புலிக்கால் முனிவருக்கும் ஆதிசேஷனுக்கும் நடனக்காட்சி காட்டியருளிய வரலாறு!

தந்தை மத்தியந்தன முனிவர் வழிகாட்டுதலின்படி சிவபெருமானை வழிபடச் சிறந்த இடம் தில்லை வனமே என்றுணர்ந்த....
புலிக்கால் முனிவருக்கும் ஆதிசேஷனுக்கும் நடனக்காட்சி காட்டியருளிய வரலாறு!
Published on
Updated on
2 min read

தந்தை மத்தியந்தன முனிவர் வழிகாட்டுதலின்படி சிவபெருமானை வழிபடச் சிறந்த இடம் தில்லை வனமே என்றுணர்ந்த முனிவரின் புதல்வர் தில்லைவனத்தில் ஓர் ஆலமரத்தடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அதன் அருகே ஒரு பர்ணசாலை அமைத்து அதில் வாழ்ந்தபடி சிவனை வழிபட்டு வந்தார்.

ஒருநாள் மலர்கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தபோது அந்த மலர்களில் பல பழசாகவும், வாடியும் பழுதுபட்டு இருப்பதைப் பார்த்தார். ""ஆ.. இதென்ன சோதனை.. சூரியன் உதித்தபின் மலர்களைப் பறிக்கச் சென்றால் வண்டுகள் வந்து அவற்றை எச்சில்படுத்தி விடுகின்றன. சரி... பொழுது விடிவதற்கு முன் போய் மலர் கொய்து வந்துவிடலாம் என்றால் இந்த மரங்கள் அடர்ந்த வனத்தில் வழி தெரிவதில்லை. மரங்களில் ஏறினாலும் இரவு பெய்த பனியால் கால்கள் வழுக்கும். இதற்கு என்ன செய்வது புரியவில்லையே'' என்று மனம் கலங்கி சிவபெருமானைத் துதித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.

சிவபெருமானும் அவர் முன் தோன்றவே, ""பெருமானே! தங்களைப் பழுதற்ற சிறப்பான மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதனால் பொழுது புலருவதற்கு முன்னரே எழுந்து சென்று மலர் பறிக்க மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருக்க ஏதுவாக என் கை, கால்களில் வலிய புலி நகங்கள் வேண்டும். அதனுடன் நல்ல மலர்களைக் காணும் பொருட்டு அந்த நகங்களில் ஒளியுடன் கூடிய கண்களும் வேண்டும்'' என்று வரம் கேட்டார். சிவபெருமானும் அவ்வாறே அருளி மறைந்தார்.

அன்று முதல் அந்த ரிஷிகுமாரருக்கு "வியாக்ரபாதர்' என்று வடமொழியிலும், "புலிக்கால் முனிவர்' என்று தமிழிலும் பெயர் உண்டாயின! அதன்பின் தம் விருப்பத்திற்கேற்ப சிறப்பான மலர்களைப் பறித்துச் சிவனுக்கு அர்ச்சனை செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்தார். புலிக்கால் முனிவர் வழிபட்டதால் தில்லை மாநகருக்குப் புலியூர் என்ற பெயரும் வந்தது!

புலியூரில் சிவ வழிபாட்டிலும் தியானத்திலும் லயித்திருந்த வியாக்ரபாதருக்கு ஒருநாள் ஞானதிருஷ்டியில் சிவனின் ஆனந்தத் தாண்டக் கோலம் தெரிந்தது. அந்த ஆனந்தத் தாண்டவக் கோலத்தை என்றாவது ஒருநாள் தான் நேரிலும் காண இறைவன் அருள்புரிவான் என்று எண்ணி புலியூரை விட்டகலாது அவ்விடத்திலேயே வழிபாடுகள் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வைகுண்டத்தில் நாராயணர் ஒரு பழைய நினைவை அசைபோட்டு மகிழ்ந்தபடி புன்னகையோடு அமர்ந்திருந்தார்.

