போருக்குச் செல்லும் மன்னன், "எதிர்காலத்தில் தம் முன்னோர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்க வேண்டிய திதி முதலியவற்றை செய்ய வாரிசு பெறாதவர் எவராவது இருந்தால் போர்க்களத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறுவான்'' என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
இல்லறத்தில் இருப்பவர்கள் சூட்சும ஆன்மாக்களாக தென்புலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமது முன்னோர்களுக்கான கடமையை தவறாது செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையும், இறந்த நம் முன்னோர்கள் குறித்து வழிபாடு செய்வது வெகுநாட்களாக உள்ள வழக்கம்.
முக்கியமான அமாவாசைகள்
பருவங்கள் இரண்டு. தட்சணாயணம், உத்தராயணம் என்பவை. இதில் தட்சணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்தராயணம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென் கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது. உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசை. தட்சணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. இவை இரண்டும் முக்கியமான அமாவாசை நாள்கள். புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த அமாவாசை நாள்களில் பிதுர்கள் என அழைக்கப்படும் நமது முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜையை ஏற்று, நமது முன்னோர்கள் மகிழ்ந்து நமது துன்பங்களை நீக்கி நன்மை அளிக்கின்றனர்.
பூஜைத் தலங்கள்
தமிழகத்தில் பிதுர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜைத் தலங்கள் பல உண்டு. அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் இராமேஸ்வரம், முன்ஜென்மப் பாவங்கள் போக்கும் திருப்புல்லாணி, வேதாரண்யம் கோடியக்கரை, பூம்புகார், இராம - இலக்குவர்கள் பிண்டம் வைத்து வழிபட்ட திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, குடந்தை மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி, குமரிக்கடல் சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறில் உள்ள பஞ்சநதிக்கரை ஆகியவையும் அவற்றின் தீர்த்தங்களும் பிதுர்களின் ஆன்ம பூஜைக்கு உரிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.
தமிழகத்தைப்போல் வட இந்தியாவில் காசி, பத்ரி, கயா போன்ற இடங்களும், கேரளத்தில் உள்ள பாரதப்புழா என அழைக்கப்படும் நதி ஓரத்தில் உள்ள ஐவர் மடம் ஆகியவையும் எக்காலத்திலும் சென்று பிதுர் வழிபாடு செய்யும் வகையில் அமைந்துள்ள திருத்தலங்கள்.
தீர்த்தமாடல்
வட இந்தியாவில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட இதர தமிழகத் தென்னிந்தியத் தலங்களில் வந்து தீர்த்தமாடி, பித்ருக்களின் கடன்களை பூஜை போன்றவை மூலம் செய்து கழித்தனர்.
இதேபோன்று தமிழகம் மற்றும் தென்னிந்திய மக்கள் காசி, கயா, கங்கைக் கரையில் சென்று தீர்த்தமாடி தம் முன்னோர்களுக்கு "தென்புலத்தார் கடன்' செய்யும் பழக்கம் இருந்துள்ளது.
சாதாரண மனிதன் முதல் பெரிய மன்னர் வரை இதைப் போன்று தீர்த்தங்களுக்குச் சென்று பித்ருக்கள் கடனை கழித்தல் என்பது "தீர்த்தமாடல்' எனப்பட்டது.
மணிகர்ணிகா துறை
"தென்புலத்தார் கடன்' என்னும் முன்னோர்களுக்கான திதி அளிப்பதை காசியில் "மணிகர்ணிகா காட்'' என்னும் இடத்தில் எப்போதும் செய்யலாம். இங்கு நம் முன்னோர்களுக்கு "பிண்டம்' வைத்து படைத்து சடங்கு செய்யலாம்.
காசியில் பலவகைக் கட்டங்கள் உள்ளன. அவற்றில் "மணிகர்ணிகா காட்' எனப்படும் பகுதி முக்கியமான ஒன்று. இங்கே ஒருபுறத்தில் சடலங்களை தகனம் செய்து கொண்டிருப்பார்கள். மற்றொருபுறம் இறந்தவர்களுக்கு முக்தியைத் தரவல்ல தர்ப்பணம் போன்றவற்றை செய்து கொண்டிருப்பர்.
இரண்டாம் சரபோஜி
வெள்ளையர்களின் வியாபாரத் தந்திரத்தால் தஞ்சை மராட்டிய மன்னராக இருந்த அமர்சிங் நீக்கப்பட்டு, இரண்டாம் சரபோஜி மன்னராக்கப்பட்டார். பலவித ஏமாற்று, படை, பல ஒப்பந்தங்கள் மூலம் தஞ்சைத் தரணியை ஆங்கிலேயர் முழுவதுமாகக் கைப்பற்றினர்.
பெயரளவிற்கு சரபோஜி மன்னனை நிழல் பொம்மை மன்னராக ஆக்கி, தஞ்சையை வெள்ளைக்காரர்கள் ஆண்டனர். இதனால் வருத்தமுற்ற சரபோஜி மன்னர் ஆன்மிக செயல்களில் தனது வருமானத்தைச் செலவிடலானார்.
