குழந்தைச் செல்வங்கள்

நம் நாடு நிறைவுடன் திகழ்வதற்கு, குழந்தைகள் என்னும் அரும்புகள் பேணப்பட வேண்டும் என்று, நம் பாரதத்தின்....
குழந்தைச் செல்வங்கள்
Updated on
2 min read

நம் நாடு நிறைவுடன் திகழ்வதற்கு, குழந்தைகள் என்னும் அரும்புகள் பேணப்பட வேண்டும் என்று, நம் பாரதத்தின் முதல் பிரதமர் பேராவல் கொண்டிருந்தார் என்பதை நினைவுப் படுத்தி வருகின்றோம். கடவுளின் பார்வையில் மதிப்புக்கும் பாசத்திற்கும் உரியவர்களாக குழந்தைகள் இருக்கின்றனர் என்பதை விவிலிய நூல் எடுத்துரைக்கின்றது.

மக்கட் பேறு என்பது பெரும் செல்வமாக, அருட்கொடையாக கருதி, இஸ்ரயேல் சமுதாயத்தினர் மகிழ்ந்து வந்துள்ளனர் என்பதை விவிலியத்தின் பழைய ஏற்பாடும் விளக்குகின்றது.

முதுபெரும் தந்தை என்று, அச்சமுதாயத்தினர் அழைத்திடும் ஆபிரகாமை ஆசீர்வதித்த கடவுள், அவரது வழிமரபினை விண்மீன்கள் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வதாக வாக்களித்துள்ளார் என்று ஆர்பரித்து வந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு இறை அறிவை ஊட்டுமாறும் இறை வழிபாடுகளில் பங்கேற்கச் செய்யுமாறும் பெரியவர்களுக்கு அறிவுறுத்துகின்ற மறைநூல், கடந்து வந்த பாதையின் வரலாற்றை மழலையர் நெஞ்சங்களில் நன்கு பதிய செய்திட வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது. முதியவர்களின் மணிமகுடமாக அவர்களது பேரப்பிள்ளைகள் உள்ளனர் என்றும் மொழிகின்றது. கடவுள் அருளும் நலன்களை எடுத்தோதும் திருப்பாடல் ஒன்று, ""பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்! மக்கட்பேறு அவர் அருளும் பரிசில்!"' என்று பறை சாற்றுகின்றது.

பாவிகளின் நண்பன் என்று பரிசேயர்களால் பரிகசிக்கப்பட்ட இயேசு பெருமான், இருவகையினரை மட்டுமே கடிந்துள்ளார். மக்களின் அச்ச உணர்வுகளைப் பயன்படுத்தி, ஆலயத்தை வியாபார கூடமாக்கும் அன்பற்ற சமயப் பெரியவர்கள் முதல் வகையினர். தீய நாட்டங்களை இளஞ்சிறார்களிடம் தூண்டக்கூடிய கயவர்கள் இரண்டாம் வகையினர். அத்தகைய தீயவர்களின் கழுத்தில் பெருங்கல்லினைக்கட்டி, ஆழ்கடலில் அமிழ்த்திடுக! என்று வெகுண்டு முழங்கினார்.

மானிடர் மீட்புக்காக மழலையாக அவதரித்த இறை இயேசு, தன் உருவாக, சாயலாக ஒவ்வொரு குழந்தையையும் நேசித்ததை காண்கிறோம். குழந்தைகளும் அவரை ஒரு நண்பராக நாடி வந்து, அவரது அருட் வாக்கில் இணைந்தனர். சிறுவன் ஒருவன் உவந்தளித்த ஓர் அப்பத்தையும் மீனையும் பல்கச் செய்த இயேசுபிரான், ஐயாயிரம் பேர்களுக்கு உணவளித்ததையும் காண்கிறோம். சிறுமியை மீண்டும் உயிர் பெறச் செய்து அவளது தாயிடம் சேர்த்த இயேசுவின் கனிவையும் காண்கிறோம்.

இயேசு தொட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று வழக்கம் போல் தாய்மார்கள் தம் குழந்தைகளுடன் வந்திருந்தனர். குரு ஓய்வெடுக்க வேண்டுமென்று எண்ணிய சீடர்கள், அவர்களை அனுப்பிவிட்டனர். அதனை அறிந்த இயேசு, அவர்களை வருந்தி அழைத்து, குழந்தைகளுடன் உற்சாகமாக உரையாடினார். சூழ்ந்திருந்த மக்களிடம், குழந்தைகளிடமே இறையரசு நிறைந்துள்ளது! என்று கூறி மகிழ்ந்தார். நீதி, சமாதானம், சமத்துவம் கொண்ட இறையரசை சின்னஞ் சிறார்களைப் போன்று எளிய மனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். எளிய மனதுடையோர் இறைவனைக் காண்பர் என்பதும் இயேசுவின் அருள் மொழிகளுள் ஒன்று.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பாடுகின்ற நாம், குழந்தைகளின் நலம் நாடுகின்றோமா? ஆதரவற்ற, அனாதையான, வறுமையுற்ற, விரட்டப்பட்ட குழந்தைகளை நாடிச் சென்று, நட்புடன் ஆதரவளிக்கவேண்டும் என்று சங்க ஏடு வழியாக திருச்சபை அறிவுறுத்துவதை செயல்படுத்துவோம்! குழந்தைகளோடு இறை மக்களாவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com