கலகம் களையும் உலக நட்பு!

போக்குவரத்து புரட்சியாலும் தொலைத் தொடர்பு நுட்பத்தாலும் உலகில் எங்கோ ஒரு பகுதியில் நிகழும் சிறு நிகழ்ச்சியும் உடனுக்குடன்
Updated on
2 min read

போக்குவரத்து புரட்சியாலும் தொலைத் தொடர்பு நுட்பத்தாலும் உலகில் எங்கோ ஒரு பகுதியில் நிகழும் சிறு நிகழ்ச்சியும் உடனுக்குடன் உலகமெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் உலகம் சுருங்கி விட்டது. உண்மையில் உலகம் பரப்பளவில் சுருங்கவில்லை. உலகோர் உள்ளம் சுருங்கி விட்டது. நெருங்க மறுக்கிறது. நெருடல்களும் நெருக்குதல்களும் வெறுப்பை வளர்க்கின்றன. வீட்டுச் சுவர் பிரச்னையிலிருந்து நாட்டுக்கு நாடு நில, நீர், வான் எல்லை பிரச்னைகள் வரை அத்தனை வேறுபாடுகள்! அத்தனையையும் அகற்றி உலக மக்கள், நாடுகள் போரின்றி அமைதியாக வாழ அடிகோலுவதே உலக நட்பு நாள் (30.07.2014)

"உங்களுக்கிடையே ஸலாம் (முகமன்) கூறுவதைப் பழக்கப் படுத்துவதன் மூலம் ஒருவருக்கொருவர் நேசமுள்ளவர் ஆகலாம்'' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்ற நட்பை வளர்க்கும் இந் நன்மொழியை ஹழ்ரத் அபூஹீரைரா (ரலி) அறிவித்தது முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத் ஆகிய நூற்களில் காணப்படுகிறது.

உலகில் விரும்பியதைப் பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் முகநக நட்பது நட்பல்ல. அகம் ஒன்றி அல்லாஹ் அருளியபடி நேசிப்பதே நேரிய நட்பு. அப்படி நேசிப்பவர்கள் மறுமையில் நிழலில்லாத நாளிலும் நிழலைப் பெறுவர். அவர்களின் உண்மையான நட்பு விழலுக்கிறைத்த நீராகாது; விழுமிய பயனைத் தரும்.

அடைக்குந் தாழில்லா அன்பினால் பெருகுவதே நட்பு. என்பும் பிறர்க்கீனும் பண்பும் நட்பின் சிறப்பு. நட்பு சமூக நல்லிணக்கத்திற்கு அடிப்படை. நட்பு இரு உடல்களில் உறையும் ஒரே ஆன்மா. இஸ்லாம் சினத்தையும் வெறுப்பையும் பிரிவினையையும் தடை செய்கிறது.

""கருத்து வேறுபாடு, வேறு காரணங்களால் நண்பர்கள் மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருக்கொருவர் பேசாதிருக்கக் கூடாது. அவர்களில் முதலில் முகமன் (ஸலாம்) கூறுபவர்களுக்கு அதிக நன்மையுண்டு.'' (அறிவிப்பவர் -அபூஹீரைரா (ரலி) நூல்: அல் அதபுல் முஃபிரத்.

குறை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் பிறரைக் கண்காணிப்பதும் பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்தி பேசுவதும் நட்பைக் கெடுக்கும். போட்டி, பொறாமை, பிணக்கும் இணக்கமான நட்பிற்கு உகந்ததல்ல.

""கோபத்தை மறந்து மனிதர்களின் குற்றங்களை மன்னிக்கும் நல்லோரையே அல்லாஹ் நேசிக்கிறான்'' என்று திருக் குர்ஆனின் 3-134 ஆவது வசனம் கூறுகிறது.

நண்பர்களிடையே வாக்குறுதிகளை வாய்மையோடு நிறைவேற்ற வேண்டும். உரிய காலத்தில் உற்றுழி உதவ வேண்டும். பெற்றோர்களின் நண்பர்களையும் பேணி மரியாதை செய்ய வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவில் சந்தித்த கிராமவாசி ஒருவரைத் தான் ஏறி வந்த கழுதையின் மீது ஏறி அமரவைத்து தனது தலையிலிருந்த தலைப்பாகையையும் அந்த கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். இப்படி செய்ததற்குக் காரணம் கேட்டபொழுது, கிராமவாசி அவர்களின் தந்தை உமர் (ரலி) அவர்களுக்குப் பிரியமானவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ""உதவிகளில் எல்லாம் பேருதவி ஒருவர் அவரின் தந்தையின் நண்பர்களோடு நல்லிணக்கமாக இருப்பதே'' என்று எடுத்துரைத்தபடி கிராமவாசிக்கு மரியாதை செய்ததாக இயம்பினார் இப்நு உமர் (ரலி) அவர்கள். (நூல்- முஸ்லிம்).

நபிகள் (ஸல்) அவர்கள் அவர்களின் முதல் மனைவி கதீஜா(ரலி) அவர்கள் இறந்த பின்னும் மனைவியின் தோழிகளுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்தார்கள்.

மனிதர்கள் நண்பர்களை நேசிப்பவர்களாகவும் நண்பர்களால் நேசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்ல நண்பர் அத்தர் (நறுமண பொருள்) வியாபாரி போன்றவர். அந்த அத்தரிலிருந்து அவரின் நண்பர் எதனையும் பெறாவிடினும் அத்தரின் நறுமணம் அந்நண்பரின் மீது வீசும். கெட்ட நண்பர் கொல்லனின் துருத்தி போன்றவர். அத்துருத்தியின் நெருப்பு பொறி சுடாவிட்டாலும் அந்த நெருப்பின் தணலை (சூடு) நண்பரின் உடல் உணரும். நல்ல நட்பிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு மக்கத்து முஹாஜிரீன்களும் மதீனத்து அன்சாரிகளும்.

மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிரீன்களுக்கு மதீனாவில் வாழ்ந்த அன்சாரி தோழர்கள் அபயமளித்து ஆதரவு நல்கி அவர்களின் சொத்துக்களையும் வந்தவர்களுக்குச் சொந்தமாக்கி கொடுத்து மக்கத்து முஸ்லிம்கள் முன்னேற உதவினர்.

மனிதர்களிடையே வளரும் நட்பு சமூக நல்லிணக்கத்திற்கும் சமுதாய ஒற்றுமைக்கும் வித்திடும். சமுதாய ஒற்றுமை நாட்டின் ஒருமைப்பாட்டை நிலை நாட்டும். நாடுகளிடையே நட்பு மலர்ந்து உலக நட்பு உருவாகி உலகம் ஒன்றாகும். போர் ஒழியும். கலகமில்லாத அமைதி அகிலம் முழுவதும் நிலவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com