
பிரும்ம கபாலம்: ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் பிரும்மன் அகந்தை கொண்டான். எனவே அவனது ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவன். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவனே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரும்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார் ஈசன். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரும்ம கபாலம் விழுங்கிவிடும்.
சரஸ்வதி சாபம்: பிரும்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த ஈஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி எங்கும் அலைந்து இறுதியில் மேல்மலையனூரில் வந்து அமர்ந்தாள் பரமேஸ்வரி. மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவளிடம் பிச்சை கேட்டு வந்த சிவனின் பாத்திரத்தில் முதல் உருண்டையைப் போட்டாள். அதனை உண்டது பிரும்ம கபாலம். இரண்டாவது உருண்டையையும் போட்டாள். அதனையும் உண்டது. மூன்றாவது உருண்டையை பிரும்ம கபாலத்தில் போடாமல் கீழே போட்டாள். அதனை உண்ண சிவனின் கையில் இருந்து இறங்கியது. ஈஸ்வரி விஸ்வரூபமெடுத்து பிரும்ம கபாலத்தை பூமியில் அழுத்தினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.
மாசி அமாவாசை: ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் சூரை இடும் நாளே "மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு.
சூளையில் குடிகொண்டாள்: சென்னையில் புரசைவாக்கத்தை ஒட்டிய பகுதி சூளை. இங்கே அங்காளம்மன் குடிகொண்டிருக்கிறாள். சக்தி தீர்த்தம் என்னும் திருக்குளத்தின் கரையில் அமர்ந்திருப்பவளை வழிபட திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீய சக்திகள், பில்லி - சூனியம் ஆகியவை விலகும்.
அங்காளி: மூல ஸ்தானத்தில் அருளும் அங்காளி நான்கு கரங்களுடன் இடது காலை மடித்து, வலதுகாலை தொங்க விட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். இடது தொடையில் இவ்வுலக ஆன்மாக்களை தாயுள்ளத்தோடு காக்கும் அம்மாவாக வைத்துக்கொண்டு சூலமும் கபாலமும் தாங்கி, மேலிரு கரத்தில், அபய - வரதத்துடன் அருள்பாலிக்கிறாள்.
முன்புறம் சிலா ரூபம், கொடிமரம், பலி பீடம்,, சிம்ம வாகனம் உள்ளன. சந்நிதியின் முன்புறம் விநாயகரும், இடப்புறம் வீரபத்திரர் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்தின் இடப்புறம் சிவனின் படைத்தலைவனாகிய பாவாடை ராயனுக்கு என தனி சந்நிதி உள்ளது. இதைத் தவிர காசி விசாலாட்சி - காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி இருக்கிறது. நாகம்மனுக்கும் சந்நிதி உள்ளது.
மயானக் கொள்ளை: இத்திருக்கோயிலில் நடைபெறும் மயானக்கொள்ளையைத் தொடர்ந்து அங்காளபரமேஸ்வரிக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றம் நடந்து பத்து நாட்கள் வீதி புறப்பாடு உற்ஸவம் நடைபெறுகிறது.
மாசி அமாவாசையன்று மூலவர் அங்காள பரமேஸ்வரிக்கும் உற்ஸவருக்கும் இரவு மகாபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்தைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட பூங்கப்பறையுடன் படாளம் மயானத்திற்குச் சென்று அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆண் உருவை சித்தாங்கம் என்னும் பிரார்த்தனை செலுத்துவோர், மருளாடிகள் ஆகியோர் பூஜை செய்வர். இதற்கு சுடுகாட்டு சுவாமி என்று பெயர். அதனை பூஜை செய்து கலைத்துவிட்டு வருவார்கள்.
மீண்டும் பூசாரி தலைமையில் ருத்ர கப்பறையுடன் சென்று அங்கு செய்து வைக்கப்பட்டிருக்கும் அலி உருவையும், நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 5 மணிக்கும் பஞ்ச முகக் கப்பறையுடன் பூசாரி தலைமையில் சென்று, செய்து வைக்கப்பட்டிருக்கம் பெண் உருவையும் கலைத்துவிட்டு வருவர். மீண்டும் அதே பொருட்களைக் கொண்டு ஓர் உருவை மயானக் கொள்ளையிடுவதற்காக செய்வர்.
காலை 8 மணிக்கு அங்காள பரமேஸ்வரி பூரண அலங்காரத்துடன் மயானக் கொள்ளை விடுவதற்காக செல்வாள். வழியெல்லாம் பக்தர்கள் காய், பழம் தானியங்கள், காசுகள் போன்றவற்றையெல்லாம் செல்லும் பக்தர்களை நோக்கியும் சித்தாங்க பிரார்த்தனைதாரர்கள், மருளாடிகள் ஆகியோரை நோக்கியும் வீசுவர். அனைவரும் ஒன்றாகச் சென்று பொருட்களை சுடுகாட்டில் நான்காவதாகப் போடப்பட்டிருக்கும் சுடுகாட்டு சுவாமியின் மீது வீசி அதனை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு வருவர். அங்கிருந்து கிளம்பி சூறை விட்ட வெற்றிக் களிப்புடன் அங்காளபரமேஸ்வரி இரவு 8 மணிக்கு திருக்கோயிலை அடைவாள்.
சொல்வது என்ன?: மூன்று வகை கப்பறையும் அங்காள பரமேஸ்வரியின் சக்திகளாகச் சென்று ஆண், பெண், அலி உருக்களை பூஜை செய்துவிட்டு வருவது அனைத்தையும் காப்பவள் அங்காள பரமேஸ்வரி என்னும் தத்துவத்தை விளக்குகிறது. சூரை விடச் செல்லும்போது முன்னால் செல்லும் சிவகணங்களிடம் சிவனுக்காக பிச்சையிடும் புனிதச் செயல் நடக்கிறது. சுடுகாட்டில் சென்று சூறையிடும்போது மேலே கவளம் கவளமாக எறிவது பிரும்மகபாலத்தை பிச்சைச்காக கீழிறக்கிய வரலாற்றைக் குறிப்பிட்டு பிரும்மஹத்தி தோஷம் போகும் என்பதைச் சொல்கிறது.
சூளை அங்காள பரமேஸ்வரியின் "மயானக் கொள்ளை' என்பது நம்பியவர்களைக் காத்து, இரட்சித்து, அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக் காட்டும் தத்துவ விழா என்றால் மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.