திருமணத் தடை நீங்கும்

பிருகு முனிவரும் மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்ய ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தது ஸ்வேத வனம்.
Published on
Updated on
2 min read

பிருகு முனிவரும் மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்ய ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தது ஸ்வேத வனம். "ஸ்வேதம்'' என்றால் வெண்மை. வெண்மையான காடு எவ்வாறு உருவாகும்? பச்சைக் கொடிகளில் வெண்மையான மலர்கள் பூத்துக்குலுங்கினால் அந்த இடமே வெண்மையாகும். அவ்வாறு முல்லைக் கொடிகள் பூத்துக் குலுங்கிய இடம் "ஸ்வேத வனம் எனப்பட்டது. அதுவே சென்னை, திருமுல்லைவாயில் பகுதி. இந்த இடத்தை தவம் செய்ய ஏற்ற இடமாக பிருகு, மார்க்கண்டேய முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர். "ஐரமத புஷ்கரணி' கரையில் அமர்ந்து இருவரும் அவரவர் மனதிலே ஒரு திட சித்தத்தை உருவாக்கிக்கொண்டு விரும்பியவற்றைப் பெற தவம் மேற்கொண்டனர்.

பிருகுவின் தவம்: பிருகு மகரிஷி திருமாலின் உருவத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். ""தோள் கண்டார் தோளே கண்டார்'' என்பதற்கு ஏற்ப, அந்த சுந்தர அழகில் ஈடுபாடு கொண்டு தேவியருடன் தான் எப்போதும் வணங்கும் வகையில் திருமால் காட்சி தர வேண்டும் என எண்ணி அதன்படி மனதை ஒருநிலைப்படுத்தி தவத்தில் ஈடுபட்டார்.

மார்க்கண்டேயர் தவம்: மார்க்கண்டேய மகரிஷி, தன்னோடு மட்டும் அல்லாமல் உலகத்தோரையும் உய்விக்கும் தன்மைகொண்ட வைகுந்த நாதனின் தோற்றத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர்.அந்தத் தோற்றத்தில் தனக்கு காட்சி தர வேண்டும் என எண்ணி தவம் புரிந்தார்.

இருவேறு மகரிஷிகள் இருவேறு தோற்றங்களில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் காட்சி தர வேண்டும் என தவம் புரியலானார்கள்.

வந்தார், வரம் தந்தார்: கேட்டோருக்கு கேட்ட வரத்தினைக் கேட்டவாறே அருளும் மனம் படைத்த திருமால் இரு ரிஷிகளுக்கும் அதே கோலத்தில் அதே இடத்தில் காட்சி தந்தார். கிழக்கே அமர்ந்து தவம் புரிந்த பிருகு மகரிஷிக்கு ஸ்ரீதேவி - பூதேவியுடன் சுந்தர ரூபமாக சுந்தரராஜனாக நின்ற கோலத்திலும், சற்று தள்ளி, மேற்கே அமர்ந்து, தவம் புரிந்த மார்க்கண்டேயருக்கு அமர்ந்த திருக்கோலத்தில் பிரயோகச் சக்கரம் தாங்கி வைகுந்த நாதனாகவும் காட்சி தந்தார் திருமால்.

இருவர் தவத்தினையும் மெச்சிய திருமால் உங்களுக்கு வேண்டும் வரம் கேளுங்கள் எனத் தெரிவித்தார். இருவரும் ஒருசேர, ""பிருகு வேண்டியது ராஜ கோலம். மனது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் கோலம். வேண்டியதை வேண்டியவாறு இச்சைகளை பூர்த்தி செய்யும் திருக்கோலம். அதேபோல் உலக உயிர்களுக்கு உன்னைவிட்டால் வேறு கதியில்லை அதனை உணர்த்த நிரந்தரமான வைகுண்ட வாசனாகக் காட்சி தரும் திருக்கோலம். இந்த இரு கோலத்திலும் எங்களுக்குகாட்சி தந்தாய். அதே திருக்கோலத்தில் இங்கு உன்னை வணங்குவதற்கு ஏற்ற வகையில் உலக மக்களுக்காக நிரந்தரமாகக் காட்சி தர வேண்டும். இதுவே எங்கள், ஆசை வேண்டுகோள்'' என்றனர்.

அன்புக்குக் கட்டுப்பட்ட ஆராவமுதனும் அவ்வாறே ஆகுக என அருளினான். அது முதல் இருகோலங்களில் இரு திசைகளைப் பார்த்தவாறு அருள்புரியும் நிலை உண்டானது.

