கண்ணன் வந்தான்! கண்ணன் வந்தான்!

கண்ணன் வடமதுரையில் தேவகியின் மைந்தனாகப் பிறந்து ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தான்
கண்ணன் வந்தான்! கண்ணன் வந்தான்!
Published on
Updated on
2 min read

கண்ணன் வடமதுரையில் தேவகியின் மைந்தனாகப் பிறந்து ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தான் என்பதைப் பெரியாழ்வாரின் "சீதக்கடல் உள்ளமுதென்ன தேவகி கோதைக் குழலாள சோதைக்குப் போத்தந்த' என்ற பாடலடிகள் விளக்குகின்றன. தேவகியின் மகனாகப் பிறந்த கண்ணன் கம்சனுக்குப் பயந்து பிறந்த இரவிலேயே ஆயர்பாடியில் யசோதை மைந்தனாக வளர்ந்தான் என்று ஆண்டாளும்

பாடியுள்ளார். கண்ணன் கம்சனுக்குப் பயந்து போய் ஆயர்பாடிக்கு ஏன் சென்றான் என்பதற்கு வேறுகாரணம் உண்டு.

ஒரே வேளையில் இரண்டு பெண்கள் திருமாலை நினைத்துத் தவம் செய்தனர். திருமால் ஒரு பெண் முன் தோன்றி அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும், என்று கேட்டார்.

அதற்கு அப்பெண், பரம்பொருளாகிய நீயே என்மகனாகப் பிறக்க வேண்டும், என்றாள். திருமால், இன்னொரு பெண்ணும் இதே வரம் கேட்பதற்குத் தவம் இருக்கிறாள். ஆதலால் உன் வயிற்றில் மகனாகப் பிறந்து அந்தப் பெண்ணின் மகனாக வளர்கிறேன் என்றார். அவ்வரத்தின் படியே வடமதுரையில் தேவகியின் மைந்தனாகப் பிறந்த கண்ணன் ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தார். கண்ணன்

யசோதை மகனாக வளர்ந்தபோது பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றைத் திருடித்தின்று தாய் யசோதைக்குத் தொல்லை கொடுத்தான். மண்ணை உண்டு வாயில் வையகம் காட்டினான்.

ஆயர்சிறுவர்களைத் திரட்டிக்கொண்டு கோபியர் வீடுகளில் வெண்ணெயும் பாலும் திருடித் தின்றான்.

அவர்கள் கண்ணனைப்பற்றி யசோதையிடம் குறை கூறியதால் யசோதை கண்ணன் மேல் கோபம் கொண்டு உரலில் கட்டினாள். உலகளந்த மாயவன் தாய் யசோதையின் சிறுகயிற்றுக்குக் கட்டுண்டு பயந்தவன் போல் கண்ணீர் வடித்தான். கண்ணனின் குழந்தைப் பருவத்தில் யசோதைக்குத் தொல்லை கொடுத்தாலும் கண்ணனின் அழகையும் விளையாட்டாகச் செய்யும் செயற்கரிய செயலையும் கண்டு குழந்தை வளர்ப்பதில் தாய் அடையும் இன்பத்திற்கே எல்லை கண்டாள்.

கம்சனால் ஏவப் பட்ட பூதகியைக் கொன்றான். சகடாசுரன் முதலிய தீயவர்களை அழித்தான். தான் பெரியவனான பிறகு வஞ்சனையாக அழைத்த கம்சனின் அழைப்பை ஏற்று வடமதுரை சென்று அவனைக் கொன்று வடமதுரை மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.

பாண்டவர்களுக்காக நாடுகேட்க துரியோதனனிடம் தூதுசென்று பாண்டவ தூதன் என்று பெயர் பெற்றார். துரியோதனன் நாடுதரமறுத்ததால் பாரதப் போரில் பார்த்தனுக்குத் தேரோட்டி பார்த்தசாரதி என்று பெயர் பெற்றார்.

அதர்மத்தின் சக்தியாக விளங்கிய துரியோதனாதியரை அழித்து தர்மத்தின் சக்தியாக விளங்கிய பாண்டவர்களைக் காத்ததின் மூலம் அதர்மத்தையழித்து தர்மத்தைக் காத்தார். பாரெங்கும் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடச் செய்து பக்தர்கள் உய்வதற்கு வழிகாட்டி அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

ஆண்டாள் திருப்பாவையில் கண்ணனைப் பெற்றதாயாகிய தேவகிக்கும், வளர்த்ததாயாகிய யசோதைக்கும் சமமான பெருமை தரவே கண்ணன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து மற்றொருத்தி மகனாய் வளர்ந்தான் என்று பாடாமல், ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்று பாடியுள்ளார்.

ஈரேழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்து அளந்த கண்ணன் தேவகியின் மணிவயிற்றில் பிறந்து பெற்றதாயின் வயிற்றுக்குப் பெருமை சேர்த்தான் என்பதை ஆண்டாள் தாயைக்குடல் விளக்கம் செய்தவன் என்று பாடியுள்ளார்.

வளர்த்ததாயாகிய யசோதை, பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ளக் கண்ணனை உரலில் கட்டி வாய் பொத்திக் கெஞ்சவைத்துப் பெருமை பெற்றாள். கண்ணன், யசோதையின் கயிற்றால் கட்டுண்டதால் தாமோதரன் என்று பெயர் பெற்றான். பெற்றதாய்க்கும் வளர்த்த தாய்க்கும் பெருமை சேர்த்தவன் கண்ணன் என்பதை ஆண்டாள் திருப்பாவையில் ஐந்தாவது பாசுரத்தில் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை என்று பாடியுள்ளாள்.

கண்ணனின் அவதாரதினமான 17.8.2014 அன்று உலகளந்த உத்தமனின் உறியடித் திருவிழாவைப் பக்தியுடன் கொண்டாடுபவர்கள் இம்மையில் எல்லாநலமும் பெற்று மறுமையில் பரமபதம் பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com