
ஆண்டுதோறும் அவர்கள் செய்துவரும் மகேந்திர யாகத்தைச் செய்ய நந்தகோபர் முதலான ஆயர்குலத்தவர்கள் ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தனர். கண்ணபிரானுக்கு இந்த யாகம் யாரைக் குறித்து எதற்காகச் செய்யப்படுகிறது என்பது தெரியும்! இருந்தாலும் அதுபற்றி ஏதும் தெரியாதவர் போல நந்தகோபரிடம் விசாரிக்கிறார். நந்தகோபரும், ""உலகத்தில் மனிதர் முதல் சகல ஜீவராசிகளும் தண்ணீர் இல்லாமல் ஜீவிக்க முடியாது. அதற்கு மழை பெய்தாக வேண்டும். மேகங்கள்தாம் மழையை பொழிய வேண்டும். தேவர்களுக்கு அதிபதியான இந்திரனது ஆணையால்தான் மேகங்கள் மழையை பொழிகின்றன. அதனால் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நல்ல பால், தயிர், அன்னம் போன்ற பொருள்களைக் கொண்டு இந்த யாகத்தைச் செய்து இந்திரனை திருப்திப்படுத்திகிறோம். இதைச் செய்யாவிட்டால் இந்திரன் மூலம் கிடைக்கக்கூடிய மழை முதலான நற்பலன்கள் நமக்குக் கிடைக்காது!'' என்று விளக்குகிறார்.
இந்திரனுக்கு தான்தான், மூன்று உலகங்களுக்கும் முதல்வன், தன்னால்தான் மழை பொழிந்து உலகம் உய்கிறது என்ற கர்வம் உண்டு. அந்த அகந்தையைக் களைய வேண்டும் என்று எண்ணிய கண்ணபிரான் தன் பிதாவிடம் இப்படி வாதாடுகிறான்.
"தந்தையே! நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. உயிர்கள் எல்லாமே தாங்கள் முற்பிறப்புகளில் செய்த வினைகளுக்கு ஏற்ப, புண்ணிய, பாவங்களுக்குத் தக்கபடி, சுக துக்கங்களை அனுபவிக்கின்றன என்பதே உண்மை. இந்திரனால் ஒரு பலனையும் வழங்க இயலாது. கர்மத்தை ஒழிக்கும் ஆற்றலுமில்லை. சுக துக்கத்திற்கு அவரவர் கர்மமே முக்கியக்காரணம். நம்முடைய புண்ணியமே மேகமாக இருந்து மழை பெய்கிறது. நான் ஒன்று சொல்கிறேன், நாமோ காடு மலைகளில் வசித்துக் கொண்டு பிரவேசித்து வருகிறோம். அதனால் நமக்கு அடைக்கலம் தரும் மலையையும் அதன் அதிதேவதையையும் பால் தந்து நம்மை போஷிக்கும் பசுக்களையும் ஆராதிப்போமே! பசுக்களுக்குப் புல் தருவோம். இந்த மலையை வலம் வந்து வணங்கி, விருந்து சமைத்து அதை மலை தேவதைக்கு நிவேதனம் செய்து உண்டு மகிழுவோமே!'' என்கிறார்.
கண்ணபிரானின் வாதத்தைக் கேட்ட கோபாலர்கள் அனைவரும் அதனை முழுமனதாக வரவேற்கிறார்கள். கோவர்த்தன மலைக்கருகில் இருந்து அதை வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். அப்போது பகவானாகிய கண்ணபிரான், தமது யோக மகிமையால் தாமே ஒரு பெரிய மலையாக நின்றார்! அதே நேரம் அந்த ஆயர்களிலும் தாம் ஒருவராக நின்று கொண்டு, ""ஆஹா... நம் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த மலையின் அதிதேவதையே இதோ நம்முன் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து ஆராதிப்போம் வாருங்கள்'' என்று அழைக்கிறார்! ஆயர்களை அனைவரும் அந்த திடீர் மலையை கண்டு அதிசயித்து மானசீகமாக தூபதீபம் காட்டி நைவேத்தியங்களைப் படைத்து வணங்குகிறார்கள். மலைவடிவில் இருந்த பகவானும் அந்த நைவேத்தியங்களை ஏற்று, அருள்புரிந்து மறைகிறார்! ஆயர்கள் இது கண்டு ஆச்சரியமுற்று கோவர்த்தன மலைக்கு தூபதீபம் காட்டி ஆராதித்து வணங்கி மலையை வலம் வந்து நமஸ்கரிக்கிறார்கள்.