விமானம் கட்டினர்: ரிஷிகள் இருவரும் தேவ உலகத் தச்சன் விஸ்வகர்மாவை கொண்டு சுந்தரராஜனாகக் காட்சி தந்த இடத்தில் ""சோமசந்த விமானம்'' ஒன்றை அமைத்தனர்.

வந்தாள் மகாலட்சுமி: மகாலட்சுமியும்""சுந்தரவல்லி'' என்ற திருநாமத்துடன் தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி தரத் தொடங்கினார்.

ரிஷிகளுக்கும் இடம்: இரு மகரிஷிகளும் அந்தந்த சந்நிதிகளில் "நித்தியசூரிகளாக வணங்கும் வகையில், வடக்கு நோக்கி கைகூப்பி அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் திருத்தலமாக அமைந்து சிறக்கத் துவங்கியது.

வந்தான் மன்னன்: மன்னன் தொண்டைமான் வந்தபோது ஓரிடத்தில் கொடி உயர்ந்து பறந்து கொண்டிருந்ததைத் தொலைவில் இருந்து கண்டான்.

அது என்ன இடம் எனக் கேட்டான். "திருமால் மகரிஷிகளுக்கு காட்சி கொடுத்த இடம். அவ்விடத்தில் மகரிஷிகள் கட்டிய கோயில் உள்ளது. அந்தத் திருக்கோயிலின் கொடி (பதாகை)தான் தெரிவது'' என்றனர்.

அந்தக் கோயில் இருந்த இடத்திற்கு வந்தான். சுந்தரராஜப் பெருமாளையும், சுந்தர வல்லித் தாயாரையும், வைகுந்த நாதனையும் தரிசனம் செய்து அவ்விடத்தில் அத்திருக்கோயில் அமைந்ததன் சிறப்பு அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கேட்டறிந்தான்.

ராஜபோகத்திற்கு அடையாளமாக விளங்கும் சுந்தராஜப் பெருமாளை திருவோணத்தில் வணங்கினால் இழந்த பொருள் மீட்கப்படும். உத்திரத்தில் சுந்தரவல்லித் தாயாரை வணங்கினால் மகப்பேறு உண்டாகும். ஏகாதசி, 25 திதிகள் வைகுந்த நாதனை வணங்கினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கி வளம் பெறுவர் என்னும் தகவல்கள் அறிந்து, அங்கிருக்கும் மக்கள் அதன் மூலம் சுபிட்சமாய் வாழ்வதைக் கேட்டறிந்தான் மன்னன்.

அதன் மூலம் கோயிலின் கொடி உயர்ந்து இருப்பதன் காரணத்தை அறிந்தான். கோவிலால் குடிகளும் குடிகளால் கோயிலும் வளர்வதை அறிந்து அந்த உயர்ந்த பதாகை பறந்த இடத்திற்கு ""கோயில் பதாகை'' எனப் பெயரிட்டு பின் திருமுல்லை வாயிலில் இருந்து அடர்ந்த முல்லைக்காட்டில் இருந்த இத்திருக்கோயிலுக்கு வரும் தெருவையும், பாதையையும் செப்பனிட்டான். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதை ""கோயில் பதாகை செல்லும் பாதை'' என திருமுல்லைவாயில் சிவன் கோயில் கல்வெட்டில் குறிப்பிடும் அளவிற்கு மக்களுக்கு நலன் விளைவித்து நற்பெயர் பெற்றான்.

திருமணத் தலம்: இரண்டு மூர்த்திகள், இரண்டு தனித்தனிக் கோயில்கள் முன்பின்னாக (திருவல்லிக்கேணி போல) அமைந்திருந்தாலும் இவை போக மூர்த்திகளாக அமைந்து திருமணத் தலங்களாக விளங்குகின்றன.

விசேஷங்கள்: ஏகாதசிகள், திருவோணங்கள், உத்திரங்கள், வெள்ளிக்கிழமைகள், சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பான நாட்களாக கருதப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் வந்து வழிபட்டு தரிசனம் செய்து செல்லும் முக்கிய நாட்களாக உள்ளன.

அமைவிடம்: சென்னையை அடுத்த ஆவடி ரயிலடி, மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் வீராபுரம் - செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது திருக்கோயில்.

திறந்திருக்கும் நேரம்: காலை 6 1/2-10, மாலை 4 1/2- 7 1/2

தகவலுக்கு: 9677222212

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com