
திருக்கைலாய மலையில் சிவபெருமானை வணங்கும் பொருட்டு பிரம்மதேவன் ஒருநாள் வந்தார். அவருடன் இந்திராதி தேவர்கள், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் என்று ஏகப்பட்ட பேர் வந்திருந்தனர்.
அவர்கள் யாவரும் சிவபெருமானை வணங்கி அவர் ஆசி பெற்றுத் திரும்புகையில், மலையின் வடக்குப் பகுதியில் நவரத்தின சிம்மாசனத்தில் ஜெகஜோதியாக வீற்றிருந்த முருகப்பெருமானை அணுகி அவரையும் உள்ளன்புடன் வழிபட்டு நின்றனர். ஆனால் இவர்களில் பிரம்மன் மட்டும் முருகனை "இவன் சிறுபிள்ளைதானே... இவனை ஏன் வணங்க வேண்டும்' என்ற அகந்தையுடன் வணங்காமல் தாண்டிச் சென்றார்.
அதைக்கண்ட முருகப்பெருமான் பிரம்மனுக்குத் தானும் சிவனும் ஒன்றேதான், வேறுவேறு அல்ல என்பதை உணர்த்த விரும்பி பிரம்மதேவனை அழைத்தார்.
பிரம்மனும் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் கைக்கூப்பியும் கூப்பாததுபோல் அரைகுறையாக வணங்கினார்.
கந்தவேள் அவரை "நீர் யார்?' என்று வினவ, அவர், ""நான்தான் படைக்கும் தொழில் செய்யும் பிரம்மதேவன்'' என்றார்.
அது கேட்ட முருகன், ""அப்படி என்றால் உமக்கு வேதத்தைப் பற்றித் தெரிந்திருக்குமே?'' என்றார்.
""ஆம்... தெரியும்''- பிரம்மன்.
""அப்படி என்றால் முதல் வேதமாகிய ரிக் வேதத்தினைக் கூறு'' என்று முருகவேல் கேட்க, பிரம்மன் உடனே ""ஓம்'' என்ற மந்திரத்துடன் கூற ஆரம்பித்தார்.
உடனே முருகப்பெருமான், ""நில்லும் நில்லும்... முதலில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தைக் கூறினீர் அல்லவா? அந்தப் பிரணவ மந்திரத்தின் பொருளை எனக்கு விளக்கிச் சொல்லும்!'' என்றார்.
பிரம்மன் விழித்தார்! அவருக்கு அதன் பொருள் தெரியவில்லை. சிவபெருமானிடம் வேதம் பயின்றாரே தவிர, அதன் பொருளை அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவில்லை. அந்தத் தவறை நினைத்து இப்போது வெட்கித் தலைகுனிந்தார். தான் படைக்கும் கடவுள் என்ற கர்வம் அவரிடமிருந்து ஒழிந்தது.
எனினும் முருகன் அவரை விடுவதாக இல்லை. ""என்ன... படைக்கும் கடவுளே... ஏன் இப்படி விழிக்கிறீர்? சீக்கிரம் பதில் சொல்லும்!'' என்று கூற, பிரம்மதேவன் தனக்கு அதன் பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொண்டு தலை குனிந்தார்.
அது கண்டு வெகுண்டதுபோல் நடித்த முருகன், ""என்ன கடவுள் நீர்? இந்த இரண்டு எழுத்து மந்திரத்திற்கும் பொருள் தெரியாது? என்ன சிருஷ்டித் தொழில் செய்கிறீர் நீர்? இப்படித்தான் இருக்குமோ உமது சிருஷ்டித் தொழிலும்?'' என்று பிரம்மதேவனின் நான்கு தலைகளும் குலுங்கும்படி ஓங்கிக் குட்டினார்.
பிரம்மதேவனின் அகங்காரம் முழுவதும் தொலைந்து போகும்படி பிரம்மனை பூமியில் தள்ளினார். உடனே தன் வீரர்களை அழைத்து பிரம்மனைக் கொண்டுபோய் கந்தகிரியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் முருகப்பெருமான்.
பிரம்மாவைச் சிறையில் அடைத்தாயிற்று. அதனால் உலகில் படைப்புத் தொழில் நடைபெறவில்லை. பார்த்தார் முருகப்பெருமான்... உடனே ஒரு கோயிலைத் தோற்றுவித்து அங்கு நடுவே ஓர் அரியணையை அமைத்து அதில் ஒருகரத்தில் ருத்ராட்சமாலையும், ஒரு கரத்தில் கமண்டலமும் மற்றிரு கரங்கள் அபயவரமாகவும் நான்கு திருக்கரங்களோடும் ஒரு முகமுடனும் எழுந்தருளி படைப்புத் தொழிலைப் புரிய ஆரம்பித்துவிட்டார்!
அதோடு மட்டுமல்ல, படைத்தலோடு, காத்தல், அழித்தல் ஆகிய மற்ற இரு தொழில்களோடு முத்தொழிலும் புரிய வல்லவர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு அத்தொழில்களையும் இவர் ஒருவரே புரிய ஆரம்பித்து விட்டார்!
இப்படிப் பல தேவ வருடங்கள் கழிந்தன. இத்தனை ஆண்டுகளில் முருகவேளின் படைத்தல் தொழிலில் முகிழ்த்த ஆன்மாக்கள் புண்ணிய வடிவாக விளங்கினர்! பாவம் என்பது ஒரு சிறிதும் உலகில் இல்லவே இல்லை. எங்கும் மெஞ்ஞானம் மிளிர்ந்து சிவமணங் கமழ்ந்தது. (பின்பு பிரம்மன் சிறையிலேயே பல்லாண்டுகள் தவம் புரிந்து மீண்டும் தன் படைப்புத் தொழிலைப் பெற்றது வேறு கதை!)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.