திருப்பணி செய்தார்
ஏராளாமானோர் காசிக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு வருவதை அறிந்து அவர்கள் அனைவரின் சார்பாகவும் சுமார் 3000 நபர்களுடன் காசிக்கு யாத்திரை சென்று மணிகர்ணிகா படித்துறையில் நீராடினார் சரபோஜி. ஏராளமான தென்னிந்தியர்கள், தமிழக மக்கள் வந்து நீராடும் படித்துறை சீர்கெட்டு வீணாகி இருப்பதைக் கண்டு வருந்தினார். அதை சீர்படுத்தி திருப்பணி செய்தார்.
சிவனுடன் சரபோஜி
மறுநாள் காலை தஞ்சை திரும்புவதாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தான் தங்கும் இடத்திற்கு திரும்பக் கிளம்பிய நேரத்தில் உடல் முழுவதும் சாம்பலும் நீண்ட சடைமுடியும் தாடியுமாக உள்வாங்கிய உயிரோடு வந்த ஒரு சாமியார் கையிலே ஒரு சிவலிங்கத்தைத் தந்து ""இதை வைத்து குடமுழுக்கு நடத்து. எவ்வளவோ மக்கள் பயன்பெறுவர்'' என்று கூறிச் சென்றார். அவர் கூறியதை அருகில் இருந்த "துவிபாஷி' என்பவர் மொழி பெயர்த்துக் கூறினார். அதைக் கேட்டு மெய்சிலிர்த்த சரபோஜி யாத்திரை முடிந்து தஞ்சை திரும்பினார்.
தான் கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை பய பக்தியுடன் அரண்மனைக் கோயிலுக்குள் வைத்தார். அதை பிரதிஷ்டை செய்து திருக்கோயில் கட்டுவதற்கான இடத்தைத் தேடினார் சரபோஜி.
இறைவன் காட்டிய இடம்
அன்று இரவு, காசியிலே, சிவலிங்கம் கொடுத்த சாமியார் வந்தார். சரபோஜியைக் கைதட்டி அழைத்து விடுவிடுவென முன்னாள் நடந்தார். கீழ்வாயில்கோட்டை வழியாகச் சென்று, வலப்புறம் திரும்பி சார்ஜா மாடி வழியாக சரபோஜி மன்னர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எதிரில் இருந்த நந்தவனத்திற்குள் புகுந்தார். புகையாகி மறைந்தார். சரபோஜி திடுக்கிட்டு எழுந்தார். தான் கோயில் கட்ட இடம் பார்த்துக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. தன்னிடம் சிவலிங்கத்தை காசியில் மணிகர்ணிகா படித்துறையில் கொடுத்தது, இங்கே வந்து கைதட்டி அழைத்து நந்தவனத்திற்குள் சென்று மறைந்தது எல்லாம் காசியின் கதாநாயகன் விஸ்வநாதன் என்பதும், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய இடம் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததும் அவர்தான் எனவும் உணர்ந்தார்.
மணிகர்ணிகேஸ்வரர்
தஞ்சாவூர் கீழராஜ வீதியில், கீழ்புறத்தில் விமானத்துடன் கூடிய ஆலயம் அமைத்து காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார் மன்னர். மணிகர்ணிகா படித்துறையில் இருந்து வந்து தஞ்சையில் அமர்ந்ததால் ஈசனும் மணிகர்ணிகேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அம்பாளாக மங்களாம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் பக்தர்கள் வீட்டில் தர்ப்பணம் போன்றவற்றை முடித்துவிட்டு பிறகு வழிபடும் வழக்கம் உள்ள இத்திருக்கோயிலில் சிவராத்திரி,பிரதோஷம், அன்னாபிஷேகம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பித்ரு தோஷம் நீங்கும்
பித்ரு தோஷம் உள்ளவர்கள் உத்தராயண தை அமாவாசையிலும் தட்சணாயண ஆடி அமாவாசையிலும் இத்திருக்கோயிலில் எள் தீபம் ஏற்றிவழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். அமாவாசை அன்று அனைத்து ஆன்மாக்களும் மணிகர்ணிகேஸ்வரரை வழிபடுகின்றன என்ற கருத்தும் உண்டு.
சங்க காலத்தில் இருந்து தமிழகத்தில் பின்பற்றப்படும் மூத்தோர் அல்லது தென்புலத்தார் வழிபாடு செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்ட மாத நாள் அமாவாசை தினம். அந்நாட்களில் தமது முன்னோர்களை வழிபட்டு செய்ய வேண்டிய அருங்கடனைச் செய்யாதவர்கள் மணிகர்ணிகேஸ்வரர் ஆலயத்திற்காவது சென்று வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மாக்களை மகிழ்வடையச் செய்யலாம்.
தகவலுக்கு: 04362 223384
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.