திருமண வரம் அருளும் திவ்யதேசம்!

திருமண வரம் அருளும் திருத்தலங்கள் பல இருந்தாலும், அவற்றுள் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கும்
திருமண வரம் அருளும் திவ்யதேசம்!
Updated on
1 min read

திருமண வரம் அருளும் திருத்தலங்கள் பல இருந்தாலும், அவற்றுள் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் திருவிடந்தை எனும் தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழங்காலத்திலிருந்தே "திருவிட வெந்தை' என்று வழங்கப்பட்டு வந்த இத்தலத்தில் பெருமான், ஆதிவராக பெருமாளாக, பூமி தேவியின் அம்சமாக விளங்கும் அகிலவல்லித் தாயாரை தன் இடப்பக்கத்தில் ஏந்தி காட்சி அளிப்பதோடு, தனது ஒரு திருப்பாதத்தை பூமியிலும், மற்றொரு திருப்பாதத்தை ஆதிசேஷனின் தலை மீதும் வைத்துக்கொண்டு ஆறடி உயரத்திற்கு கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகத் திகழும் இத்தலம், ஸ்ரீபுரி, வராகபுரி, அசுரகுல கால நல்லூர் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இத்தலத்திற்கு வந்து கோயிலில் தரும் மாலையை அணிந்து பெருமாளை வேண்டி, கோயிலை ஒன்பது முறை வலம் வந்து வணங்கி வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமணம் கைகூடியதும் தம்பதிகள் இவ்வாலயத்திற்கு வந்து தமது உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறார்கள். இக் கோயிலில் உள்ள வராக தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடினால் மோட்சம் கிட்டும் எனவும், சித்திரை மாதத்தில் இங்குள்ள கல்யாண திருக்குளத்தில் நீராடினால் நாம் எண்ணிய காரியம் நடைபெறும் என்றும் இவ்வாலய தலவரலாறு தெரிவிக்கிறது.

கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆதிவராகப் பெருமாளின் திருவடியில் உள்ள ஆதிசேஷனை வணங்குபவர்களுக்கு ராகு - கேது தோஷங்கள் நீங்குகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத் திருக்கோயிலில் அமைந்துள்ள நித்திய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் ஆகியோரது கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டிப் பொட்டுகள் அமைந்துள்ளன.

இவைகளை கண்டு மகிழும் அன்பர்கள், தங்களின் திருஷ்டி, தோஷங்கள் நீங்கப் பெறுவார்கள் என்பர்.இத்தலத்தில் அம்மனுக்கு "மனோகரம்' என்னும் பலகாரம் விசேஷ தளிகையாகப் படைக்கப்படுகின்றது. மேலும் ஆலயத்தின் தலவிருட்சம் புன்னை மரம்.

சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் வங்கக்கடலை நோக்கி அழகுற அமைந்துள்ள இந்த ஆலயம், திருமங்கையாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. திருவிடந்தைக்கு நாமும் சென்று தரிசித்து பெருமாள் மற்றும் தாயாரின் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com