழி உறுதியே இறுதி ஆவணம். வாய்மை பேணும் பேராண்மை மிக்க அக்காலத்தில் வாக்குறுதி மீறப்படவில்லை. மீறினால் தெய்வ தண்டனை ஏற்படும் என்ற அச்சமும் அம்மக்களிடமிருந்தது.
மூசா நபியை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்ளாமலும் அவர்கள் போதித்த ஏக இறைக் கொள்கையை ஏளனப்படுத்திய எகிப்து மன்னன் பிர்அவ்னும் அவனின் கூட்டத்தினரும் துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர். தாளாது அரற்றி மூசா நபியை ஏற்பதாக வாக்களித்து, இன்னல் நீங்க கன்னல் நபி இறைவனை இறைஞ்சிட வேண்டினர். இறைவன் அருளால் அல்லல் நீங்கி நல்லன நடந்தவுடன் வாக்குறுதியை மறந்து, துறந்து மாபாதகங்களில் விரைந்து வீழ்ந்தனர். இரைந்து இறைவன் பிர்அவ்ன் என்றனர். மூசா நபியை மீண்டும் தூசித்தனர். குர்ஆனின் 43 வது அத்தியாயத்தில் 46 முதல் 50 வரையுள்ள வசனங்கள் வாக்குறுதி மீறிய இந்நிகழ்வுகளைக் கூறுகின்றன.
அவர்களைத் திருத்திட மூசா நபி பொறுமையுடன் திருப்பியும் தீர்க்கமாய் கூறிய ஏக இறை கொள்கையைக் குறை கூறினர். மூசா நபியும் அவரைப் பின்பற்றியோரும் நாட்டை விட்டு ஓடச் செய்தனர். ஓடியவர்களையும் பிர்அவ்ன் துரத்திச் சென்று துன்புறுத்த முற்பட்ட பொழுது, ""இஸ்ராயிலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். பிர்அவ்னும் அவனின் படைகளும் வாக்குறுதியை மீறியதற்காக மூழ்கடித்தோம்'' (10-90) என்றும், ""இஸ்ரவேலர்களை அழைத்துச்சென்ற மூசா நபியைப் பின் தொடர்ந்த பிர்அவ்னும் அவனின் படையும் ஒருவரும் தப்பாது கடல் மூழ்கடித்தது'' (20-78) என்றும் குர்ஆனின் வசனங்கள் கூறுகின்றன.
வாக்கு மாறியதால் போக்கும் மாறி, நோக்கின்றி நொந்து மற்றவர்களின் தாக்கம் பற்றிய குர்ஆனின் இவ்வசனங்களுக்கு விளக்கம் அளித்த விரிவுரையாளர்கள் வாக்குறுதி காப்பாற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகள் தனி மனிதனுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்பதை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்கள்.
நுஃமானுப்னு முன்திர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு அரபி அரசர், அவர் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்களைத் தேர்ந்தெடுப்பார். ஒரு நாள் அன்பளிப்பு நாள். அன்று முதன்முதலாக அரசர் யாரைச் சந்திக்கிறாரோ அவருக்கு ஒரு நூறு ஒட்டகங்கள் பரிசளிப்பார். அப்பரிசு பெற்றவர் பெருஞ்செல்வந்தர் ஆகி விடுவார். அதே ஆண்டின் மற்றொரு நாள் மரண தண்டனை தரும் நாள். அன்று அரசர் முதன்முதலாக சந்திப்பவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
ஒருமுறை தண்டனை நாளில் அரசர் தாக்கீ கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை முதன்முதலில் சந்தித்தார். சந்திக்கப்பட்டவர் மனைவி, குழந்தைகளுக்கு உணவு வாங்கி வீட்டிற்குச் சென்றார். அந்நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது. அரசர் அகப்பட்டவருக்கு அன்பளிப்பு தரும்பொழுது, மரண தண்டனை அறிவிக்கும் பொழுதுதான் தெரியவரும். மரணத்தின் தருணம் வந்துவிட்டதை அறிந்த அவர் அரசரிடம் கையில் வைத்துள்ள உணவை வீட்டிலிருக்கும் மனைவி, குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றுத் திரும்ப அனுமதி கேட்டார். அவருக்காக யாரேனும் பிணையாக பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு அனுமதி தரவும், அவர் திரும்பி வராவிட்டால் பிணையாளி மரண தண்டனைப் பெறுவார் என்றும் அறிவித்தார் அரசர்.
அரசவையிலிருந்த ஷீறைக்குப்னு அலி பிணையாகப் பொறுப்பேற்றார். மரண தண்டனைக்குரியவர் வீட்டிற்குச் சென்று செய்தியைத் தெரிவித்து விடைபெற்று மாலையில் திரும்பினார். திரும்பி வந்தவரைப் பார்த்துத் திகைத்த அரசர், மரணத்தை ஏற்கத் துணிந்து திரும்பி வரத் தூண்டியது எது என்றுக் கேட்டார். வாக்குறுதியைக் காப்பாற்றுவதே வல்லோன் அல்லாஹ் அறிவித்த வழிமுறை என்று பதிலிறுத்தார். வாக்கு மாறாத, வாக்கை மீறாத தாக்கீ கோத்திர தகையுடையவரையும், தன்னுயிரைத் துணிந்து கொடை கொடுக்க முன்வந்த ஷீறைக்கையும் பாராட்டிய அரசர், இருவருக்கும் பெரும் பரிசுகள் கொடுத்தார். அவர்கள் இருவரின் அரிய செயலால் தண்டனைக்கான நாளை ரத்து செய்தார். மாறா, மீறா வாக்குறுதியால் மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை விளைந்தது.
நாமும் நேசிப்பவர்களுக்கும் யாசிப்பவர்களுக்கும் யோசித்து வாக்குறுதி கொடுத்து, மடுத்த வாயெலாம் தொடுத்து செயலாற்றி முடித்திடுவோம் வாக்குறுதியை. நீக்கமற நிறைந்துள்ள நீளுலகாளும் அல்லாஹ் ஆக்க வழியில் செயல்பட நமக்கு ஊக்கம் கொடுப்பான். உயர்வு பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.