பக்தர்களைக் காக்கும் கன்னியம்மன்

அருளை வழங்கி துயரை துடைப்பவள் அன்னை! காக்கும் கரங்கள் கொண்ட அந்த அம்மையின்
பக்தர்களைக் காக்கும் கன்னியம்மன்

அருளை வழங்கி துயரை துடைப்பவள் அன்னை! காக்கும் கரங்கள் கொண்ட அந்த அம்மையின் புகழ்பாடாதவர் எவருண்டு? சென்னையில் அம்மனுக்கு புகழ்பெற்ற ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் வடசென்னை, கொளத்தூர், சீனிவாசா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில்! இக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

தலவரலாறு: முன்னொரு காலத்தில் மகிழம் பூ மரத்தடியில் சப்தகன்னிகள் சுயம்பு ரூபமாக தோன்றினார்கள். மரங்கள் அடர்ந்த தோப்புகள் சூழ்ந்த அந்தப் பகுதியில் நாகங்கள் புற்றுகளில் அடைக்கலமாகி, சப்தகன்னியர்களை காவல் காத்து வந்ததாக கூறப்படுகிறது.

1940 ஆம் ஆண்டில் சுயம்பு ரூபமாக வெளிப்பட்ட அம்மனை கண்டுபிடித்த கிராம மக்கள் பூஜைகளை செய்யத்தொடங்கினர். இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த தலமானதால் கோயிலின் கருவறையை எவ்வித பெரிய மாறுதல்களும் செய்யாமல் அம்மனை சுயம்பு ரூபமாகவே வழிபடுகின்றனர்.

உக்கிரத் தன்மை வாய்ந்த சப்த கன்னியர்களின் உக்கிரத்தை குறைக்கும் விதமாக, பின்புறம் இராஜ இராஜேஸ்வரி அம்மன் படம் வைத்து பூஜிக்கப்படுகிறது.

தலச்சிறப்பு: இத்திருத்தலத்தில் மகிழம் பூ மரத்தடியில் நடுவில் கமலக்கன்னி, வலதுபுறம் ஜலக்கன்னி, தாமரைக்கன்னி, இடும்பாசுரக்கன்னியும், இடதுபுறம் பாலகன்னி, புஷ்பகன்னி, நாககன்னி என சப்த கன்னியர்கள் சுயம்புவாக அமைந்து அருள்பாலிக்கின்றனர்.

ஆலயத்தில் அம்மனுக்கு வலப்புறத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சந்நிதியும், இடது புறத்தில் பால முருகன் சந்நிதியும் அமைந்துள்ளன. பின்புறத்தில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் மற்றும் வலம்புரி விநாயகர், கால பைரவர், முனீஸ்வரர், தட்சிணா மூர்த்தி, ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, சப்த கன்னிகளின் அண்ணன்மார்கள், நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன.

கோயிலின் சிறப்பு: இத்தலத்தில் உள்ள வெள்ளெருக்குச் செடியுடன் பாம்பு புற்றும் உள்ளது. அதோடு, சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வமரமும் உள்ளது. காலை மற்றும் மாலை வேளையில் கன்னியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. ஜனவரி மாதத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும் மார்கழியில் அனுமன் ஜெயந்தி விழாவும் கார்த்திகை சோம வாரத்தில் அரசு-வேம்புக்குத் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆலயத்தில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மகிழ மரத்தில் பூக்கள் பூக்குமே தவிர காய்கள் காய்ப்பதில்லையாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் மதுரையில் நடைபெறும் அதே நாளில் இங்கும் விமரிசையாக நடத்தப்படுவது சிறப்பு. ஆடி மாதத்தில் வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் நடைபெறும் தினத்தில் பாலியம்மனின் கடைசி சகோதரியான இந்த கன்னியம்மனை தரித்து விட்டு தான், தீமிதிக்கும் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்குவது வழக்கம்.

சிறப்பு பிரார்த்தனை: நவராத்திரியின் போது அம்மனுக்கு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். அந்தச் சிறப்பு அலங்காரத்தில் ஒருநாள் அம்மனுக்கு சந்தானலட்சுமி அலங்காரம் செய்யப்படும். அன்றைய தினம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குழந்தை பொம்மைகள் கொடுத்தால் அதை பூஜையில் வைத்து மறுநாள் கொடுப்பார்கள்.

அதோடு இந்த பூஜையில் கலந்துகொண்டவர்கள் ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம். திருமணம் ஆகாதவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து நந்திகேஸ்வரருக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வித்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் அன்னையான கன்னியம்மனை வணங்கி நலங்கள் அனைத்தும் பெற்று மகிழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com