பிரஹலாதர் வரலாறு!

பெருந்தவபலம் பொருந்திய காசிப முனிவருக்கும் அவரது பத்தினியான திதிக்கும் பிறந்தவர்கள் இரண்யன், இரண்யாட்சன் ஆகியோர். இவர்களில் இரண்யனுக்குப் பொன்மயமான உடல்.
பிரஹலாதர் வரலாறு!
Published on
Updated on
3 min read

பெருந்தவபலம் பொருந்திய காசிப முனிவருக்கும் அவரது பத்தினியான திதிக்கும் பிறந்தவர்கள் இரண்யன், இரண்யாட்சன் ஆகியோர். இவர்களில் இரண்யனுக்குப் பொன்மயமான உடல்.

இரண்யாட்சனுக்கோ பொன்மயமான கண். இருவரும் மகா வலிமை பொருந்தியவர்களாக ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனர். இவர்களில் தம்பியாகிய இரண்யாட்சன் பூமியைக் கட்டிப் பந்தாகக் கடலினுள் ஒளித்து வைத்தபோது திருமால் வராக அவதாரமெடுத்து அவனை அழித்தார். அதிலிருந்து தன் தம்பியைக் கொன்ற நாராயணனை பழி தீர்க்காமல் விடமாட்டேன் என்று கறுவிக் கொண்டிருந்தான்.

"தம்பிக்குப் போதிய தவ வலிமை இல்லாததால்தான் திருமாலால் அவனைக் கொல்ல முடிந்தது, நாளையே நம்மையும் இந்த நாராயணன் கொன்றாலும் கொன்று விடுவான்' என்று எண்ணி தன் தவ வலிமையை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றெண்ணிய இரண்யன் காட்டுக்குச் சென்று அக்னிக்கு நடுவே நின்று, ஊசியின் மேல் ஒருகாலை ஊன்றிப் புலன்களை அடக்கி நெடுங்காலம் கடுந்தவம் புரிந்தான்.

அவன் தவத்தின் கடுமையை கண்டு அஞ்சிய இந்திரன் எங்கே தன் பதவிக்கு குறி வைத்து இந்தத் தவத்தை மேற்கொண்டுள்ளான் போலும் என்றெண்ணி அந்த தவத்தைக் குலைக்கத் தன் சேனையுடன் வந்தான். இதற்கிடையே இரண்யன் மனைவி லீலாவதி, நான்காவது முறையாகக் கர்ப்பமுற்றிருந்தாள். ஏற்கெனவே ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர்களைப்

பெற்றிருந்தவள். நான்காவதாக பிரஹலாதனைக் கருவுற்றிருந்தாள். இந்திரன் லீலாவதியைச் சிறைபிடித்து சென்றான். இடையில் நாரத முனிவர் அதைத் தடுத்து லீலாவதியைச் சிறைமீட்டு அவளைத் தன் தவச்சாலைக்குக் கொண்டு போய் காப்பாற்றினார்.

லீலாவதி மகா நல்லொழுக்கம் வாய்ந்த உத்தமி. அவளுக்கும் அவள் கர்ப்பத்தில் வளர்ந்து வரும் சிசுவுக்கும் நாள்தோறும் நாராயண மூர்த்தியின் அருமை பெருமைகளைப் பக்தியுடன் போதித்து வந்தார்.

கருவிலேயே திருமால் பெருமையை அறிந்து கொண்டு விட்ட பிரஹலாதன் கருவிலேயே அரியின் பரம பக்தனாகி விட்டான்.