அந்தப் புன்னகைக்குக் காரணம் கேட்டார் ஆதிசேஷன். முன்பு தாருகாவனத்து முனிவர்களுக்கும் அவர்களது பத்தினிமார்களுக்கும் ஏற்பட்ட கர்வத்தை அடக்க தான் ஓர் அழகான பெண்ணாகவும், சிவபெருமான் பிட்சாடனராகவும் வேடம் தரித்து அவர்கள் செருக்கை ஒழித்ததை நினைவுகூர்ந்தார் நாராயணர்.

அப்போது சிவன் மீது முனிவர்கள் ஏவிய முயலகனை வதம் செய்ய காலடியில் போட்டு மிதித்து கோரத் தாண்டவம் ஆட, முனிவர்களும் தேவர்களும் கைகூப்பிக் கெஞ்ச சிவன் அந்தக் கோரத் தாண்டவத்தைச் சடக்கென்று மாற்றி ஆனந்தத் தாண்டவமாக ஆடிய அற்புதத்தை நாராயணர் மிகவும் சிலாகித்து விவரிக்க ஆதிசேஷன் அந்த அற்புதமான நடனத்தைத் தாம் காணாமல் போய்விட்டோமே என்று மிகவும் வருந்தினார்.

உடனே நாராயணரும் அவர் ஆசையின் வேகத்தைக் கண்டு, ""ஆதிசேஷா... உன் ஏக்கம் எனக்கும் புரிகிறது. நீ கயிலை மலை சென்று அங்கு தவமியற்றிச் சிவனிடம் உன் கோரிக்கையைக் கூறு!'' என்று கூறினார்.

ஆதிசேஷனும் கயிலை மலையை அடைந்து சிவனை நோக்கிக் கடுந்தவமியற்றினார்.

சிறிது காலம் செல்ல ஆதிசேஷனின் தவத்தை மெச்சி சிவபெருமான் நேரில் தோன்றி, ""ஆதிசேஷனே! உன் உள்ளக் கிடக்கையை யாம் அறிவோம். முன்பு தாருகாவனத்தில் ஆடிய போது அந்த இடம் பூமியின் மையப்பகுதியாக இல்லாததால் சற்று அசைந்தது. ஆதலால் அந்த நடனத்தை ஆடச் சிறந்த இடம் தில்லையே. ஏனெனில் மனித உடலும் உலகமும் அமைப்பில் ஒத்த தன்மை வாய்ந்தவை. உடம்பினுள் ஓடும் இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி உடம்பின் நடுவில் ஓடும். அதுபோலவே இந்த பூமிக்குச் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே ஓடும். உடம்பில் அந்த ஒரு நாடியின் நடுவே விளங்கும் இதயத் தாமரையினுள் ஞான ஆகாசத்திலே நாம் அவரது அருள் நடனம் புரிவதுபோலவே புறத்தே தில்லையம்பலத்தில் சிவலிங்கத்திற்குத் தெற்கேயுள்ள அருள் அம்பலத்தின்கண் என்றும் இடையறாது திருநடனம் புரிவோம். அதனைக் காணும் ஞானக்கண் உடையவர் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடந்திடுவார்கள். ஆதலால் நீ தில்லைக்குச் சென்று இரு. அங்கு உன்னைப் போலவே என் ஆனந்தத் தாண்டவத்தைக் காணும் ஆவலில் வியாக்ரபாதன் என்னும் முனிவன் தவமியற்றி வருகிறான். உங்கள் இருவருக்கும் தைப்பூசத்தன்று சிற்சபையில் திருநடனத்தைக் காட்டியருள்வோம்!' என்று கூறி மறைந்தார்.

ஆதிசேஷனே பதஞ்சலியாராக தில்லை சென்று வியாக்ரபாதரைக் கண்டு அளவளாவி இருவரும் தவமியற்றினர். இறைவன் குறித்த நாளில் அவர்கள் இருவருக்கும் திருநடனம் புரிந்து அருளினார்.

(திருப்பரங்குன்றத்து திருப்புகழ்ப் பாடலான "அருக்கு மங்கையர் மலரடி வருடி' எனத் துவங்கும் பாடலில் "அம்பல மிகைதனில் அசைவுற நடித்த' என்னும் அடிகளில் அருணகிரிநாதர் சிவன் சிதம்பர நடன வரலாற்றைக் குறிப்பிடுகிறார்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com