ஆயர்களின் இந்தச் செயலைக் கண்டு இந்திரனுக்குக் கடுங்கோபம். வழக்கமாகத் தனக்குச் செய்ய வேண்டிய ஆராதனைகளை இந்தச் சிறுபையன் கிருஷ்ணன் பேச்சைக் கேட்டுச் செய்யாமல் விட்ட ஆயர்களுக்குத் தகுந்த புத்தி புகட்டத் துடிக்கிறான்.
""மூவுலகங்களுக்கும் முதல்வனான என்னை அவமதித்த இந்த ஆயர்களையும் அந்தக் கிருஷ்ணனையும் அவர்களிடமிருக்கும் அத்தனை பசுக்களையும் வெள்ளத்தால் அழித்து கடலில் சென்று மடியுமாறு இடைவிடாது பயங்கரமாக மழை பொழியுங்கள்'' என்று மேகங்களுக்குக் கட்டளை இட்டான்!
அவ்வளவுதான், அடுத்த கணமே கார்மேகங்கள் குவிந்து, எங்கும் இருள்சூழ, இடியுடன் மின்னலும் பளிச்சிட பிரளயம் வந்து விட்டதுபோல் மேகங்கள் மழையை கொட்டு கொட்டு என்று ஆயர்பாடியின்மீது கொட்டித்தீர்த்தன. எங்கும் ஜலக்காடு. அந்த வெள்ளத்தில் வீடுகள், பசுக்கள், ஆயர்கள் எல்லோரும் மூழ்கித் தவிக்க, ஆயர்கள் கண்ணபிரானிடம் அலறி அடித்துக் கொண்டு ஓடி, ""கண்ணா, மணிவண்ணா!'' என்று முறையிட்டனர். கண்ணபிரானோ, ""ஆயர்களே! இந்த மழைக்கு நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம். நீங்கள் எல்லோரும் குழந்தைகள், பெண்கள், பசுக்கள் ஆகியோருடன் வாருங்கள். இந்த மலைத் தேவதை நம்மைக் காபபாற்றும்!"' என்று கூறி கோவர்த்தன மலையை ஒரு கையால் தூக்கி குடை பிடிப்பதுபோல் தூக்கியபடி நின்றார்! ""நீங்கள் யாவரும் இந்த மலைக்கு அடியில் சிறிதுகூட வருத்தமில்லாமல் வந்து இருங்கள். இந்த மலை இடிந்து விழுந்து விடுமோ என்று அஞ்சவேண்டாம். எவ்வளவு பலமான இடி இதன்மீது விழுந்தாலும் மலை விழாது. பகவான் காத்தருள்வார்!'' என்று உறுதிகூற, அனைத்து ஆயர்களும் தங்கள் குழந்தைகள், பெண்கள், பசுக்கள் சகிதமாய் மலையின் கீழ் ஆனந்தமாய் வாழ்ந்தார்கள்.
சரியாய் ஏழு நாட்கள் இரவும் பகலுமாய் மேகங்கள் மழையைப் பொழிந்து தள்ளின. எனினும் ஆயர்கள் எந்தக் கவலையுமின்றி ஆனந்தமாய் மலையடியில் இருப்பதைப் பார்த்த இந்திரனுக்கு கண்ண பரமாத்மாவின் மகிமை புரிந்தது. தன் அகந்தையை மூட்டை கட்டி வைத்துவிட்டுப் பெருமானைச் சரணடைந்தான். மழை நின்றதும் ஆயர்கள் தத்தம் இல்லங்களுக்குச் செல்ல, மீண்டும் கோவர்த்தன மலையை அதன் இருப்பிடத்திலேயே வைத்து அருள்புரிந்தார் கண்ண பரமாத்மா!
இந்த நிகழ்ச்சியைத்தான் பழனி திருப்புகழ் 21 ஆம் பாட்டினால் ""சிகர குடையினில் நிரைவர இசைதெரி சதுரன்'' என்ற அடிகள் மூலம் தெரியப்படுத்துகிறார் அருணகிரிநாதர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.