

அரேபியாவின் இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு படிப்பினை.
ஒருநாள் கலீபா உமர் (ரலி) அவர்களும் ஹழ்ரத் கஅப் இப்னு ஸீர் (ரலி) அவர்களும் அளவளாவிக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் அவளின் கணவனைப் பற்றி முறையிட்டாள். இரவும் பகலும் இறைவணக்கத்தில் மூழ்கிடும் அவளின் கணவன் இல்லறக் கடமைகளைப் புறக்கணிக்கிறார் என்பதே குற்றச்சாட்டு.
அருகிலிருந்த கஅப் (ரலி) அவர்களை விசாரித்து தீர்ப்பளிக்க பணித்தார்கள் கலீபா உமர் (ரலி) அவர்கள். அவளின் கணவனை அழைத்து விசாரித்த ஹழரத் கஅப் (ரலி) அவர்கள், ""ஒரே காலத்தில் நான்கு மனைவிகளோடு வாழ நம்மை அனுமதித்த இறைவன் இல்லறத்தைத் துறந்து துறவு பூண தூண்டவில்லை. உங்களுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். நீங்கள் மனைவியோடு நான்கு நாட்களுக்கு ஒருமுறை இல்லறத்தில் ஈடுபட வேண்டும். அடுத்த மூன்று இரவுகளில் இறை வணக்கத்தில் ஈடுபடுங்கள்'' என்று தீர்ப்பளித்தார்கள்.
விதவைகளை உதவாக்கரைகள் என்று ஒதுக்கி வைத்து உருகவிட்டு கருகி கலங்கச் செய்த காலத்தில், விதவைகள் தாழாது வாழ விதவைகளை மணம் செய்து வழிகாட்டிய வள்ளல் நபி (ஸல்) அவர்கள் இறை கட்டளைப்படி முறை வைத்து மனைவியர் இல்லங்களில் தங்கிய தகைமையை பேணியும் உங்கள் மனைவியரிடம் நீதமாக நடந்து கொள்ளுங்கள் என்ற குர்ஆனின் 4-3 ஆவது கூற்றுப் படியும் கூறிய குறையறு தீர்ப்பில் நிறைவு கண்ட கலீபா உமர் (ரலி) அவர்கள் ஹழ்ரத் கஅப் (ரலி) அவர்களைப் பஸராவின் ஒரு பகுதிக்கு நீதிபதியாக நியமித்தார்கள்.
ஒருமுறை ஒரு குதிரையை விலை பேசிய கலீபா உமர் (ரலி) அவர்கள் குதிரையின் முதிர்ந்த ஒட்டத்தைப் பரிசோதிப்பதற்காக அக் குதிரையின் மீது சவாரி செய்தார்கள். முரட்டுத் தனமாக ஓடிய அக்குதிரையின் காலில் காயம் ஏற்பட்டது. விரட்டி ஓட்டும் முன்னரே மிரண்டு ஓடிய குதிரையை வேண்டாம் என்று திருப்பி கொடுத்தார்கள் கலீபா.
குதிரைக்குக் காயம் ஏற்பட்டதால் திரும்ப பெற மறுத்தான் வியாபாரி. வழக்கு ஹழ்ரத் ஷீரைஹ் (ரலி) அவர்களிடம் சென்றது. இருவரையும் விசாரித்த ஹழ்ரத் ஷீரைஹ் (ரலி) அவர்கள், கலீபா குதிரையை வைத்துக் கொண்டு பேசிய விலையை கொடுத்துவிட வேண்டும்; அல்லது கலீபா குதிரையை எப்படி பெற்றாரோ அப்படியே வியாபாரியிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார்கள்.
தீர்ப்பின்படி கலீபாவால் எப்படி குதிரையை பெற்றாரோ அப்படி வியாபாரியிடம் ஒப்படைக்க இயலாது. குதிரைக்குக் காயம் கலீபா சவாரி செய்யும் பொழுது ஏற்பட்டது. ""உங்கள் இறைவன்மீது சத்தியமாகத் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து உங்களின் தீர்ப்பை அவர்கள் அதிருப்தியின்றி மனமுவந்து முற்றிலும் ஏற்காதவரையில் உண்மை நம்பிக்கையாளர்கள் ஆக மாட்டார்கள்'' என்ற குர்ஆனின் 4-65 ஆவது வசனப்படி கலீபா உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பைத் திருப்தியுடன் ஏற்று வியாபாரிக்குக் குதிரையின் விலையை கொடுத்தார்கள்.
""மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பு கூறினால் பாரபட்சம் இல்லாது நீதமாக தீர்ப்பளிக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்ற திருக் குர்ஆனின் 4-58 ஆவது வசனப்படி கலீபாவிற்குச் சாதகம் செய்யாது சரியான தீர்ப்பை வழங்கிய ஹழ்ரத் ஷீரைஹ் (ரலி) அவர்களைக் கூஃபாவுக்கு நீதிபதியாக நியமித்தார்கள் கலீபா உமர் (ரலி) அவர்கள்.
அதனால்தான் உமர் (ரலி) அவர்களின் உன்னத ஆட்சியை உலகம் புகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.