இரண்யனின் கடுந்தவத்திற்கு செவிசாய்த்து பிரம்மா நேரில் தோன்றியபோது, அவரிடம் கேட்ட வரம் என்ன தெரியுமா? மண்ணிலும் விண்ணிலும் இரவிலும் பகலிலும் இருளிலும் ஒளியிலும்

அஸ்திரங்களாலும் சஸ்திரங்களாலும் வீட்டிலும் வெளியிலும் மனிதராலும் தேவராலும் நாகங்களினாலும் மற்ற விலங்குகளாலும் மரணமடையாதத் தன்மையையும் மூன்று உலகங்களையும் வெல்லும்

வல்லமையையும் தருமாறு பிரார்த்தித்தான்! நான்முகனும் அவ்வாறு அருள, அரண்மனை வந்து சேர்ந்தான். நாரதரும் லீலாவதியைக் கொணர்ந்து அவனிடம் சேர்ப்பித்து நடந்த விஷயங்களைக் கூறினார்.

சிறிது நாட்களில் லீலாவதியும் மகா அழகான ஆண் மகவு ஒன்றை பெற்றெடுத்தாள். பிரஹலாத ஜனனம் இப்படி நடந்தேறியது.

பிரம்மனிடம் பெற்ற வரங்களால் உற்சாகமடைந்த இரண்யன் தன் தம்பியைக் கொன்ற திருமாலை எங்கு கண்டாலும் பிடித்து வருமாறு எண்ணற்ற ராட்சச வீரர்களை மூவுலகிற்கும் அனுப்பி வைத்தான்.

திருமால் சாதுக்கள் உள்ளத்திலும் ஞானிகளின் சிந்தையிலும் இருப்பவன். ""சாதுக்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று எங்கே அவர்களைப் பார்த்தாலும் அவர்களை அடியோ அடி என்று அடித்து நொறுக்குங்கள். எல்லோரையும் ""இரண்யாய நமக'' என்று என் பெயரை ஜபிக்குமாறு செய்யுங்கள்'' என்று தன் வீரர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் நாலா பக்கமும் பறந்து சென்று தங்களால் இயன்றவரை அடியார்களைத் துன்புறுத்தினர்.

தேவர்களும் முனிவர்களும் பெரிதும் அல்லல்பட்டு திருமாலைத் தரிசித்து, இரண்யன் செய்யும் அக்கிரமங்களைக் கூறித் தங்கள் துயரைத் துடைத்தருள வேண்டினர். திருமாலும் ""நேரம் வரும், அப்போது அவதாரமெடுத்து இரண்யனை வதைப்போம்'' என்று அபயம் அளிக்கிறார்.

பிரஹலாதனுக்கு ஐந்து வயதாகியது. சண்டாமார்க்கர் என்பவரிடம் பிரஹலாதனுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பைத் தருகிறான் இரண்யன். அவரும் சிறுவனுக்கு அரிச்சுவடியிலிருந்து பாடம் கற்பித்து ""இரண்யாய நமக'' என்று ஓயாது ஓதுமாறு கூறுகிறார். பிரஹலாதனோ அதைக் கேட்காது ""ஓம் நமோ நாராயணாய'' என்றே ஓதுகிறான். பிரஹலாதனின் இந்தப் போக்கை இரண்யனிடம் கூறிவிட்டு அந்த ஆசிரியர் அவன் முன் நில்லாமல் ஓடிவிடுகிறார்.

இரண்யன் மகனைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறான். ""மகனே! உன் சிற்றப்பனைக் கொன்ற கொடுமை பாதகனது மந்திரத்தைக் கூறுகிறாயாமே... அது தவறு. நீ சிறுபிள்ளை உனக்கு யாரோ தவறாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இனி அவ்வாறு அவன் மந்திரத்தைக் கூறாமல் என் பெயரை ஓது!'' என்று நயமாகச் சொன்னான். பிரஹலாதன் கேட்பதாயில்லை.

பிடிவாதமாக ""ஓம் நமோ நாராயணாய'' என்றே கூறுகிறான். இரண்யனுக்குக் கடுங்கோபம் வந்து வீரர்களை ஏவி பிரஹலாதனை நிலத்தில் புதைத்தான். ஆயுதங்களால் கொல்ல ஏவினான். அஷ்ட நாகங்களை ஏவி அவனைக் கொல்லப் பணித்தான். நெருப்பில் தூக்கிப் போட்டான். கல்லிலே கட்டிக் கடலில் இட்டான். விஷத்தை ஊட்டினான். மூட்டைபோலக்கட்டி மலையுச்சியிலிருந்து

கீழே உருட்டி விட்டான்! இதில் எந்த முயற்சியிலும் இரண்யனுக்கு வெற்றி கிட்டவில்லை. ""ஓம் நமோ நாராயணாய'' என்ற மந்திரத்தை ஓதியபடி பிரஹலாதன் அசையாது கம்பீரமாக நின்றான்.

தன் ஜென்மப் பகையாகக் கருதும் அந்தத் திருமாலை அல்லவா பூஜிக்கிறான்? உடனே, அவனை அருகில் அன்பாகப் பேசுவது போல, ""மகனே! நீ நாராயணா... நாராயணா என்கிறாயே... அந்த நாராயணன் எங்கிருக்கிறான்? சொல்!'' என்கிறான்.

பிரஹலாதன் ""தந்தையே! நாராயணர் எங்கு இருக்கிறார் என்று கேட்கிறீர்களே... அந்தச் சொல்லிலும் இருக்கிறார். கல்லிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். இதோ இந்தத் தூணிலும் இருக்கிறார்.

அவர் இல்லாத இடம் எங்குமே இல்லை!'' என்கிறான்.

""ஆஹா... அப்படியா? இந்தத் தூணிலே இருக்கிறானா உன் நாராயணன்?'' என்று ஆக்ரோஷமாக கேட்டபடி இரண்யன் அந்தத் தூணை ஓங்கி அறைகிறான். பிளந்தது தூண். அந்தத் தூணுக்குள் நரசிங்கமாகத் திருமால் தோன்றி கோபாவேசத்தோடு சிரிக்கிறார். அந்தக் காட்சியைக் கண்டதும் பிரஹலாதன் தன் சிரமேல் கரம் கூப்பி நாராயண மந்திரத்தை ஜெபித்து வணங்குகிறான்.

நரசிங்கத்தின் மேனி கிடுகிடுவென்று அண்டம் எட்டுமாறு வளருகிறது. ஆயிரமாயிரம் தலைகளும் அதற்கு இரட்டிப்பான கரங்களும் கொண்டு லட்சக்கணக்கான ராட்சதர்களை கால்களால் அடித்தும் கொன்றும் தின்றும் மென்றும் அழிக்கிறார். ஆனால் இரண்யனோ சிறிதும் அஞ்சாமல் தன் பகை தீர்க்க வாள் எடுத்து நரசிங்கரை எதிர்க்கிறான்.

இரண்யனை நரசிங்க மூர்த்தி, தன் கரங்களால் இறுகப்பற்றி, தன் மடியில் கிடத்தி எந்த ஆயுதத்தினாலுமில்லாமல் தமது திருவிரல் நகத்தால் மார்பினைக்கீறி அவனுடைய குடலை மாலையாகத் தரித்து அண்டங்கள் நடுநடுங்க கர்ஜிக்கிறார். அவருடைய உக்கிரத்தைக் கண்டு பிரம்மாதி தேவர்கள் நடுங்கித் துதிக்கிறார்கள். அவர்கள் லட்சுமி தாயாரை வேண்ட தாயார் நரசிங்கரை அணுக நரசிங்கப்பெருமான் கருணை பூக்கிறார். பின்பு பிரஹலாதன் வேண்டுகோளுக்கு இணங்கி இரண்யனுக்கு உயிர் பிச்சை அளித்து பிரஹலாதனுக்கு வரமளித்து மறைகிறார்.

(கும்பகோணம் (சோமீச்சுரம்) திருப்புகழ், ""கரிய குழல் சரிய முகம்"" என்று தொடங்கும் பாடலில் ""உரிய தவநெறியில் நம நாராயணாயவென ஒரு மதலை மொழியளவி'' என்ற வரிகளில் பிரஹலாதரது சரிதத்தைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com